சினிமா
தொடர்கள்
Published:Updated:

எத்தனை வருஷமா ஏமாத்திட்டாங்கய்யா!

எத்தனை வருஷமா ஏமாத்திட்டாங்கய்யா!
பிரீமியம் ஸ்டோரி
News
எத்தனை வருஷமா ஏமாத்திட்டாங்கய்யா!

நம்ம கேப்டன் நடிச்ச ‘சேதுபதி ஐ.பி.எஸ்’ உள்ளிட்ட பல படங்கள்ல சென்னையோட பாதாளச் சாக்கடைகளும் ஒரு ரோல் பண்ணியிருக்கும்.

`சுகோய் விமானத்தை ஸ்கார்ப்பியன் ஹெல்மெட் போடாம ஓட்ட முடியாது. ஜெட் விமானத்தை நினைச்ச இடத்துல லேண்டிங், டேக்-ஆஃப்லாம் பண்ண முடியாது!' - இப்படி ஆரம்பித்து வகைதொகையில்லாம ‘பீஸ்ட்’ படத்தை டெக்னிக்கலா வெச்சு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க நெட்டிசன்ஸ். எனக்கு என்ன சந்தேகம்னா, ஆண்டாண்டுக் காலமா எத்தனையோ ஹிட் படங்கள்ல இதைவிட நம்ம காதுல பூவைத்தான சுத்தியிருக்காங்க நம்ம சினிமாக்காரங்க. அப்போல்லாம் நம்புனோம்தானேப்பான்னு சில சீன்களைக் கிளறிப்பார்த்தேன். அப்டியே ஷாக்காய்ட்டேன்!

* முதல்ல நம்ம வாத்தியார் எம்.ஜி.ஆர்... ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துல தென்கிழக்கு ஆசிய நாடுகள்ல சுற்றிட்டு நம்மளை உலகம் பூரா சுத்தினதா நம்ப வெச்சாரா இல்லையா...சரி அதுக்காக `தென்கிழக்கு ஆசிய நாடுகள் சுற்றிய வாலிபன்'னா வைக்க முடியும்னு நீங்க கேட்குறது லாஜிக்தான். ஆனா, அந்தப் படத்துல விஞ்ஞானி முருகன் இடி-மின்னலிலிருந்து புதுவித ஆற்றலைக் கண்டுபிடிப்பார். ஒரு இண்டோர்ல மின்னலைப் பிடித்து, பத்து லட்சத்தில் ஒரு பங்கை ஒரு கேப்சூலில் அடைத்து வைத்துக் காட்டுவார். பார்க்க பி.காம்ப்ளக்ஸ் மாத்திரை போலவே இருக்கும் அது. தட் இடியவே இடிக்கப் பார்த்த மாதிரி வாத்தியார் இதுல இடிச்சிருக்கார். அதைப் பார்த்து அந்தப் படத்தில் விஞ்ஞானிகளே வாயைப் பிளந்து ‘வொண்டர்ஃபுல், பியூட்டிஃபுல், மார்வெலஸ்'னு சொல்லுவாங்க. சிலிர்த்துப்போய் தியேட்டர்ல சில்லறையைச் சிதறவிட்டவங்கதான் நாம.

எத்தனை வருஷமா ஏமாத்திட்டாங்கய்யா!

* வாத்தியாருக்கு இந்தப் படம்னா சூப்பர் ஸ்டாருக்கு பாட்ஷாதானே... `பாட்ஷா’ படத்துல மார்க் ஆண்டனி குண்டு வெக்குறதை ரகசியமா பாட்ஷா டீம் போட்டோ எடுத்து நியூஸ் பேப்பர்ல கொடுத்திருப்பாங்க. ஆனா அந்த நியூஸ் பேப்பரை அடுத்த நாள் போலீஸ் கிட்ட காமிக்குறதே பாட்ஷா டீம்தான்... அந்த அளவுக்கு தத்தியா இருக்கு போலீஸ் டீம், காலையில் வர்ற பேப்பர் கூட படிக்காம! அந்தப் படத்துல ஜீப்ல லேண்ட்லைன் போன் வச்சிருப்பாங்க. அதுக்கு இதெல்லாம் பரவாயில்லைன்னு தோணும்.

‘அண்ணாமலை’ படத்துல சவால் விட்டு ஒரே பாட்டுல பெரிய தொழிலதிபர் ஆவாரு ரஜினி. சரி சவால்தானேன்னு சாய்ஸ்ல விட்டுட்டு சண்டைக்காட்சிகளைப் போட்டுப் பார்த்தா, ரகம் ரகமா பூச்சுத்தியிருக்காரு. இங்கே வைக்கிற தீ 100 மீட்டர் நூல் பிடிச்சுப் போய் காரோட வெடிக்கும்.

என்னதான் `அபுஹாய் அபுஹாய்'னு பறந்து பறந்து சண்டை போட்டாலும் ‘மனிதன்’ படத்துல வர்ற தாய்ப்பாலைக் கக்க வெச்ச அடியை எல்லாம் மன்னிக்கவே முடியாதுப்பா!

* நம்ம கேப்டன் நடிச்ச ‘சேதுபதி ஐ.பி.எஸ்’ உள்ளிட்ட பல படங்கள்ல சென்னையோட பாதாளச் சாக்கடைகளும் ஒரு ரோல் பண்ணியிருக்கும். சுரங்கப் பாதைலாம் போட்டு உள்ளே வாக்கிங் போக பிளாட்பாரம் வெச்சு, நல்ல லைட்டிங்லாம் செட் பண்ணிப் பார்க்கவே, ‘ட்ரெயினேஜ் டூரிஸம்'னு ஒரு கான்செப்ட்டை உருவாக்கி அந்நியச்செலாவணிக்கு உகந்ததா மாத்திடலாம். அவ்ளோ ரம்மியமா இருக்கும். கேப்டனும் அதுவழியாப் போய் தீவிரவாதிகளைப் பிடிச்சி வெச்சிருக்குற ஸ்கூலையும் பசங்களையும் மீட்பார். ஆனா, நிஜத்துல நான் சென்னைவாசியா மாறினபிறகுதான் தெரிஞ்சது பாதாளச் சாக்கடைலாம் மரணக்குழின்னு!

ஒருபடி மேலே போய் `மன்மதன்' படத்துலலாம் பாதாளச்சாக்கடைக்குள்ள இறங்கி உள்ளேயே கொலையும் குடித்தனமுமா வாழ்ந்துட்டு இருப்பார் சிம்பு. ‘கிச்சான்னாலே ஏமாளிதானே’ன்னு சொல்றமாதிரி எம்புட்டு ஏமாளியா இருந்திருக்கோம் பாருங்க நாம!

* `கரகாட்டக்காரன்' படத்தைச் சின்ன வயசுல பார்த்தப்போ பூ மிதிக்கும் திருவிழான்னு ஒண்ணைக் காட்டுவாங்க. ராமராஜனும் கனகாவும் க்ளைமாக்ஸ்ல `மாரியம்மா மாரியம்மா'ன்னு பாட்டுப்பாடிட்டே ஒவ்வொரு ஸ்டெப்பா பூவுக்கு வலிச்சிடுங்கிற மாதிரி மெதுவா தீக்கங்குல இறங்கி நடந்து வருவாங்க. ஆனா, நண்பர்களே நிஜத்துல என்ன நடந்துச்சுனா... இதுநாள்வரை எத்தனையோ கோயில் பூமிதிக்கும் திருவிழாக்களுக்குப் போயிருக்கேன். ஒரு இடத்துலகூட மக்கள் இப்படி ஸ்டெப் வெச்சு நின்னு நிதானமா நடந்து போனதில்லை. வேகமா ஓடலைனா அசம்பாவிதம் நடந்துடும்னு அவங்களுக்கும் தெரியும். பார்க்குற நமக்கும் தெரியும். ஆனா, ஏன் ஸ்க்ரீன்ல இப்படில்லாம் காட்டி ஏமாத்துனாங்கன்னுதான் தெரியல. நம்ம கவுண்டமணிகூட பூ மிதிக்கிற நோம்பின்னு நம்பிப்போயி, `ஆ... நெருப்புடோய்!'னு அலறியடிச்சு சூரியன் படத்துல ஓடுவாரு. அதான் அவர் லெஜண்ட்!

* நாயகன் படத்துல வேலுநாயக்கரைப் பார்த்து அவரோட பேரன், `நீங்க நல்லவரா கெட்டவரா'ன்னு கேட்பான். மேட்டர் அது இல்லை... ஹை கோர்ட்னு அவங்க காட்டுன இடம் நாம கவுன்சிலிங்குக்குப் போய் பல்லாங்குழி ஆடுன அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ். நூறு படத்திலயாவது அதை கோர்ட்னு காட்டியிருப்பாங்க. நாம என்ன கேள்வியா கேட்டுச் சிரிச்சு வெச்சோம்? நம்பத்தானே செஞ்சோம்.

* `ஜென்டில்மேன்' படத்துல ஜீப்புங்க குறுக்கும் நெடுக்குமா ரயிலைத்தாண்டிப் பறக்கும். அதைக்கூட, `நல்லா வித்தை காட்டுறே மேன்!'னு மன்னிச்சு நியூட்டனின் மூன்றாம் விதியை மறந்து ரசிச்சுக்கலாம். ஆனா, பிரின்ஸ் பிளாஸால பாதாளச் சாக்கடைல இறங்கின அர்ஜுனும் கவுண்டமணியும், அப்படியே தம் கட்டி மெரினா பீச்ல எந்திரிச்சு வர்றதைலாம் நம்பத்தானே செஞ்சோம்.

இதுல கொள்ளையடிச்ச நகையை திரிசூல மலைல போயி ஒரு வீட்டுக்குள்ள ஒளிச்சு வைப்பாங்களாம். சின்னதா ஒரு சுவர் கிடைச்சாலே, `லவ் யூ'ன்னு ஹார்ட்டின் விடுற விடலைப் பசங்க அலையுற ஊருய்யா இது. இப்படியொரு லோன்லி இடத்தை விட்டு வைப்பானுங்களா?

* அந்நியன் படத்துல ரெமோ வேற, அம்பி வேறன்னு நம்புற நந்தினிகளை சினிமாவுல மட்டும்தான் பார்க்க முடியும். டாக்டருக்குப் படிக்கிற பொண்ணால அதே மூக்கு, முழியைக்கூடவா கண்டுபிடிக்க முடியாது? இதுல குத்துயிரும் குலையுயிருமா கெடக்குற அம்பி, அந்நியனா ஒரு செகண்ட்ல மாறி நூறு பேரை அடிச்சுப் பறக்க விடுவாரு. இந்த உருட்டுக்கு எல்லாம் புருடா புராணத்தில் என்ன தண்டனை?

* ‘சிங்கம்’ சூர்யாலாம் ஓவரோ ஓவர். என்னதான் ஃபுல் பவரோட அடிச்சாலும் ஒன்றரை டன் அடியெல்லாம் 75 கிலோ உள்ள இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்தால முடியாது. சரி அதைக்கூட உதார்னு வெச்சுக்கிட்டாலும், பொசுக்கு பொசுக்குனு ஃபாரினுக்கு வில்லன்களை வேட்டையாடப் பறந்து போவாரு சிங்கம். இன்ஸ்பெக்டரை டமால்னு ஓவர் நைட்ல அசிஸ்டன்ட் கமிஷனராக்கி விட்ருவாரு அமைச்சர். அப்பா அம்மா, அவ்வளவு ஏன், மனைவிக்கேகூடத் தெரியாம அண்டர் கவர் ஆபீஸரா இருப்பாரு. சென்னை டு திருநெல்வேலி ஒரு மணி நேரத்துல வர்றதுக்குலாம் ரூட்டு சொல்லுவாரு. சுமோவை எத்தியே பறக்க விடுவாரு... ஐயா... முடியலைய்யா... ஆனா, லாஜிக் மறந்து மேஜிக்கைப் பார்த்தோமா இல்லையா?

* டைம் பாம்ல இருக்குற சிவப்பு மஞ்சள் வயரை சரியா கட் பண்ற ரிக்‌ஷா ஓட்டும் ஹீரோ, 786 னு போட்டிருக்குற பேட்ஜ்ல பட்டு ரிட்டர்ன் ஆகுற தோட்டா, மேட்டுப்பாளையத்துல ஹீரோ வீசுன கயிறு கோத்தகிரி பெண்ட்ல இருக்குற வாதாம் மரத்துல சரியா போயி மாட்டிக்கொள்ளும் அபூர்வ திறமை உள்ள நாயகன், சரக்கை புல்லெட் பாய்ந்த இடத்தில் ஊற்றி நெருப்பைக் காட்டி சுயமாய் ஆபரேஷன் செய்து தோட்டாவை எடுக்கும் ஹீரோ, கடிச்சு வீசுற பாமை கேட்ச் செஞ்சு திருப்பி வில்லனுக பக்கமே வீசுற அசகாய ஹீரோ, மெஷின் கன்னை வெச்சு சண்டை செய்யும் கிராமத்து ஹீரோ, படம் பூரா உதவாக்கரையா வந்து ஒரே சீன்ல ஐ.பி.எஸ்-னு சொல்லி அண்டர் கவர் ஆபரேஷனுக்கே விக்கல் வர வெச்ச ஹீரோன்னு நம்ம காதுல டன் கணக்குல பூவைச் சுத்தியிருக்காங்க.

ஒருநாள் பூரா உட்கார வெச்சு அந்தச் சோகக் கதையைச் சொல்றேன், நேர்ல வாங்க!