பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நம்மவீட்டுக் கல்யாணம்

நம்மவீட்டுக் கல்யாணம்
பிரீமியம் ஸ்டோரி
News
நம்மவீட்டுக் கல்யாணம்

நம்ம வீட்டுப் பிள்ளையைக் கிளிப்பிள்ளையா வளர்த்து, கீரிப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதுதானே தமிழ் சினிமா வழக்கம்.

துளசி... யெஸ் துளசி. துளசியைப் பார்த்தது தப்பு. பேசினது தப்பு. கூட டிக்டாக் பண்ணது தப்பு. அதைவிடப் பெரிய தப்பு, துளசி, அஸ்வகந்தா, அதிமதுரம்லாம் சேர்ந்த டீயைக் குடிச்சது. காலையில் இருந்து நிக்காமல் போயிட்டிருக்கு. யெஸ்... வாய்ஸ் ஓவரும்தான். நான் அரும்பொன். என்னை அரும்பொன்னு கூப்பிடுவாங்க. ஏன்னா, என் பெயர் அதுதான். என் தங்கைக்குக் கல்யாணம். அதான், பத்திரிகை கொடுக்க சின்ன டிராவல் போலாம்னு இருக்கேன். முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில், பின்னில் சில பத்திரிகைகள் மஞ்சப்பையில். வாழ்வில் ஒரு பயணம். இது முடிந்திட விடுவேனா...

நம்மவீட்டுக் கல்யாணம்
நம்மவீட்டுக் கல்யாணம்

நம்ம வீட்டுப் பிள்ளையைக் கிளிப்பிள்ளையா வளர்த்து, கீரிப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதுதானே தமிழ் சினிமா வழக்கம். நானும் ஒரு தமிழ் சினிமா ஹீரோங்கிறதால, அதைத்தான் பண்ணப்போறேன். வடக்கூரான் மகன்தான் மாப்பிள்ளை. ஒரு ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே, கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ. என் கண்ணே பட்டுடக்கூடாது. கிளம்பிட்டேன் அதான், ஒரு லாங் டிரைவ். லே-லடாக், குலுமணாலி பக்கமா! சொந்தக்காரங்க யாரும் தமிழ்நாட்டைத் தாண்டி இல்லை. இருந்தாலும் நான் ஒரு தமிழ் சினிமா ஹீரோங்கிறதால மறுவார்த்தை பேசாமல் இதைச் செய்ய வேண்டி இருக்கு. இப்போ பெட்ரோல் பங்க்ல ஜீரோ பார்த்துட்டு இருக்கேன். என் பின்னாடி இரண்டு பேர் என்னை மாதிரியே நின்னுட்டிருக்காங்க. ஒருத்தன் தேவ், இன்னொருத்தன் இஸ்பேட் ராஜா. தேவ், டோரா பொம்மையோட இமயமலைக்கு டபுள்ஸ் போயிட்டிருக்கார். இஸ்பேட் ராஜாவுக்கு என்ன பிரச்னைன்னு தெரியலை, டீசல் ஊத்தினா பைக் ஓடாதான்னு பங்க்காரன் கிட்டே சண்டை பண்ணிட்டு இருக்கான். என் பெரியப்பா ஞாபகம் வருது!

பெரியப்பா... மை டியர் பெரியப்பா. பேட்ட வேலன் பெரியப்பா. என் பைக் ஹேண்டில்பாரைப் பார்க்கும்போது, உங்க கம்பீரமான மீசைதான் ஞாபகத்துக்கு வருது. நீங்க வார்டனா இருக்குற காலேஜ் பக்கம் இண்டிகேட்டர் போட்டேன். எங்கே இருக்கீங்க பெரியப்பா? தேடிட்டிருக்கேன் நான். `பேட்ட எங்கே’ன்னு காலேஜ்ல கேட்டா, `குரோம்பேட்டையா, ராணிப்பேட்டையா’ன்னு கலாய்க்குறானுங்க. காளின்னு பெயரை மாத்திட்டீங்களாமே. `காளி எங்கே’ன்னு கேட்டால், `தக்காளியா’ன்னு கண்டிப்பா கலாய்ப்பானுங்க. தாங்கமுடியாது பெரியப்பா. இதோ உங்களைப் பார்த்துட்டேன். சேர்ல மல்லாக்கப் படுத்து, `பாசமலர்’ பாட்டு கேட்டுகிட்டு இருக்குறது நீங்கதானே. எனக்கு கிடார் வாசிக்கணும் போல இருக்கு. அந்த அழகான நாள்கள் மறுபடியும் ஞாபகத்துக்கு வருது பெரிய டாடி.

நம்மவீட்டுக் கல்யாணம்
நம்மவீட்டுக் கல்யாணம்

என் அண்ணன்தான் பாவம், உன் மோதிரக்கையால அடிவாங்கி கோமாவுக்குப் போயிட்டான். இன்னும் 90’ஸ் குழந்தையாவே வாழ்ந்துட்டு இருக்கான் அவன். சின்னி ஜெயந்துக்கு ரசிகர் மன்றம் திறக்கப்போறேன்னு காசு வசூல் பண்ணிட்டு இருக்கான். நீதான் பெரியப்பா எல்லாத்துக்கும் காரணம். உன்கூட பேசக்கூடாது, உன்னைப் பார்க்கக் கூடாது, பீட்சா கோக் புழங்கக்கூடாதுன்னுதான் இருந்தேன். சொந்தம் மாதிரி யாராலேயும் கஷ்டப்படுத்தவும் முடியாது. சொந்தம் மாதிரி யாராலேயும் சந்தோஷப்படுத்தவும் முடியாது. கண் கலங்கிட்டிருக்கேன் நான். இப்போ இரண்டு நிமிஷத்துல என்னைத் திரும்பிப் பார்ப்பீங்கன்னு மூணு நிமிஷம் முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். யெஸ். நீங்க பார்த்துட்டீங்க! `ஹாஹா... அரும்பொன்’னு என்னைக் கட்டிப்பிடிக்குறீங்க. லவ் யூ பெரியப்பா. `துளசிக்குக் கல்யாணம். கண்டிப்பா வந்துடுங்க’ன்னு பத்திரிகையை நீட்டுறேன். `கண்டிப்பாடா, அப்படியே நீயும் வந்துடு’ன்னு பதில் பத்திரிகையை நீட்டுறீங்க. என்னையும் கோமால தள்ளிடாதீங்க பெரியப்பா.

நிகழும் மங்களகரமான வருடம், மங்களத்துக்கும் எனக்கும் திருமணம்னு ஏதோ சொல்றீங்க. பத்திரிகை வைக்கிறதுல உங்களுக்குத்தான் முதல் மரியாதைன்னு வந்தா, நீங்க இங்கே `முதல் மரியாதை’ படமே ஓட்டிட்டு இருக் கீங்களே. யாரு பெரியப்பா அந்த மங்களம்? அனுவுடைய அம்மாவா! அனு யாரு? அன்வ ருடைய காதலியா! அன்வர் யாரு? மாலிக் பையனா! மாலிக் யாரு? உங்களுக்குத் தம்பி முறையா! அப்படின்னா, மங்களம் உங்களுக்குத் தங்கச்சி முறைதானே வருவாங்க! எனக்குத் தலை சுத்துது பெரியப்பா. நான் உங்களைப் பார்க்கவந்தது தப்புதான். இதோ போறேன், ராயப்பன் சித்தப்பா கிட்டே.

மைக்கேல் அண்ணன். நான் பாக்ஸர் மாதிரி, அவன் ஃபுட்பால் ப்ளேயர். அவனை மைக்கேல்னு சொல்றதைவிட, பிகில்னு சொன்னால், அதுவும் உன் பெயர் என்னன்னு கேட்கும்போது பிகில்னு சொன்னா... எக்ஸ்ட்ரா மூணு செகண்ட் ஊதிப்பார்ப்பாங்க. ஸாரி... உத்துப்பார்ப்பாங்க. அண்ணன்தான் இப்போ சித்தப்பாவைப் பார்த்துக்கிறான். ராயப்பன் சித்தப்பா. என் வண்டிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அவர் குரல்தான் நியாபகத்துக்கு வருது. கப் முக்கியம் பிகிலு, கப் முக்கியம் பிகிலுன்னு மைக்கேல் அண்ணன் கிட்டே கரகரன்னு கத்திட்டே இருப்பார். கடைசியில, கப்பை அப்புறம் கொடு. அதுவரைக்கும் எனக்கு கம்பெனி குடுன்னு மைக்கேல் அண்ணன் அண்ணியோட கிளம்பிட்டான். அப்போ, மனசு உடைஞ்சவர் தான். மனசு சரியில்லைன்னா, ரைடு போங்க சித்தப்பான்னு சொன்னேன். ரைடு போகக் காசு இல்லாமத்தான் மனசு சரியில்லைன்னு சொன்னார் அவர்.

பெரியப்பாவுக்கு `பாசமலர்’ மாதிரி, சித்தப்பாவுக்கு `என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே...’ பாட்டு. அதை வெச்சிதான் கண்டுபிடிச்சேன். நீ இங்கேதான் எங்கேயோ இருக்க. கடலுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்க சித்தப்பா? நண்டு வறுத்துத் தின்னுட்டு இருக்கியா? நான் மனசுல நினைச்சது உனக்குக் கேட்ருச்சுன்னு நினைக் கிறேன். `படக்’னு என்னைத் திரும்பிப் பார்த்துட்ட. “டேய், அரும்பொன்னூ...”ன்னு ஆசையா ஓடி வர்ற சித்தப்பா நீ, மைக்கேல் அண்ணன் உன்னைக் காப்பாத்த வர்றேன்னு மூணு மீட்டரை முப்பது நிமிஷமா ஓடிட்டு இருந்தாரே, அதைவிட வேகமாத்தான் சித்தப்பா ஓடிவர்றே. மூச்சிறைக்குது உனக்கு, இந்தா தண்ணி குடி. ஓடி வரும் போதுதான் பார்த்தேன், கால் ஒரு பக்கம் லைட்டா வாங்குதே ஏன் சித்தப்பா? அண்ணன்தான் உருட்டுக் கட்டையால வெளுத்து விட்ருச்சா? அதிர்ச்சியா இருக்கு சித்தப்பா.

அழாத சித்தப்பா. அண்ணன் ஏன் உன்னை அடிச்சது? மைக்கேல் அண்ணன் டீம் ஃபைனல்ஸ்ல ஜெயிச்சு வாங்கின கப்ல சரக்கு ஊத்தி அடிச்சியா? அதைத்தான் இவ்ளோ நாள் கப் முக்கியம் பிகிலு, கப் முக்கியம் பிகிலுன்னு கத்திக்கிட்டே இருந்தியா? அண்ணன் உன்னை அடிச்சது தப்பே இல்லை சித்தப்பா. என்னை சமாதானம் செய்ய, `டேய், கட்டிப்பிடிடா...’ன்னு சொல்ற. சரி, கல்யாணத்துக்கு அண்ணனைக் கூப்பிட்டு வந்துடு. என்னாது வான்கோழி பிரியாணி வேணுமா? தீக்கோழி பிரியாணியே போடுறேன் சித்தப்பா! என்ன சொல்ற சித்தப்பா? `கப் முக்கியம் அரும்பொன்னே’வா! திருந்தவே மாட்ட சித்தப்பா நீ.

அடுத்து தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி. அங்கேதான் இருக்கார் தூக்குதுரை மாமா. என் வண்டியை எங்கேயாவது நடுரோட்ல நிப்பாட்டினா, மாமா ஞாபகம்தான் வரும். மாமா அப்படித்தான்! ஆக்‌ஷன் சீன் வந்துடுச்சுன்னா, ரோட்ல நிக்குற வண்டி எவன் வண்டின்னு பார்க்காம எடுத்துட்டுப் போயிடுவார். மாமா எடுக்கணும்னே சாவியோட நிப்பாட்டிட்டுப் போவானுங்க போல. அந்த இலுமினாட்டிங்களைத்தான் தேடிட்டிருக்கேன். தேனி வந்துட்டேன். எங்கேன்னு போய் அவரைத் தேடுறது. டீ குடிச்சு குடிச்சுதான் அவருக்கு முடி நரைச்சதுன்னு `வீரம்’ டீக்கடை பாய் சொல்லியிருக்கார். கண்டிப்பா, இங்கே ஏதாவது பாய் டீக்கடையிலதான் மாமா இருக்கணும்.

நம்மவீட்டுக் கல்யாணம்
நம்மவீட்டுக் கல்யாணம்

இதோ இருக்கே, சுலைமான் டீக்கடை. கண்டிப்பா இங்கேதான் இருப்பார். தூக்குதுரை மாமா, நினைச்ச மாதிரியே உள்ளதான் இருக்கீங்க! என்னைப் பார்த்ததும் `சுலைமான், மாப்ளைக்கு ஒரு ராகிமால்ட்’னு பாசமா ஆர்டர் பண்றீங்க. லவ் யூ மாமா! இதே லவ்வோட, துளசி கல்யாணத்துக்கும் வந்துடணும்னு பத்திரிகையை நீட்டுறேன். பத்திரிகையை வாங்கிட்டு பரணை எதுக்கு மாமா, வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க? ஓ ஃபீலிங்ஸா?! இப்படி ஒரு பத்திரிகை வைக்குற சம்பவத்துலதான் அத்தைகூட மறுபடியும் சேர்ந்தீங்க. இப்போ மறுபடியும் எதுக்கு மாமா, செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிக்குறீங்க? குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வந்துடுங்க மாமா.

யெஸ்... இன்னைக்குத்தான் கல்யாணம். முதலமைச்சர் நந்த கோபாலன் குமரன் தலைமை யில்தான் கல்யாணம் நடக்கப் போகுது. கல்யாண மண்டபம் முழுக்க சிவப்பு, பச்சை லைட் எஃபெக்ட் இருக்கணும்னு அடம் பிடிக்கிறார் அவர். ஏதோ, காட்சி மொழி, குறியீடாம்! எதிர்க்கட்சித் தலைவர் லால்குடி கருப்பையா காந்தியும் கல்யாணத்துக்கு வரப்போறார். காமாட்சி கேட்ட ரிங்ல பிரியாணி சொல்லியாச்சு. ராட்சசி டீச்சர், அடுத்த சாட்டை புரொஃபஸர்னு பெரிய மனுஷங்களாம் வந்துட்டிருக்காங்க. `திருமணம் திராபையானது’ன்னு பந்தியில உட்கார்ந்து பத்தி எழுதிட்டிருக்கார் `பேரன்பு’ அமுதவன். மண்டபம் வாசல்ல ஒத்த ஒத்த செருப்பா திருட்டுப் போயிட்டிருக்காம். அந்தப் பிரச்னை வேற. இதோ வந்துடுச்சு, அடுத்த பிரச்னை! மணமேடையில் இருந்து ஒரே புகைமூட்டமா கிளம்புது. மை காட், அக்னி குண்டம் வெடிக்குது. வடக்கூரான் மேல இருக்குற கடுப்புல, செலம்பரம்தான் உருண்டையை உருட்டி குண்டத்துக்குள்ளே வெச்சிருப்பான். ஏலேய் செலம்பரம், இந்தா வரேன்டா...