
ரேஸ்: ஃபார்முலா 1

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ 2023 டிராமாக்கள் நிறைந்த ஒரு ரேஸாக அமைந்திருக்கிறது.
3 முறை சிவப்புக் கொடிகள் காட்டப்பட்டது, 8 டிரைவர்கள் ரேஸிலிருந்து வெளியேறினர், கார்லோஸ் சைன்ஸுக்கு ரேஸுக்குப் பின்பு பெனால்ட்டி கொடுக்கப்பட்டது, காரின் பாகம் ஒரு ரசிகரைத் தாக்கியது என பல்வேறு நிகழ்வுகள் அந்த ரேஸில் நடந்தேறியது.
சனிக்கிழமை நடந்த தகுதிச்சுற்றின் முதல் ரவுண்டிலேயே வெளியேறினார் சவுதி அரேபியன் கிராண்ட் ப்ரீயை வென்றிருந்த ரெட்புல் டிரைவர் செர்ஜியோ பெரஸ். இருந்தாலும், மேக்ஸ் வெர்ஸ்டப்பன் போல் பொசிஷன் வென்றதால், ரெட் புல் அணி மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்களைவிட இரு மடங்கு சந்தோஷத்தில் இருந்தது மெர்சிடீஸ். ஜார்ஜ் ரஸல், லூயிஸ் ஹாமில்ட்டன் என அந்த அணியின் டிரைவர்கள் இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தகுதி பெற்றனர். முந்தைய ரேஸ்களில் பெரிதாக வேகம் இல்லாமல் தடுமாறிய மெர்சிடீஸ் ஆஸ்திரேலியாவில் பறந்தது. இந்த சீசன் தொடக்கத்திலிருந்தே அசத்திக் கொண்டிருக்கும் ஆஸ்டன் மார்டின் டிரைவர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். ஃபெர்னாண்டோ அலோன்சோ நான்காவது இடத்திலும், லான்ஸ் ஸ்டிரோல் ஆறாவது இடத்திலும் முடித்தனர். வேகத்துக்குத் தடுமாறிய சார்ல் லெக்லர், ஏழாவது இடமே பிடித்தார். பவர் யூனிட் மாற்றியதால், பிட் லேனில் இருந்து ரேஸைத் தொடங்கினார் பெரஸ்.
ரேஸின் முதல் லேப்பிலேயே வெர்ஸ்டப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெர்ஸ்டப்பன் சரியாகத் தொடங்காததன் காரணமாக, முதல் வளைவில் அவரை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார் ரஸல். அடுத்தது ஹாமில்ட்டனும் அட்டாக் செய்து இரண்டாவது திருப்பத்தில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். மெர்சிடிஸ் டிரைவர்கள் முதலிரு இடத்தில் இருந்தனர்!
அதேசமயம், முதல் லேப்பிலேயே லெக்லர்க் ரேஸிலிருந்து வெளியேற, சேஃப்டி கார் வரவழைக்கப்பட்டது. மூன்று ரேஸ்களில், இரண்டாவது முறையாக ரேஸிலிருந்து ஓய்வுபெற்றார் லெக்லர்க். இதற்கு முன் பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயிலும் அவர் வெளியேற நேர்ந்தது.
நான்காவது லேப்பில் சேஃப்டி கார் வெளியேறி ரேஸ் தொடங்கினாலும், ஏழாவது லேப்பில் மீண்டும் தடைபட்டது. லெக்லர்க் போல், ஆல்பானும் வெளியேற, மீண்டும் சேஃப்டி கார் வரவழைக்கப்பட்டது.
அதற்கு முன் இரு மெர்சிடீஸ் டிரைவர்களும் முதலிடத்துக்கு முட்டி மோதியிருந்த நிலையில், சேஃப்டி காரின் போது முதலிடத்திலிருந்த ரஸலைப் பிட்டுக்குள் அழைத்து ஹார்ட் டயருக்கு மாற்றியது மெர்சிடீஸ். அதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார் ஹாமில்ட்டன். ஆனால் அடுத்த லேப்பிலேயே மீண்டும் சிவப்புக் கொடி காட்டி ரேஸ் நிறுத்தப்பட்டது. முதலிடத்திலிருந்த ரஸல், சில லேப்களில் ஏழாவது இடத்துக்குக்குத் தள்ளப்பட்டார்.
பத்தாவது இடத்தில் மீண்டும் கிரிட்டில் இருந்தே ரேஸ் தொடங்கியது. வெர்ஸ்டப்பன் இந்த முறையும் சரியாகத் தொடங்காததால், தன் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டார் லூயிஸ் ஹாமில்ட்டன். ஆனால், 12-வது லேப்பில் DRS பயன்படுத்தி அட்டகாசமாக ஹாமில்ட்டனை முந்தினார் நடப்பு சாம்பியன். இதே சமயத்தில், இந்த இரு டிரைவர்களின் டீம் மேட்களும் நல்ல முன்னேற்றம் கண்டனர். செர்ஜியோ பெரஸ் 14-வது இடம் வரை முன்னேற, ஏழாவது இடத்திலிருந்து தொடங்கிய ரஸல் நான்காவது இடத்துக்கு முன்னேறினார். ஆனால், அவரது ரேஸ் இன்னும் மோசமானது. 18-வது லேப்பில், அவர் இன்ஜின் கோளாறால் தீப்பிடித்தது. அதனால் அவர் ரேஸிலிருந்து வெளியேறினார். இப்போது விர்ச்சுவல் சேஃப்டி கார் பயன்பாட்டுக்கு வந்தது.


அதன்பிறகு சில லேப்கள் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருந்தது. வெர்ஸ்டப்பன் தன் முன்னிலையைப் பல நொடிகள் அதிகப்படுத்தினார். செர்ஜியோ பெரஸ் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தார். இரண்டாவது இடத்துக்கு ஹாமில்ட்டனுக்கு சற்று சவால் கொடுத்தார் ஃபெர்னாண்டோ அலோன்சோ. மெர்சிடீஸ் போல், ஆஸ்திரேலியாவில் முன்னேற்றம் கண்ட மெக்லரன் டிரைவர்களும் சில இடங்கள் முன்னேறினார்கள்.
எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்க, 53-வது லேப்பில் கெவின் மேக்னசன் தடுப்புகளில் மோதியதால் அவர் கார் சேதமடைந்தது. பாகங்கள் டிராக்கில் இருந்ததால் சேஃப்டி கார் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அடுத்த லேப்பிலேயே மீண்டும் சிவப்புக் கொடி காட்டி ரேஸை நிறுத்தியது FIA. அதனால் 57-வது லேப்பில் (கடைசிக்கு முந்தைய லேப்) டிரைவர்கள் கிரிட்டில் அணிவகுத்து நின்றனர். இந்த முறை சரியான தொடக்கம் பெற்ற வெர்ஸ்டப்பன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் பெரும் கலவரமே நடந்தது.
ரீஸ்டார்ட்டின்போது ஒவ்வொருவரும் முன்னேற ஆசைப்பட்டதால், பல அசம்பாவிதங்கள் நடந்தன. அலோன்சோவின் காரை சைன்ஸ் இடித்தார். இந்த ரேஸ் முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பியர் கேஸ்லி, தன் டீம் மேட் எஸ்டபன் ஓகான் காரில் மோத இருவருமே ரேஸிலிருந்து வெளியேறினார்கள். லான்ஸ் ஸ்டிரோல், டிராக்கிலிருந்து வெளியேறி தடுப்புகளுக்கு அருகே தன் காரை பார்க் செய்தார். லோகன் சார்ஜன்ட், நிக் டி ஃப்ரீஸ் போன்றவர்களும் ரேஸிலிருந்து வெளியேற மீண்டும் சிவப்புக் கொடி காட்டப்பட்டது. அலோன்சோ தன் போடியம் பொசிஷனை இழந்தார். மொத்த ரேஸிலும் காட்டிய முன்னேற்றத்தை இழந்தார் பெரஸ். ஆனால், ஃபார்முலா 1 விதி அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அலோன்சோ மீது மோதியதால், சைன்ஸுக்கு 5 நொடிகள் பெனால்ட்டி கொடுக்கப்பட்டது.
மீண்டும் கடைசி லேப்பில் `ரோலிங் ஸ்டார்ட்' மூலம் ரேஸ் தொடங்கப்பட்டது. ஓவர்டேக் செய்யக்கூடாது என்பதால், எந்தக் கலவரமும் இல்லாமல் ரேஸ் முடிவுக்கு வர, தன் முதல் ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ வெற்றியைப் பதிவு செய்தார் மேக்ஸ். ஹாமில்ட்டன் இரண்டாவது இடம் பிடிக்க, தொடர்ந்து மூன்றாவது முறையாக மூன்றாவது இடம் பிடித்தார் அலோன்சோ. தன் பெனால்டியில் 11-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் சைன்ஸ். அதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக 11வது இடத்தில் முடித்த யூகி சுனோடா, ஒரு இடம் முன்னேறி இந்த சீசனில் தன் முதல் புள்ளியை பதிவு செய்தார்.


