Published:Updated:

த்ரில்லர் படம் எடுக்கப்போறீங்களா இயக்குநர்களே... இதைப் படிச்சிடாதீங்க!

தமிழ் சினிமாவின் த்ரில்லர் படம் என்றாலே இப்படித்தான் இருக்குமென தொன்றுதொட்டு தொடரும் படம் பாரம்பர்யங்கள் சில இருக்கின்றன. அது என்ன பாரம்பர்யம், என்ன கலாசாரம் என்பதைப் பார்ப்போம்.

இங்கு ஆண்பாலில் குறிப்பிடப்படும் விஷயங்கள் பெண்பாலாகவும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.

Pshyco killers of tamil cinema
Pshyco killers of tamil cinema

சைக்கோ கொலைகாரர்கள் என்பவர்கள் பென்குயின், ஆப்பிரிக்க யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைப் போல குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் மட்டுமே வாழக்கூடியவர்கள் எனத் தமிழ் சினிமா நம்பிக்கொண்டிருக்கிறது. குளிரான மலைப்பிரதேசங்களின் கட்டைவீடுகளில் கருங்காப்பி குடித்து வாழும் இவர்கள், வீடு முழுக்க பண்டல் பண்டலாக மெழுகுவர்த்தி ஏற்றுவதையே முழுநேர வேலையாக வைத்திருப்பார்கள். பகுதிநேர வேலையாகக் கொலைகள் செய்வார்கள் அவ்வளவுதான்!

பியானோ வாசிப்பது, கிடார் மீட்டுவது என இசைப் ப்ரியர்களாகவும், படம் வரைவது, சிலை செதுக்குவதென கலை ப்ரியர்களாகவும் இருப்பர் இந்தக் கொலைப் ப்ரியர்கள். இவர்கள் எல்லோருமே, அயர்ன் பண்ண சொக்காய், அல்ட்ரா மாடர்ன் டிரெஸ் என கோட் சூட் விளம்பரத்தில் வரும் மாடல்களைப் போல் கம்ப்ளீட் மேனாக இருப்பார்கள். அதேபோல், இவர்களுக்கு துப்பாக்கிப் பெரும்பாலும் பிடிக்காது. அரவை மெஷின், அரம், ரம்பம், ஆக்ஸா பிளேடு என இவர்கள் வேற ரகம். பார்த்து உசாரு!

Pshyco killers of tamil cinema
Pshyco killers of tamil cinema

இதுவரை லுங்கி, அரக்கை பனியன், பட்டாபட்டி டவுசர் போட்ட சைக்கோ கொலைகாரர்களை தமிழ் சினிமா கண்டது கிடையாது. அதேபோல், இவர்கள் எல்லோருமே சிறுவயதில் அனுபவித்த ஏதோவொரு கொடுமையால்தான் கொலைகாரர்களாக மாறியிருப்பார்கள். எனவே, ஒரு ஃப்ளாஷ்பேக் போர்ஷன் லட்சியம், வாய்ஸ் ஓவர் நிச்சயம். சைக்கோ கொலைகாரர்களுக்கும் நாய்களுக்கும் இடையே பல தலைமுறை பந்தம் உண்டு. ஒன்று, நாயைக் கொண்டு அவர்கள் மிரட்டுவார்கள் அல்லது நாய் அவர்களை மிரட்டும். பவ்வ்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

த்ரில்லர் படங்களில் வரும் போலீஸ்கள் எல்லோருமே சொந்த வாழ்க்கையில் நொந்துபோய் கிடப்பார்கள். அதேபோல், இதுவரை எந்த கேஸையும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கண்டுபிடித்ததே கிடையாது. அவர்களுக்கு சல்யூட் அடித்துக்கொண்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிவந்து கொடுக்கும் காவலர்கள்தான் கண்டுபிடிப்பார்கள். அதையும் ஈகோ காரணமாக காது கொடுத்து கேட்காமல் `கோ கோ' என துரத்திவிட்டு பின்னால் வருத்தப்படுவார்கள். திருந்துங்க சார், டீ வாங்கித்தாரேன்.

Pshyco killers of tamil cinema
Pshyco killers of tamil cinema

குறியீடுகள் வைப்பதில் சினிமா இயக்குநர்களுக்கே சவால் விடுவார்கள் இந்த சீரியல் கொலைகாரர்கள். அதை டீகோட் செய்து கண்டுபிடிப்பார்கள் போலிஸ் ஹீரோக்கள். அப்படி கண்டுபிடித்த வில்லனை, பிடிக்கச்செல்கையில் சைரனை அலறவிட்டு செல்வார்கள். அதைக்கேட்டு அலார்ட்டாகும் கொலைகாரரும் அசால்டாக தப்பித்து ஓடிவிடுவார். இப்படி இருவருமே நம்முடைய காதுகளை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு முழம் கணக்கில் பூ சுற்றுவார்கள். மங்காத்தாடா...

கொலை செய்யப்பட்ட உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர்கள் எல்லோருக்கும் ஒரே டயலாக் பேப்பர்தான். `இப்படி ஒரு கொடூரமான கொலையை என் வாழ்க்கையில பார்த்தது கிடையாது. கொலை பண்ணவன் எந்தப் பதற்றமும் இல்லாம, துடிதுடிக்க வெச்சி கொண்ணுருக்கான். அதேபோல், அவன் ஒரு இடதுகை பழக்கம் உடையவனா இருக்கணும். கொலை பண்ணப்பட்டவங்க மூக்கின் நுனியில் சாம்பார் பொடியின் துகள் கிடைச்சது. நிச்சயம், கொலை செய்யப்பட்ட இடத்துக்கு பக்கத்துல ரைஸ் மில் இருக்கணும்.' எப்பூடி..!

Pshyco killers of tamil cinema
Pshyco killers of tamil cinema

இவர்கள் வசிக்கும் வீட்டில் 30 அறைகள் இருக்கும். 3 ஜன்னல்கள் கூட இருக்காது. அதிலும், ஒரு பாத்ரூம் போர்ஷனை கொலை செய்யும் வொர்க்-ஷாப்பாக ஒதுக்கி அதன் சுவரில் சிவப்பு பெயின்ட் அடித்து வைத்திருப்பார்கள். படத்தின் தொடக்கத்தில் கொலை செய்த உடலை, ஏதோ மெடல் வாங்கியதுபோல் அங்கே பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நின்றாலும் உங்கள் பெரியப்பாவுக்கு போனை போட்டு பேச முடிகின்ற நெட்வொர்க், இந்த வீட்டுக்குள் மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

Pshyco killers of tamil cinema
Pshyco killers of tamil cinema

இதுபோல, வேற என்னென்ன மேட்டர்கள் இருக்குன்னு கமென்ட்ல கொட்டி தீர்த்துடுங்க மக்களே...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு