நாட்டு நடப்புகளை வைத்து வி.ஐ.பி.களிடம் சில கேள்விகளைக் கேட்டோம். பாஸா, ஃபெயிலான்னு நீங்களே சொல்லுங்க...
நடிகர் சதீஷ் :
ரஜினிகாந்த் கடந்த ஐந்தாண்டுகளில் நடித்த படங்கள் எவை?
கேட்ட அடுத்த நொடி, மனப்பாடமாய் கடகடவென வந்தது பதில்: “ஹலோ... எங்ககிட்டயேவா... இப்ப அண்ணாத்த, இதுக்கு முன்ன தர்பார், பேட்ட, 2.0. காலா, கபாலி! போதுமா, அதுக்கு முன்ன ஐந்து வருஷம் சொல்லவா?’’
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக பிரபலங்கள் மூவரின் பெயர்கள்...?
``அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் (ஹலோ இவங்க இந்திய பிரபலம்தானே என நாம் கேட்க, நான் லண்டன், ஹாங்காங்லாம் போனப்ப இவங்க ரெண்டு பேரையும் கேட்காதவங்களே கிடையாது. அதும் ஐஸ்வர்யா ராய் ‘உலக’ அழகி, அப்புறம் உலக பிரபலம்னா ஒத்துக்க மாட்டீங்களா என்று மடக்கினார்) அப்புறம் போரிஸ் ஜான்ஸன்’’ என்றவர் “ஆமா ட்ரம்புக்கு கொரோனா வந்துச்சா?” என்று நம்மிடமே கேட்கவும் செய்தார்.

கிரிக்கெட்டில், ரன்கள் எதுவும் அடிக்காமலேயே, பேட்டிங் டீமுக்கு 5 ரன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டா?
``இதெல்லாம் ஜூஜூபி... விக்கெட் கீப்பர் பின்னால இருக்கற ஹெல்மெட்ல பட்டா கிடைக்கும்.’’
இந்தியாவுக்காக இஸ்ரோ உருவாக்கியிருக்கும் ‘ஜி.பி.எஸ்’-க்கான மாற்று மென்பொருளின் பெயர் என்ன?
``ஆஹா... மூணு கேள்வி ஈஸின்னு நெனைச்சேன். இதுக்கு பதில் சத்தியமா தெரியல.’’

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு எப்போதும் உணவின் பெயரையே சூட்டிவருகின்றனர். அதில் ஏதாவது மூன்று பெயர்கள்..?
``லாலிபாப், மார்ஷ்மெல்லோ’’ என்று சட்டெனச் சொன்னவர் 3-வது பெயருக்கு யோசித்தார். ‘`சாண்ட்விச் வெச்சுட்டானா ப்ரோ? ஒரு க்ளூ குடுங்களேன்’’ என்றவர் ‘`சத்யம் தியேட்டருக்குப் போனா சாப்டற பொருள்’’ என்று நாம் சொல்ல ‘`பட்டர் பாப்கார்ன்’’ என்றுவிட்டு ‘`ஆங்... இல்ல, கண்டுபிடிச்சுட்டேன்... டோனட்’’ என்று சரியான பதிலைச் சொன்னார்.
துரைமுருகன் :
ரஜினி கடந்த ஐந்தாண்டுகளில் நடித்த படங்கள் எவை?
கேள்வியைக் கேட்டதும் ‘டக்’கென்று ‘பாட்ஷா’(?!) படத்தை பதிலாக்கியவர், ‘`சரசுக்க ராரான்னு ஒரு பொண்ணு பாடுமே அது என்ன படம்ங்க..?’’ என்று நம்மிடமே திருப்பிக் கேட்டார். ‘அது சந்திரமுகி... ரஜினி நடித்த பழைய படம்’ என்று நாம் பதில் சொல்ல... ‘`எனக்கு அவ்வளவுதாங்க ஞாபகம் வரும்... நான் அதிகமா படம் பாக்குறதில்லை. ஆங்... இப்ப ‘காலா’ன்னு ஒரு படம் வந்ததே..!’’ என்று கடைசி நேரத்தில் ஒரு ‘டிக்’ அடித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக பிரபலங்கள் மூவரின் பெயர்கள்..?
‘`பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் பாதிக்கப்பட்டாரு... அப்புறம் நம்ம ஊர்ல மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்(?!) அவ்வளவுதான்’’ என்று அவராகவே பதிலை முடித்துக்கொண்டார். ‘அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்குக் கொரோனா வந்ததா? அவர் உலகத் தலைவரா?’ என்றெல்லாம் நாம் சந்தேகம் கேட்க... ‘`அவர் உலகத் தலைவர்லேயும் வரமாட்டார்... உள்ளூர்த் தலைவர்லேயும் வரமாட்டார்’’ என்று சொல்லிவிட்டு தனது ட்ரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தார்.
கிரிக்கெட்டில், ரன்கள் எதுவும் அடிக்காமலேயே, பேட்டிங் டீமுக்கு 5 ரன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டா?
‘`கிரிக்கெட் நமக்கு ரொம்ப மேலோட்டமாத்தான் தெரியும். இதுமாதிரி ரொம்ப டெக்னிக்கலா கேட்டீங்கன்னா ஒண்ணும் தெரியாது...’’
இந்தியாவுக்காக இஸ்ரோ உருவாக்கியிருக்கும் ‘ஜி.பி.எஸ்’-க்கான மாற்று மென்பொருளின் பெயர் என்ன?
‘`நீங்க என்ன... அவுட் ஆஃப் சிலபஸ்லேருந்தே கேள்வி கேட்குறீங்க...’’ என்று சொன்னவர் ‘`சாதாரணமா அரசியல்ல அது என்னா, இது என்னா, எடப்பாடி என்ன பண்ணினாருன்னு கேள்வி கேட்பீங்கன்னு பார்த்தா... சரி ரைட்டு, அடுத்து என்ன கேள்வி...’’ என்று இப்போதும் எஸ்ஸானார்.
ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு எப்போதும் உணவின் பெயரையே சூட்டிவருகின்றனர். அதில் ஏதாவது மூன்று பெயர்கள்..?
‘`நீங்க ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்க... எனக்குத் தெரியாத கேள்வியையெல்லாம் கேட்டு, ‘ஒரு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை’ன்னு சொல்லி ‘ஜீரோ மார்க்’ போடப் பாக்குறீங்க. எனக்கு போன் வந்தா பேசத் தெரியும்... அவ்வளவுதான்! அண்டர்வேர் காலத்து ஆள்கிட்ட வந்து ஆண்ட்ராய்டு பத்திக் கேட்டா என்ன சொல்றது..?’’ என்றார் சிரித்தவாறே.
நாஞ்சில் சம்பத் :
ரஜினி கடந்த ஐந்தாண்டுகளில் நடித்த படங்கள் எவை?
(நீண்ட நேரம் யோசித்தவர்... கடைசியில்) ‘`தெரியல... அவரை நம்பியிருக்கிற லட்சக்கணக்கான ரசிகர்களே ஒருவித மனக்குறையோடு நாள்களை நகர்த்தவேண்டிய நிலையில்தான், ரஜினிகாந்தின் சினிமாவும் அரசியலும் இருக்கிறது! அதனால், அவரின் படங்கள் எதையும் நான் பார்ப்பதும் இல்லை... அதுபற்றிய செய்திகளை நினைவில் வைத்துக்கொள்வதும் இல்லை!’’

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக பிரபலங்கள் மூவரின் பெயர்கள்..?
‘`அமிதாப் பச்சன், ம்... அடுத்து இந்தியாவின் ஹெல்த் மினிஸ்டரா?’’ என்று அவராகவே கேட்டுக்கொண்டார். பின்னர் ‘`ஆங்... அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன்’’ என்றார். ‘உலகத் தலைவர்களின் பெயர்தான் வேண்டும்’ என்று நாம் கேள்வியைத் திரும்பவும் கேட்டோம். ‘`உலக அளவில், அண்ணா யுனிவர்சிட்டியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் அமைச்சர் அன்பழகனுக்கு இருக்கிறது... அப்படியென்றால் அவர் உலகத் தலைவர் இல்லையா..?’’ என்று மறுபடியும் நம்மையே திருப்பிக் கேட்டார். ‘மிடியல...’ என்று நாம் அடுத்த கேள்விக்குத் தாவினோம்.
கிரிக்கெட்டில், ரன்கள் எதுவும் அடிக்காமலேயே, பேட்டிங் டீமுக்கு 5 ரன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டா?
‘`கிரிக்கெட்டைப் பத்தி அனா, ஆவன்னாகூட எனக்குத் தெரியாது.’’
இந்தியாவுக்காக இஸ்ரோ உருவாக்கியிருக்கும் ‘ஜி.பி.எஸ்’-க்கான மாற்று மென்பொருளின் பெயர் என்ன?
‘`தெரியாது... அதென்ன எல்லா கேள்வியுமே எனக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியா கேட்குறீங்க?”

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு எப்போதும் உணவின் பெயரையே சூட்டிவருகின்றனர். அதில் ஏதாவது மூன்று பெயர்கள்..?
‘`நான் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த ஆரம்பிச்சே ஒரு வருடம்தான் ஆகுது. இந்த நவீன உலகத்துக்கு ஏற்றவன் அல்ல நாஞ்சில் சம்பத்! பாரிஸிலிருந்து ‘ஜூம்’ ஆப் வழியாகப் பேசச்சொல்லி என்னை அழைக்கிறார்கள். எனக்கோ அதை எப்படி ‘ஆன்’ செய்யவேண்டும் என்றுகூடத் தெரியவில்லை.”
நடிகை கஸ்தூரி :
ரஜினி கடந்த ஐந்தாண்டுகளில் நடித்த படங்கள் எவை?
‘`லிங்கா, காலா, கபாலி, பேட்ட... ம்...’’ என நீண்ட நேரம் யோசித்தவர், ‘`தலைவரோட அடுத்த படம் எப்ப ரிலீஸ்ங்கிறதைவிடவும் அவரோட பொலிட்டிகல் ரிலீஸுக்காகத்தான் எல்லோருமே ஆர்வமா காத்துக்கிட்டிருக்கோம்...’’
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக பிரபலங்கள் மூவரின் பெயர்கள்..?
‘`போரிஸ் ஜான்ஸன், கொரோனா நோயாளிகளோடே கைகுலுக்கி அரசியல் ஸ்டண்ட் அடிச்சுட்டு, அடுத்தநாளே ஐ.சி.யூ-வில் போய்ப் படுத்துக்கிட்டார். அடுத்து நம்மூர் அமிதாப் பச்சன். இவர் வீட்டில் எல்லோருக்கும் கொரோனா வந்துவிட்டது, ஜெயா பச்சனைத் தவிர! டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச். ஆமா... கைலாசாவில் கொரோனா உண்டா?’’

கிரிக்கெட்டில், ரன்கள் எதுவும் அடிக்காமலேயே, பேட்டிங் டீமுக்கு 5 ரன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டா?
நீண்ட நேரம் யோசித்தவர், `‘ட்வென்டி ட்வென்டியில் ஏதும் புதுசா ரூல் கொண்டு வந்திருக்காங்களா...’’ எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டவருக்கு, ‘விக்கெட் கீப்பர்’ என்று க்ளூ கொடுத்தோம். ‘`ஆங்... விக்கெட் கீப்பரை அடித்து ‘பணால்’ ஆக்கிவிட்டால் 5 ரன். கரெக்டா...’’ என்று கேட்டு அதிர வைத்தார். பதறிப்போய் நாம் விடையைச் சொல்ல... `‘ஐ... செம...’’ என்று சின்னக்குழந்தையாய்க் குதூகலித்தார்.
இந்தியாவுக்காக இஸ்ரோ உருவாக்கியிருக்கும் ‘ஜி.பி.எஸ்’-க்கான மாற்று மென்பொருளின் பெயர் என்ன?
‘`நேவிகேஷன்தானே... ம்ம்ம்...’’ என்று யோசித்தவாறே ‘க்ளூ’ கேட்டவர் அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டு ‘`ஆங்... நேவிக்’’ என்றார்.
ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு எப்போதும் உணவின் பெயரையே சூட்டிவருகின்றனர். அதில் ஏதாவது மூன்று பெயர்கள்..?
``எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும்... ஏ, பி, சி, டி வரிசையில்தான் பெயர் வைப்பாங்க... கேரள நெய்யப்பம் பெயர்கூட அடிபட்டது... கடைசியில ‘நூகா’-ன்னு பெயர் வெச்சாங்க. அடுத்து ஓரியோ. நூகாவுக்கு முன்னாடி எம்... ஆங் மார்ஸ்மாலோ, லாலிபாப், கிட்கட்...’’ என வரிசையாகச் சொல்லிக்கொண்டே போனவரிடம், ‘போதும் போதும். லிஸ்ட்டு ரொம்பப் பெருசா போய்க்கிட்டிருக்கு’ என்று சொல்லி, தடுத்து நிறுத்தித் தப்பித்தோம்.