அமெரிக்காவை சேர்ந்த டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளின் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். டென்னிஸ் உலகை தங்கள் பேட் (ராக்கெட்) மூலம் ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர் செரீனா.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் தோல்வியை தழுவினார். அதுதான் அவரது கடைசி தொடர் என நம்பப்பட்டது. அவரும் இறுதியில் கண்ணீருடன் போட்டியில் இருந்து வெளியேறினார். ஓய்வுகுறித்து இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
ஆனால், வோக் நாளிதழில், 2017-ல் தன் மகள் ஒலிம்பியாவை வரவேற்ற பிறகு தனது மகளை வளர்ப்பதில் விருப்பம் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற `மெட்’ காலா நிகழ்ச்சியில் தன் கணவர் அலெக்சி ஓஹானியனுடன் கலந்துக கொண்டார். இந்த ஜோடி முழுக்க முழுக்க கறுப்பு நிற கவுன் மற்றும் கோட் அணிந்திருந்தனர். அப்போது சிவப்பு கம்பள வரவேற்பில் பேசிய இந்த தம்பதி, தாங்கள் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அப்போது பேசிய செரீனா, ``நான் நன்றாக இருக்கிறேன். நான் இப்போது முழுமையாக உணர்கிறேன். கார்ல்லின் உடை வடிவமைப்புகள் எல்லாமே சிறப்பானது. அவர் ஒருபோதும் அவரது டிசைன் மூலம் ஏமாற்றியதில்லை. எனவே நாங்கள் இருவரும் இங்கு வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறோம்” என கூறியுள்ளார்.
செரீனாவின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.