
ஓவியம்: சுதிர்
டீக்கடையில் உட்கார்ந்து ‘காரசார’ அரசியல் பேசும் கரைவேட்டித் தொண்டர்களை, பட்டணம் தொடங்கி பட்டிதொட்டிவரை பார்த்திருப்போம். பலநேரம் ‘கழக உடன் பிறப்புகளுக்கும்’, ‘ரத்தத்தின் ரத்தங்களுக்கும்’ இடையே நடக்கிற அனல் பறக்கும் விவாதத்தில் வடை, பஜ்ஜியெல்லாம் அந்தரத்தில் பறக்கும். தற்போதைய அரசியல் சூழலில் ஒரு உ.பி-க்கும், ர.ர-வுக்கும் இடையே டீக்கடை விவாதம் நடந்தால் எப்படியிருக்கும்... வாங்க, வாங்க நாமும் அந்தக் கற்பனைக் கடையில் ஒரு டீ குடிக்கலாம்!
`கணேஷ் சாய் ஸ்டால்’ - சுத்தமான கோமாதா பால் தேநீரகம்!
உ.பி: அடடே... வாப்பா அமாவாசை எங்க ஆளையே காணோம்... யோவ் ‘ஒன்றியம்’, நம்ம ரத்தத்தின் ரத்தத்துக்கு ரத்த கலர்ல ஒரு டீ-யைப் போடு.
டீக்கடை ஜி: வித் ஜி.எஸ்.டி-யோட சுடச்சுடப் போட்டுத் தர்றேன்.
ர.ர: யோவ் சுண்டிமோதிரம்... உங்கிட்டதான் நாங்க பேச்சுவார்த்தையில இல்லைல்ல... அப்புறம் ஏன் வம்புக்கு ஒரண்ட இழுக்குற?
உ.பி: பின்ன டீ குடிச்சு முடிக்குற வரைக்கும் பொழுத ஓட்டணும்ல. `ஆமா நீ இப்ப எந்தப் பக்கம்... இ.பி.எஸ்-ஸா... ஓ.பி.எஸ்-ஸா... இல்ல எஸ்.ஆர்.எஸ்-ஸா?
டீக்கடை ஜி: அது யாரு புதுசா எஸ்.ஆர்.எஸ்?
உ.பி: அட... உனக்குத் தெரியாததா டீக்கடை, ‘சசிகலா ரிலேஷன்ஸ்’ அணியான்னு கேட்டேன்.
ர.ர: யோவ்... நீ ரொம்பப் பேசுற. நான் எப்பவுமே புரட்சித்தலைவர் உருவாக்குன ஒரே அ.தி.மு.க அணிதான். அது கிடக்கட்டும் `நாலு பவர் சென்டர்’ல நீ எந்த சென்டருக்குக் கீழ இருக்கே... சின்னவர்கிட்டயா இல்லை அவர் மச்சான்கிட்டயா... ஹா ஹா..!
உ.பி: எங்க ஆட்சி எல்லாருக்குமான விடியல் ஆட்சி. ‘இங்க எல்லாருமே முதல்வர்’னு எங்க தலைவரே சொல்லியிருக்காரு, போவியா!
ர.ர: சரி... ‘விடியல் ஆட்சி’னு சொன்னீங்களே, ஏன் கரன்டு பில்லை ஏத்திவிட்டீங்க... சூரியனுக்கு வெளிச்சம் பத்தாம லைட்டு மாட்டி விட்டீங்களாக்கும்?
உ.பி: கரன்டு பில்லு கணக்கெல்லாம் உனக்குச் சொன்னா புரியவாபோவுது... ‘மேல இருக்கவன்’ ஏத்தச் சொன்னா, எங்க சமூகநீதி ஆட்சி என்ன பண்ணும்?
டீக்கடை ஜி: மேலே இருந்து என்னென்னமோ சொல்றான் அதெல்லாம் கேட்க மாட்டீங்க, இதை மட்டும் கரெக்டா கேப்பீங்களா?!

ர.ர: சமூகநீதி ஆட்சினு வாய்க்கு வாய் சொல்றது கிடக்கட்டும். கிருஷ்ணகிரியில பள்ளிக்கூடப் பசங்களுக்கு சைக்கிள் கொடுக்கும்போது, S.C., M.B.C., B.C-னு பிரிச்சு எழுதுறது, ராமநாதபுரத்துல பர்தா போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் வரக் கூடாதுனு ஹெட்மாஸ்டரே பெத்தவங்ககிட்ட சொல்றதுன்னு உங்க சமூகநீதி, பள்ளிக்கூடத்துல பல் இளிக்குதே, என்னய்யா பண்றாரு உங்க பள்ளிக்கல்வி அமைச்சரு?
டீக்கடை ஜி: அவரு ராமேஸ்வரத்துல புனித நீராடிட்டு வந்தாரே பார்க்கலயா?
உ.பி: சும்மா நிறுத்துய்யா. எங்க முதல்வரே பழங்குடிகள் வீடுகளுக்கெல்லாம் போய் சாப்பிட்டிருக்காரு தெரிஞ்சுக்க.
டீக்கடை ஜி: எங்க பி.எம்-மைவிட உங்க சி.எம்-மோட கேமராமேன் நல்லா ஃபிரேம் வெக்கிறாரு.
ர.ர: பள்ளிக்கல்வியை விடு... உங்க உயர்கல்வித்துறை மினிஸ்டர், `ஏம்மா நீ எஸ்.சி-தானே... பாரு அவங்களையே நாங்க ஒன்றியச் செயலாளர் ஆக்கியிருக்கோம். இதுதான் `திராவிட மாடல்’னு வாய்கூசாமப் பேசுறாரு. அப்புறம் கே.கே.எஸ்.எஸ்.ஆரு... இதெல்லாம் சாதிய மனநிலை இல்லாம வேறென்ன?
உ.பி: யோவ்... ஓம்பாட்டுக்கு எங்க அமைச்சர் சொன்னதைத் திரிச்சுவிடாத. அவர் சொன்னதுக்கு ‘பெண்கள் முன்னேற்றம்தான் திராவிட மாடல்’னு அர்த்தம். அதனாலதானே கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாசம் 1,000 ரூபாய்னு இந்தியாவிலேயே இல்லாத திட்டத்தையெல்லாம் கொண்டுவந்திருக்கோம்.
ர.ர: அதான், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை நிறுத்துனீங்களாக்கும். கட்சியில இருந்த ஒரே பெண் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியவிட்டுப் போனப்பவே உங்க லட்சணம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சே. அவ்வளவு ஏன், சென்னை மேயரை ஒங்க அமைச்சர் மேடையிலேயே, ‘வா... போ...’னு ஒருமையில பேசலையா?
டீக்கடை ஜி: அது ஒருமையில பேசலையாம்... உரிமையில பேசுனாதாம்.
உ.பி: தலைவியோட காலைத் தவிர எதுவும் தெரியாத நீங்கல்லாம் சுயமரியாதையைப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டீங்க... மத்ததை விடு. எங்க ஆட்சி நிர்வாகத்தைப் பாரு... மக்களுக்கு நல்லாட்சி கொடுக்குறோம்ல?
ர.ர: ஆமா, ஆமா. அந்தக் கூத்தைத்தான் ஊரே பார்க்குதே. எங்க ஆட்சியில கொண்டுவந்தப்போ `குய்யோ முய்யோ’ன்னு கத்துன எட்டுவழிச் சாலையை இப்போ நீங்க போட்டுட்டு இருக்கீங்க. பரந்தூர்ல ஏர்போர்ட் கொண்டுவரக் கூடாதுனு போராட வந்தா, ஊருக்குள்ளயே நுழையவிடாம தடுத்து கைதுபண்ணுறீங்க. விமர்சனம் பண்ணினா உள்ள போடுறீங்க. மகளிர் உரிமைத்தொகை பத்திப் பேச்சையே காணோம். இதுல நல்லாட்சி நடத்துறோம்னு விளம்பரம் வேற!
உ.பி: உங்க ஆட்சியில கடன் மேல கடன் வாங்கி, கமிஷன் அடிச்சு கல்லாகட்டிட்டு, இப்போ கஜானா காலியா இருக்குன்னு தெரிஞ்சும் பேசுறீங்க பாருங்க... முடியலை.
ர.ர: ஆமாமா, மக்கள் கேட்டா நிதி இல்லை, கஜானா காலின்னு சொல்றது. அம்மா உணவகத்து நிதியை குறைச்சுட்டீங்க. தாலிக்குத் தங்கம் திட்டத்தைக் காணோம். ஆனா, அமைச்சர் வீட்டுக் கல்யாணத்துல 5,000 கோழி, 2,000 ஆடுன்னு பணம் தண்ணியா ஓடுது. பேனாவுக்கு சிலைவெக்க கடலுக்குள்ள 100 கோடி... இதுக்கெல்லாம் எங்க இருந்து வருதுய்யா துட்டு?
டீக்கடை ஜி: அமாவாசை நீயா இவ்ளோ அறிவா பேசுற?
உ.பி: வளர்ப்பு மகன் கல்யாணத்தை விடவாய்யா பெருசா செலவு பண்ணிட்டோம்... சும்மா குறைசொல்லிக்கிட்டே இருக்காம, மாநில சுயாட்சிக்காக மல்லுக்கட்டி நிக்கிற எங்க துணிவைப் பத்தி மக்கள் என்ன சொல்றாங்கன்னு கேளு.
ர.ர: ஹா... ஹா... நான்கூட டீ தீர்ந்துடுச்சு, இத்தோட முடிச்சுக்கலாம்னு இருந்தேன். நீயே வம்பா வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டியேய்யா. பாசிசம் உள்ள வந்துடும், மதவாதம் மலிஞ்சிரும்னு தேர்தல் நேரத்துல பூச்சாண்டி காட்டிட்டு, இப்போ வெத்தல பாக்குவெச்சு அழைக்கிறதென்ன, புதுப்புது ஜி.எஸ்.டி வரி விதிக்கும்போது கவுன்சில்ல உக்கார்ந்துட்டு கமுக்கமா வர்றதென்ன, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, மரியாதைன்னு தடபுடல் பண்ணிட்டு இருக்கீங்களேய்யா. இதான் ஒங்க மாநில சுயாட்சி மல்லுக்கட்டா?
உ.பி: நீங்க அவங்களோட கூட்டணி போட்டுக்கிட்டு கொஞ்ச நஞ்சம் ஆட்டமா ஆடுனீங்க?
ர.ர: நீங்க மட்டும் யோக்கியமா... உங்க கட்சி ஆ.ராசாவுக்கே ஆதரவா ஒருத்தரும் வாய் திறக்கலை. கட்சிக்குள்ளதான் இப்படின்னா ஆட்சியில சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்குது. எங்க பார்த்தாலும் கஞ்சா, போதைப்பொருள், வெடிகுண்டு கலாசாரம். முதல்வருக்கும் டி.ஜி.பி-க்கும் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ, ஷூட்டிங், சைக்கிளிங்னு வந்துட்டா ரெண்டு பேத்தையும் அடிச்சுக்க முடியாதுய்யா!
உ.பி: நைசா நழுவுறேன்னு நினைக்காத. பாரு... கூட்டம் கூடிடுச்சு. நம்ம சண்டையில இந்த டீக்கடைக்காரன்தான் நல்லா கல்லாகட்டுறான். நம்ம வாக்குமூலத்தைவெச்சே நாளைக்கு நமக்கு வேட்டுவெச்சுருவான். இதோட எந்திரிச்சுப் போயிடுறதுதான் நமக்கும் நல்லது.
டீக்கடை ஜி: நீங்க எவ்ளோ சண்டை போட்டாலும் அடுத்த எலெக்ஷன்ல எங்க அண்ணாமலை ஜிதான் தமிழ்நாட்டோட சி.எம்-மு... நீங்க எல்லாம் கம்முனு இருக்கணும் புரியுதா?
உ.பி + ர.ர: இவன் யாருய்யா நடுவுல கோமாளி? ஹா... ஹா ஹா...
ர.ர: நீ வாய்யா பங்காளி நாம போகலாம்!