இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சானியா மிர்ஸாவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிகெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து, கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இஷான் மிஸ்ரா மாலிக் என்ற நான்கு வயது மகன் உள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதிகள் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபகாலமாக பல தகவல்கள் பரவி வந்தன.

இருவரும் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள். ஆனால் சில காலமாக இவர்கள் எங்கும் ஒன்றாகக் காணப்படவில்லை, மேலும் சோயிப் மாலிக், நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் இதனால் அவர் சானியாவை விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் கூறபட்டது.
மேலும் இந்த ரம்ஜான் பண்டிகையின்போது, இருவரும் ஒன்றாக இல்லை போன்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி, இவர்களின் விவாகரத்து தொடர்பான வதந்திகளை மேலும் அதிகரிக்கச் செய்தன.
நீண்டகாலமாக இந்த விவகாரம் தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்த இந்த தம்பதியினர், முதல்முறையாக ஊடகங்களில் இதை பற்றி பேசியுள்ளனர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோயிப் மாலிக்கிடம், சானியா மிர்ஸாவுடனான விவாகரத்து மற்றும் ரம்ஜான் கொண்டாட்டங்களில் சானியா இல்லாதது ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதில் அளித்துள்ள சோயிப், ``எனக்கு சானியாவுக்கும் இடையேயான உறவு குறித்து சில மாதங்களாக வதந்தி பரவியது.. அதில் சிறிதும் உண்மையில்லை. இந்த ரம்ஜான் பெருநாளை சானியாவுடன் தான் கொண்டாட விரும்பினேன், ஆனால் அவரால் அந்த நிகழ்சிகளில் பங்கேற்க முடியவில்லை. ஐ.பி. எல் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை சானியா தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் அவரால் பண்டிகையில் கலந்து கொள்ள முடியவில்லை.
நாங்கள் எப்போதும் போல அன்பாகவே இருக்கிறோம். சானியாவை மிகவும் மிஸ் செய்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால் கூறமுடியும்” என தெரிவித்துள்ளார். சோயிப்பின் கருத்துக்குப் பிறகு இந்த தம்பதிகளின் விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.