சினிமா
பேட்டிகள்
Published:Updated:

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா

‘போக்கிரி’ படத்திலெல்லாம், தான் அண்டர்கவர் போலீஸுங்கிறதையே மறந்து ஒரு ரௌடியாவே சுத்திட்டு இருப்பாரு நம்ம விஜய்.

தமிழ் சினிமாவின் கொண்டாட்டமான ஹிட் சினிமாக்களை லாஜிக்கலாகக் கொஞ்சம் பிரித்துக் கலாய்க்கலாம்...

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!
நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

பொதுவா ஷங்கர் படங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட லாஜிக் மீறல்கள் இருக்கும். ஆனால், சுகர் கோட்டிங் கொடுத்து அழகா படத்தைத் தந்திடுவார். ‘ஜென்டில்மேன்’ படத்துல அர்ஜுன் ஏன் கொள்ளைக்காரரா மாறுனாருன்னு நம்ம எல்லோருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் காட்டியிருப்பாங்க. படம்பார்த்த எல்லோரும் அப்போ இட ஒதுக்கீட்டுக்கு எதிரா பேசின அந்தப் படத்தை சில்லறையை வீசி ரசிச்சாங்க. ஆனா, ஒரு முக்கியமான கேரக்டரை மறந்துட்டாங்க. அது நம்ம கவுண்டமணி கேரக்டர்தான். இவருக்கு என்ன மோசமான ஃப்ளாஷ்பேக் இருக்கு? படம்பூரா அர்ஜுன் செய்யுற எல்லா சாகசங்களையும், திருட்டையும் அசால்ட்டா உசிரைப் பணயம் வெச்சு கவுண்டமணியும் கூட நின்னு செய்வார். உதாரணம், அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஃபைட் சீன்ல தப்பிக்கிற ஒண்ணு போதும். எள்ளு வெயிலுக்குக் காயுது... எலிப்புழுக்கை எதுக்குக் காயுது? என்னிக்காச்சும் யோசிச்சிருக்கோமா? இப்பவாச்சும் யோசிங்க மக்கா!

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!
நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!
நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

ஷங்கரின் ‘முதல்வன்’ படத்துல ஒரு சீன்... `குப்பத்துப் பசங்க எங்கள ஈவ் டீசிங் பண்ணுறாங்க சார்’ன்னு ஒரு பொண்ணு கம்ப்ளையின்ட் பண்ணும். யார்ட்டன்னு பார்த்தா, மனீஷா குளிக்கிறத அவருக்குத் தெரியாம வீடியோ எடுத்த அர்ஜுன்கிட்ட. அது தப்பாச்சே சார்னு சொல்றீங்களா? காதல்ல இந்த கில்மா மேட்டர்லாம் சகஜம்னாலும் முன்னனுமதி வாங்காம ஒரு பெண்ணை ஒளிஞ்சி நின்னு வீடியோ எடுக்குறதுக்கு சட்டத்துல என்ன தண்டனை தெரியுமா ஷங்கர் சார்?

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!
நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

சரி, அப்படியே ஹரி படங்களுக்கு வருவோம். ஹரி படத்துல லாஜிக் பார்க்கக்கூடாதுதான். பத்து நிமிஷத்துல மெட்ராஸ்ல இருந்து திண்டுக்கல் சொக்கம்பட்டிக்கு வந்து நின்னுட்டு லாஜிக் சொல்லுவாரு ‘வேல்’ சூர்யா. அதிலயும் மவுன்ட் ரோட்டுல இருந்து சென்னை ஏர்போர்ட் ரெண்டு நிமிஷம்னு கணக்கு சொல்வார். அவர் படத்துல ஃபாஸ்ட் ஃபார்வர்டுல காட்டுனாக்கூட டைம் அதிகமா ஆகுமே ஹரி சார். ரெண்டு நிமிஷத்துல ஏர்போர்ட்டுக்கு எப்படி இந்த டிராஃபிக்ல போக முடியும்னு யாராச்சும் சொல்லுங்க! வில்லன் கலாபவன் மணி ஷாக்கானாரோ இல்லையோ, நான்லாம் அப்டியே ஷாக்காகிட்டேன்!

இந்த ரெண்டு நிமிஷத்துல பறந்து வர்ற வியாதி பத்து நிமிஷமா மாறி ‘தாமிரபரணி’, ‘சிங்கம்’ வரை டைம் மாத்தி டைம் மாத்திக் காட்டுவாரு. ஒண்ணுலகூட கணக்கு சரியா இருக்காது. ‘சிங்கம் 3’ல ஏர்போர்ட் போர்டிங்ல தடுத்ததும், நேரா ஜீப்புல ஃப்ளைட்டு டேக் ஆஃப் ஆகும் இடத்துக்கே போவார் சூர்யா. அவ்வளவு டைம் வெறி!

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!
நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

சரி, விஜய் படங்கள்ல டி.வி-ல நாம அதிகவாட்டி பார்த்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தை எடுத்துக்குவோம். விஜய் இந்தப்படத்துல குட்டிங்கிற பாடகரா வருவார். அவர் குரலுக்கு மயங்கி ருக்குவா வர்ற சிம்ரன் ஈர்ப்பாவாங்க. பின்னாளில் குட்டியால் கண் பார்வை போய், குட்டியால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும். நெஞ்சை ஈரமாக்கும் அளவுக்கு நெகிழ்வான படம்தான். ஆனால், நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ் கொட்டியும் கிடக்கும் பாஸ். பாடகர் குட்டிக்கு ஹரிகரன், உன்னிகிருஷ்ணன் எனப் பல குரலில் பாட்டுப்பாட வைத்திருப்பார் இசையமைப்பாளர். படத்தின் கதையே குரல் வளத்தை விரும்புவதும், அதை வெச்சே க்ளைமாக்ஸ்ல, ‘ஸ்டாப் தி பஸ்! என் குட்டி எங்கே இருக்கே?’ என ருக்கு கண்டுபிடிச்சு உருகுமளவு சீன் வச்சுதுக்காவது ஒரே பாடகரைப் பாட வெச்சிருக்கலாம். அதேபோல சொந்த மாவட்டத்திலே கலெக்டரா போஸ்ட்டிங் போட மாட்டாங்க. அப்படின்னா ருக்கு ஈரோடு, தூத்துக்குடி பக்கத்துல இருந்து சென்னைக்குப் படிக்க வந்தவங்கன்னே வெச்சுக்கலாம். சூர்ய வம்சம் படத்துல சொந்த ஊருக்கே கலெக்டரா வந்த தேவயானிக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்லைப்பா. யப்பா, என்னென்ன கம்பி கட்டற கதைலாம் சொல்றாங்க பாருங்க!

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

‘இணைந்த கைகள்’ அந்தக்காலத்துல அதிரிபுதிரியா ஹிட்டடிச்ச ஆபாவாணன் தயாரிப்புல வந்த படம். இன்டெர்வெல் பிளாக் தான் மரணமாஸ் சீன். அருண் பாண்டியனும் ராம்கியும் ஒகேனக்கல் ஃபால்ஸ் மேல கயிறுல ஒண்ணா தொங்கித் தப்பிக்குற சீனுக்கு அந்தக் காலத்துல சில்லறைய குந்தாங்கூறா சிதறவிட்டோம். ஆனா, என்னிக்காச்சும் யோசிச்சோமா, நட்டநடு ஆத்துக்கு மேல அவங்க ரெண்டு பேரும் அந்தரத்துல தொங்கிக் கைகோத்துக்குவாங்க சரி... அவங்கள யாரு காப்பாத்துவான்னு. அப்படி தொங்குனா கருவாடாத்தான் ஆகணும். ஆனா, அதைப்பத்தியெல்லாம் யோசிக்காம கைதட்டி ‘சின்னதம்பி’ கவுண்டமணி போல சூப்பரப்புன்னு சொல்லியிருப்போம்ல. என்னமோ போங்க மக்களே!

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!
நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

சரி, நாம எல்லோரும் கொண்டாடுன கமல் நடிச்ச ‘பாபநாச’த்துக்கு வருவோம். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 3-ம் தேதியன்னிக்கு மீம் கன்டெண்ட் கொடுக்குற பாபநாசம் சுயம்புலிங்கம், அந்தப் படத்தோட கணக்குப்படி 2014 ஆகஸ்ட் 3-ம் தேதி ஃபேமிலியோட எங்கே போவாரு? ‘அஞ்சான்’ படம் பார்க்கத்தானே! ஆனா, ஆக்சுவலா ஆகஸ்ட் 15-ம் தேதிதான் அந்தப் படம் ரிலீஸானதை த்ரிஷ்யம் டீம் ரீமேக் பண்றப்போ மறந்துட்டாங்க. அதெப்படி திமிங்கிலம், 12 நாளுக்கு முன்னாடியே ‘அஞ்சான்’ படம் தென்காசில ரிலீஸாச்சு? ஐ.ஜி கீதா பிரபாகராச்சும் இதைக் கண்டுபிடிச்சிருக்கலாம்.

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

டி.வி-ல தேய் தேய்னு தேய்க்குற ‘ராஜா ராணி’ படத்துல நயன்தாரா பயன்படுத்துற ஸ்கூட்டிலயும், நஸ்ரியா பயன்படுத்துற ஸ்கூட்டிலயும் ஒரே ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் எப்படி வந்துச்சுன்னு நம்மில் எத்தனை பேர் கண்டுபிடுச்சீங்க..? ஷூட்டிங்ல அசிஸ்டென்ட் டைரக்டர் கடுப்புல ஒரே வண்டிய ஓட்டிட்டு வந்துட்டார்போல. படத்துல ரெண்டு ஹீரோயின் கேரக்டருக்கும் சம்பந்தமில்லைதான். அதுக்காக இதைக்கூட கவனிக்காம விட்டதெல்லாம், `என்ன ரங்கா நியாயமா?’ ரகம். ஒருவேளை நஸ்ரியா பயன்படுத்துன ஸ்கூட்டியை ஓ.எல்.எக்ஸ்ல நயன் வாங்கியிருப்பாங்களோ..?

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

கொஞ்சம் கிளாஸிக் படமான `சின்னதம்பி’ படத்துல பிரபு கொஞ்சம் pro max அப்பாவியாக இருப்பார். எந்த அளவுக்குன்னா, தாலின்னா என்னன்னு தெரியாத அளவுக்கு. காதல், கல்யாணம், தாம்பத்தியம் பத்திலாம் எதுவுமே தெரியாத தாறுமாறா வளர்ந்த குழந்தையா இருப்பார். இந்தக் குழந்தையின் கன்னக்குழிச் சிரிப்புல மயங்கி லவ் பண்ணுவாங்க குஷ்பு. அப்புறம் அவங்க அண்ணன்களுக்குக் கோபம் வந்து அடிதடி வெட்டுக்குத்துன்னு குயிலைப்புடிச்சி கூண்டில் அடைச்சு பாடச் சொல்வாங்கன்னு வைங்க. இதுல தாலி கட்டுன மேட்டர் தெரிஞ்சு நடக்குறதெல்லாம் கொடூர ரகம். ஆனா, அதைவிடுங்க... படம்பூரா குட்டிப்பையனா இருந்த காலத்திலேருந்து பிரபு பாட்டு மட்டும் pro max-ஆ பாடுவாரு... ‘தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே!’ன்னு பயங்கர லிரிக்கலா வேற பாடுவாரு. இம்புட்டு அறிவுள்ளவனுக்குத் தாலின்னா என்னன்னு தெரியாதாக்கும். நான்லாம் அஞ்சாப்பு படிக்கிறப்பவே அடுத்த சீன் என்னனு கத்திச் சொல்லி தியேட்டரையே சிரிக்க வெச்சவன் என்பதைச் சொல்லி அமர்கிறேன்!

நடுவுல கொஞ்சம் லாஜிக்கைக் காணோம்!

விஜய் நடிச்ச ‘கில்லி’ படத்துல எல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாதுதான். ஆனா, படம் பார்க்குறப்போ பிரகாஷ்ராஜோட காதல் விஜய்யின் காதலைவிட ரொம்ப டீப்பா இருக்குறதா எனக்கு மட்டும்தான் தோணுச்சா? கொலை மட்டும் பண்ணலன்னா ஹீரோவா ஆகியிருந்திருப்பாப்புல நம்ம செல்லம். சண்டைக்காட்சில கலங்கரை விளக்கத்துல இருந்து கீழே குதிக்கிறது வரை எல்லாமே காதுல பூதானுங்க..!

‘போக்கிரி’ படத்திலெல்லாம், தான் அண்டர்கவர் போலீஸுங்கிறதையே மறந்து ஒரு ரௌடியாவே சுத்திட்டு இருப்பாரு நம்ம விஜய்.

பாருங்க... நான்கூட சினிமாங்கிறதையே மறந்து லாஜிக்கைத் தேடிட்டு இருக்கேன்.