சினிமா
Published:Updated:

இதுக்குப் பேர்தானா லவ் டார்ச்சர்?

இதுக்குப் பேர்தானா லவ் டார்ச்சர்?
பிரீமியம் ஸ்டோரி
News
இதுக்குப் பேர்தானா லவ் டார்ச்சர்?

தன்னாலதான் கண் பார்வை போயிடுச்சுன்னு குட்டி தன் வீட்டுக்கே கூட்டிட்டு வந்து அப்படி பார்த்துக்குவாரு.

‘காதல் ஒரு கிரிஞ்ச் ஃபீலிங்’ என்பது, ஹிட்டடித்த பல தமிழ் சினிமா காதல்களை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தபோது புரிந்தது. வாங்க, காதலர் தின ஸ்பெஷலில் நாம சில ‘சினிமா லவ்’ ஃபர்னிச்சர்களை உடைக்கலாம்..!

மூன்றாம் பிறை

செம படம்தான். ஆனா, க்ளைமாக்ஸ்ல கமல் குண்டுச்சட்டியெல்லாம் கவுத்தாம சும்மா நார்மலா வந்து, ‘‘விஜி... இதுதான் நான் உங்களுக்கு வெச்ச பேரு... என் வீட்டுலதான் புத்தி சுவாதீனம் இல்லாம இம்புட்டுநாள் இருந்தீங்க. ஏதோ Retrograde amnesia-வாம்... இதுக்குப்பிறகு இதை வெச்சே நாலஞ்சு தமிழ் சினிமா வருமாம். பாருங்க... சொல்ல மறந்துட்டேன்... டார்வின் ஸ்டூடியோவுக்குப் போயி சுப்பிரமணி நாய்க்குட்டியோட நாம எடுத்த போட்டோ இது... அப்போ குழந்தையாட்டம் பிஹேவ் பண்ணுவீங்க. இப்ப சினிமா ஹீரோயின் ஸ்ரீதேவி மாதிரி கியூட்டா ஆகிட்டீங்க!’’ - இப்படி செல்ஃப் இன்ட்ரோ கொடுத்துட்டே ஸ்டைலா சின்ன போட்டோவை பர்ஸ்ல வச்சிருந்து எடுத்துக் காட்டியிருக்கலாமே!

இதுக்குப் பேர்தானா லவ் டார்ச்சர்?

எதுக்கு சாமி அவ்ளோ பில்டப் பண்ணி ‘ஆடுறா ராமா ஆடுறா ராமா’ன்னு பெர்ஃபாமென்ஸ் பண்ணி, கம்பில முட்டி விழுந்து அடிபட்டு... போங்கு கிச்சான்பா நீயி! இல்லைன்னா, போலீஸ் ஸ்டேஷன்ல போய் அந்தப் பொண்ணு வீட்டு அட்ரஸ் வாங்கிட்டு சாவகாசமா கேஷுவல் லீவுல சென்னைக்குப் போயி நீங்க யாருன்னு சொல்லியிருக்கலாமே. ‘சின்னப்புள்ளத்தனம் எதுக்கு சீனு’ன்னு கேட்க வேண்டியிருக்கு.

புன்னகை மன்னன்

‘ஒன்... டூ... த்ரீ...’ - காதலியின் கையைப் பிடிச்சிக்கிட்டு நடுங்கும் குரலில் கவுன்ட் டவுன் சொல்லிட்டு அதிரப்பள்ளி ஃபால்ஸ் உச்சியில நின்னு குதிக்கிற நம்ம கமல் மட்டும் எப்படி தப்பிச்சாரு?

‘கடைசியா ஒரு செல்ஃபி எடுத்துக்குவோமா பேபி’ன்னு கேட்குற இந்தக் காலத்துக் காதல் போல அப்போ ‘கடைசியா உன் சிரிப்பைப் பார்க்கணும்’னு கமல்கிட்ட ரேகா கோரிக்கை வைக்க... கமல் சிரிப்பாரே பார்க்கணும். ஐயோ... பயங்கரம்!

‘அடியே நான் பாட்டுக்கு சும்மா செவனேன்னு கிடந்தேன். இப்படி நம்பர் சொல்லிக் குதிக்கிற அளவுக்கு காதல் பண்ணி என் வாழ்க்கைய நாசம் பண்ணி இங்கே கொண்டுவந்து விட்டுட்டியேடி!’ங்கிற மாதிரியே இருக்கும். இதுல கல்வெட்டுலாம் எழுதி வைச்சு வீட்டுக்கும் நாட்டுக்கும் மெசேஜ் சொல்வாங்க.

குஷி

க்ளைமாக்ஸ் ரயிலை மிஸ் பண்ணி நம்ம ஹார்ட் பீட்டை எகிற வைக்கிற ‘இதயம்’ படத்தையே பார்த்த வய்ங்க நாம... சென்ட்ரல் ஸ்டேஷன்- எக்மோர் ஸ்டேஷன், விஜய்யும் ஜோவும் மாத்தி மாத்தி ஸ்டேஷனுக்குப் போயிட்டு, ‘இவய்ங்க சேருவாய்ங்களா மாட்டாய்ங்களா’ன்னு நம்ம பி.பியை எகிற வைக்குறாங் களாம். அடேய்... படத்தோட ஓப்பனிங்லயே ரெண்டு குழந்தைங்களோட விரல்களை டச் பண்ண விட்டு, ‘இவய்ங்கதான் ஜீவா-ஜெனி... எப்படி சேரப் போறாய்ங்கன்னு பாருங்க’ன்னு மொத்த க்ளைமாக்ஸையே சொல்லிட்டீங்களேய்யா! ஆமா, எக்மோரும் சென்ட்ரலும் 100 கி.மீ தூரத்துலயா இருக்கு? ஏன்யா இம்புட்டு பில்டப்பு? இதுக்கா சில்லறைய செதற விட்டோம்? போங்கப்பு!

இதுக்குப் பேர்தானா லவ் டார்ச்சர்?

காதல் கோட்டை

‘மாஸ்டர்’ படத்துல லாஜிக்கா ஒரு கேள்வி கேட்பாரு விஜய். அதேதான் நானும் கேக்குறேன். ராஜஸ்தான்ல வேலை பார்க்குற சூர்யாவுக்கு ஊட்டியில இருந்து ஏன் கமலி ஸ்வெட்டர் அனுப்புது?

அப்புறம் அந்தப்படத்துல வர்ற எல்லா கேரக்டர்களும் சொலசொலனு பேசிட்டே இருப்பாங்க. ஹீரோயினோட ஃப்ரெண்ட் கோயிலுக்குள்ள போகாம இருக்குறதுக்கு ஒரு தத்துவம் சொல்லும். அஜீத் ஃப்ரெண்டா வர்ற கரண், காதலுக்கும் காமத்துக்கும் ஒரு தத்துவம் சொல்வாரு. அஜீத்தோட பாஸ் ஹீரா இன்னொருபக்கம் குந்தாங்கூறா காதல் தத்துவமா எடுத்துவிடுவாங்க. ஆட்டோ ஓட்டுற தலைவாசல் விஜய் வேற.

இதையெல்லாம் கேட்குறதுக்கு நடுவுல லவ்வர்ஸ் ரெண்டு பேரும் ரெண்டு லைன் பேசி போன் லைன் கட் ஆகி... எவ்வளவு சோதனைகள். ஸ்... யப்பா..!

இந்த மில்லினியல்ஸ் இருக்கானுங்களே... இந்தப் படத்தை கே டி.வி.ல பார்த்துட்டு, ‘கியா ரே வாட்ஸ் அப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் இல்லாத ஒரு காலமா’ன்னு சிரிக்கிறாங்க. ‘காதல் கோட்டை’யை தியேட்டர்ல பார்த்த தலைமுறைன்னு என்னைச் சொன்னா, மணிவண்ணன் அந்தப் படத்துல சொல்ற ‘வயசாகிடுச்சே கலியபெருமாள்!’ டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது!

துள்ளாத மனமும் துள்ளும்

படமே ‘கிரிஞ்சி’தான். பாட்டுப் பாடியே ருக்குவைக் காதலிக்குற குட்டிக்கு பல குரல்ல பாடுற திறமை இருக்கறது, படத்தோட ஆடியோ ஆல்பத்தைக் கேட்டாலே தெரியும்.அதெல்லாம்கூட தனித்திறமைன்னு மன்னிச்சிடலாம். ஆனா, காதலுக்காக அம்மாவோட சாவுக்குக்கூட போகாம காதலி கண் ஆபரேஷனுக்குப் போவாரு பாருங்க ஹீரோ குட்டி... யூ நாட்டி!

தன்னாலதான் கண் பார்வை போயிடுச்சுன்னு குட்டி தன் வீட்டுக்கே கூட்டிட்டு வந்து அப்படி பார்த்துக்குவாரு. இப்படி பார்த்துக்குற தெல்லாம்கூட நல்ல மனசுதான். பணத்தை மணியார்டர் பண்ணிட்டு திரும்ப மணியார்டருக்காகக் காத்திருப்பதெல்லாம் வேற வேற ரகம். ஆனா ஏன் அம்புட்டு நல்லவரா இருக்காருன்னுதான் தெரியல. க்ளைமாக்ஸ்ல ருக்கு அந்த ஊருக்கே கலெக்டரா வர்றதுலாம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்லயே நடக்காத விஷயம்.

காதலிக்காக கிட்னியை வித்து ( ஒரு படத்துல நாக்கையே அறுத்துப்பாரு ஒருத்தர்), புனே ஜெயிலுக்குப் போயி, அடிபட்டு மிதிபட்டு விடுதலையாவாரு குட்டி. இம்புட்டு பட்டும் திருந்துவார்னு நினைக்கிறீங்க?

நேரா ருக்குவைத் தேடி கலெக்டர் ஆபீஸ் வாசல்ல போய் நிப்பாரு. ‘ருக்கு ருக்கு’னு சொல்றாரே தவிர, பேச்சே வராம வெறும் காத்துதான் வருது குட்டிக்கு. அப்புறமென்ன? வாயை உடைச்சு ஜீப்புல போட்டு அனுப்பி வெச்சிருவாங்க ருக்கு. ‘இன்னிசை பாடி வரும்’கிற ஒரு பாட்டு வர்ற பஸ்ஸைப் பார்த்து, ருக்கு துரத்திட்டு ஓடி, பஸ்ஸை நிறுத்தி, ‘இங்கே யாரு குட்டி... யாரு குட்டி?’ன்னு கேட்பாங்க.தியேட்டர்ல எவனோ ஒரு அகம்பிடிச்ச கழுதை, ‘நீதான் குட்டி’ன்னு சிம்ரனைப் பார்த்து சத்தமா சொன்னான். அப்பவே காமெடி பண்ணிட்டதால இப்பல்லாம் ‘என்ன ஒரு ஆனந்தம் இந்த குட்டிக்கு?’ன்னு மொத்தப் படம் பார்க்குறப்பவும் கேட்கத் தோணுது பாஸு!