நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

தோனி முதல் சாமானியன் வரை... கிரிக்கெட்டில் சூடுபறக்கும் வியாபாரம்!

கிரிக்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பவர் களைவிட இணையதளத்தில் பார்ப்பவர்கள் அதிகம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஏற்படுத்தி இருக்கும் பரபரப்பு உச்சக் கட்டத்தில் இருக்கிறது. எந்த அணி கோப்பையை வெல்லும் என்கிற கேள்வியை அனைவரும் கேட்டுக்கொண்டிருக்க, இந்தப் பரபரப்பை வைத்து அதிகம் சம்பாதிக்கப் போவது யார் என்கிற போட்டி இன்னொரு பக்கம் சத்தம் இல்லாமல் நடக்கிறது.

விளம்பர யுத்தம்...

கடந்த ஏப்ரல் முதல் வாரம் தொடங்கிஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் வயாகாம் 18 நிறுவனமும் மாறி மாறி தங்களின் ஒளிபரப்பு சாதனைகளை பெரிய பெரிய விளம்பரங்கள் தந்து வெளியிட்டன. இந்த விளம்பரங்களை இரு பெரும் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் மிகப் பெரிய யுத்தமாகத்தான் பார்க்க வேண்டும்.

கடந்த 15 சீஸன்களைவிடவும் தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்த 16-வது ஐ.பி.எல் சீஸன் வர்த்தகரீதியாக வேறு மாதிரியான பரிணாமத்தை அடைந்திருக்கிறது. 2008-ல் ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் வியாபாரம் செய்யப்பட்ட சமயத் தில், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. முதல் 10 சீஸன்களைக் கடந்த பிறகுதான் தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் உரிமைக்கென ஒரு மதிப்பும் சந்தையும் உருவாகத் தொடங்கியது.

அதிலும், கடைசி ஐந்து சீஸன்களாகத் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் டிஜிட்டல் உரிமையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்கிற ஒற்றை நிறுவனத்திடமே இருந்தது. இதனால் ஒளிபரப்பில் போட்டி, பந்தயம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. ஐ.பி.எல் போட்டிக்கான அத்தனை ரசிகர்களும், வணிக நிறுவனங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்கிற ஒரே ஒரு சேனலைத்தான் நம்பி இருந்தனர்.

தோனி முதல் சாமானியன் வரை...
கிரிக்கெட்டில் சூடுபறக்கும் வியாபாரம்!

ஸ்டார் ஸ்போர்ட்ஸும் வயாகாம் 18-ம்...

தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்; டிஜிட்டல் எனில், அவர்களின் ஹாட்ஸ்டார். இந்தியாவில் இதைத் தாண்டி அதிகாரபூர்வமாக வேறு எந்தத் தளத்திலும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண முடியாது. ஆனால், இந்த நிலைமை இந்த 16-வது சீஸனிலிருந்து அடியோடு மாறியது. இந்த சீஸனுடன் சேர்த்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை மட்டுமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் பெற முடிந்தது. டிஜிட்டலுக்கான உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் ஏலத்தில் வாங்கிவிட்டது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான ஏலத்தொகையைவிட டிஜிட்டல் ஒளிபரப்புக்கான ஏலத்தொகை அதிகம். தொலைக் காட்சிக்கான ஒளிபரப்பு உரிமை ரூ.23,575 கோடி. ஆனால், டிஜிட்டலுக்கான ஒளிபரப்பு உரிமையின் மதிப்பு ரூ.23,758 கோடி. இந்தியாவில் இணையதளத்தின் பயன்பாடு எந்தளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது.

கடந்த ஆண்டில் தொலைக் காட்சி மூலம் ஐ.பி.எல் போட்டி களைப் பார்த்தவர்களைவிட இந்த ஆண்டு தொலைக்காட்சி மூலம் கிரிக்கெட் போட்டி களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறுகிறது. வயாகாம் 18 நிறுவனமும் கடந்த ஆண்டை விட டிஜிட்டலில் போட்டி களைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறுகிறது. ஆக மொத்தத்தில், இந்த இரண்டு நிறுவனங்களும் சொல்வது உண்மை எனில், ஐ.பி.எல் தனக்கான நுகர்வோர் வட்டத்தை இன்னும் பெரி தாக்கிக்கொண்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

கல்லா கட்டும் ட்ரீம் 11 - ஸ்டார்ட்அப்...

இதைக் கடந்து ஐ.பி.எல் சார்ந்து வேறு சில விஷயங் களிலும் அதிக வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருக் கிறது. சில வருடங்களுக்குமுன் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு இப்போது மலைப்புக்குரிய வகையில் வளர்ச்சி அடைந்திருக்கும் ட்ரீம் 11 ஆப், ஐ.பி.எல் போட்டி கள் மூலம் மிகப் பெரிய அளவில் பெரிய அறுவடை செய்து வருகிறது.

வீரர்களின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும் திறனை அடிப்படையாக வைத்து ஆடப்படும் இந்த ட்ரீம் 11 ஆட்டம் கடைக்கோடி யில் இருக்கும் சாமானியர் வரைக்கும் சென்று சேர்ந்திருக் கிறது. 5 ரூபாய், 10 ரூபாய் என சொற்ப தொகையில் இருந்தே இதில் பணம் போட்டு விளையாட முடியும் என்பதால், எளிய மக்களை மிகவும் எளிதாக இவர்கள் கவர்ந்து விடுகிறார்கள்.

இன்றைக்கு கிரிக்கெட் விளையாட்டு எப்படி இருக் கிறது, யார் யார் விளையாடு கிறார்கள், அவர்களின் தனித் திறமை என்ன என்பதை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டு, மிகுந்த மனக் கட்டுப்பாட்டுடன் மிகக் குறைவான பணத்தைக் கொண்டு, இந்த ஆப்பில் பணம் விளையாடுபவர்கள் பெரிதாக நஷ்டம் அடை யாமல் தப்பிக்கிறார்கள். மற்றவர்கள் பணத்தை இழக் கிறார்கள்.

ஆனாலும், இந்த விளை யாட்டில் பணம் கட்டுபவர் களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக்கொண்டுதான் போகிறது. இதனால்தான் ஒரு ஐ.பி.எல் சீஸனுக்கே டைட்டில் ஸ்பான்சராக மாறும்வரை ட்ரீம் 11 வளர்ந் திருக்கிறது.

ட்ரீம் 11 மாதிரியே வேறு சில ஆப்களும் சாமானியர் களைக் குறி வைத்து கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் இன்னுமே கொஞ்சம் முறைப்படுத்தப்பட வேண்டிய தேவை கட்டாயம் இருக்கிறது.

தோனி முதல் சாமானியன் வரை...
கிரிக்கெட்டில் சூடுபறக்கும் வியாபாரம்!

டிக்கெட் விற்பனையில் கொட்டும் கோடிகள்...

ஐ.பி.எல் போட்டியில் டிக்கெட் விற்பனை அமோக மாக இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை என அறிவிப்பு வந்ததுமே ஒரு நாளுக்கு முன்பாகவே அங்கே பல ஆயிரம் பேர் வரிசையில் வந்து உட்கார்ந்துவிடு கின்றனர். இவர்கள் எல்லோரும் கிரிக்கெட் ரசிகர்களா என்றால் இல்லை, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதல்ல இவர்களது நோக்கம்; வரிசையிலேயே நிற்காமல் போட்டியைப் பார்த்து ரசிக்க நினைக்கும் பணக்கார சுகவாசிகளுக்காக அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கித் தருவதுதான் இவர்களின் வேலை. இவர்களில் சிலர் பணம் போட்டு, டிக்கெட் வாங்கி, அதிக விலைக்கு விற்கிறார்கள். இன்னும் சிலர் யாரோ தரும் பணத்துக்கு டிக்கெட் வாங்கித் தந்து, ரூ.1,000 அல்லது ரூ.2,000 கமிஷன் பெற்று, தங்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வயதான மூதாட்டி ஒருவர், தான் வேலை செய்யும் உரிமையாளர் ஒருவருக்கு டிக்கெட் பெற்றுக் கொடுக்க வரிசையில் வந்து நின்று, தலைசுற்றி மயங்கி விழும் கொடுமைகூட நடக்கவே செய்கிறது. சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் உண்மையான விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது என்பதால், இந்தக் கொடுமை எல்லாம் நடக்கிறது.

டீ முதல் டி-சர்ட் பிசினஸ் வரை...

இதையெல்லாம் கடந்து போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றி இருக்கும் ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் போட்டிக்கென்றே பிரத்யேக மாக டி-சர்ட்டுகளை விற்க பிளாட்பாரங்களில் கடை விரித்திருப்போர் எனப் பலருமே ஐ.பி.எல் போட்டியால் நேரடியாக பொருளாதார பயனை அடைகின்றனர்.

ஐ.பி.எல் போட்டி களைப் பொறுத்த வரைக்கும் ‘கடை விரித் தோம், கொள்வாரில்லை’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த மைதானத்துக்கு சென்றாலும் தோனிக்கு ரசிகர்கள் பயங்கர வரவேற்பு கொடுப்பதால், ஐந்தாறு வருடத்துக்கு முன்பு ரிலீசான ‘MS Dhoni - The Untold Story’ படத்தை மீண்டும் ரிலீஸ்  செய்யவிருப்பத்தாக அந்த படக்குழு அறிவித்திருக்கிறது.

ஐ.பி.எல்லின் வியாபார வெளிச்சத்திலிருந்து ஓர் அணுகூட இங்கே தப்பிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்!