Published:Updated:

ஈஸியா, க்ரேஸியா, லேஸியா... ஃபேஸ்புக், ட்விட்டரில் ஆயிரம் லைக்ஸ் அள்ளுவது எப்படித் தெரியுமா?

சிதம்பரத்தில் சூரியன் உதித்துவிட்டது எனக் காலை வணக்கம் போட்டோ போடுவது, அம்மா சுட்ட தோசை போல வருமா என சென்ட்டிமென்ட் சோடாவில் லெமன் பிழிவது எல்லாம் இந்தக் கொரோனா காலத்தில் பைசாவுக்கு உதவாது. ஒரு லைக்கூட வாங்குவது கஷ்டம் ஃபிரெண்ட்ஸ்.

கொரோனா கால கட்டாய லாக்டெளனில் குடும்பங்கள் சேர்ந்து நேரத்தைச் செலவிடும் பாக்கியம் வாய்த்துள்ளது. இது வரமா, சாபமா என்ற குழப்பத்தில் நாடே ஆழ்ந்துள்ள சூழலில் சாலைகளின் டிராஃபிக் ஜாம் குறைந்து, சோஷியல் மீடியாக்களில் வகைதொகையில்லாமல் புதுப் போக்குவரத்து பொளந்துகட்டுகிறது. வழக்கம்போல சிதம்பரத்தில் சூரியன் உதித்துவிட்டது எனக் காலை வணக்கம் போட்டோ போடுவது, அம்மா சுட்ட தோசைபோல வருமா என சென்ட்டிமென்ட் சோடாவில் லெமன் பிழிவது எல்லாம் இந்தக் கொரோனா காலத்தில் பைசாவுக்கு உதவாது. ஒரு லைக்கூட வாங்குவது கஷ்டம் ஃபிரெண்ட்ஸ்.

சிலரின் போஸ்ட்டுகளைப் பார்த்துவிட்டு இவனுக்கு/இவளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு லைக்ஸ் என உங்கள் மைண்ட்டுக்குள் விஷவாயு கசியும். ஆயிரம் லைக்ஸ் என்ன காம்ரேட்களே, இந்தக் கட்டுரையில் இருக்கும் அத்தனை ஃபார்முலாக்களையும் பயன்படுத்தி போஸ்ட் போட்டால் பத்தாயிரம் லைக்ஸ்கூட அசால்ட்டாக விழும்.

1. சோஷியல் மீடியாவில் ஒருவருக்கு எவ்வளவு லைக், கமென்ட் அல்லது ஷேர்கள் கிடைக்கிறதோ அதைப் பொறுத்தே அவரின் மதிப்பு, அந்தஸ்த்து, கெத்து எல்லாமே. முதலில் உங்களுடைய நட்பு வட்டத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில், 1,000 பேர் இருந்தால்தான் குறைந்தது 50 லைக்காவது விழும் என்பதுதான் மார்க் சக்கர்பெர்க் சொல்லித்தந்திருக்கும் சூட்சுமம்.

2. ஆரம்பகாலங்களில் உங்களை யாருக்கும் பெரிதாகத் தெரியாது என்பதால் யாரோ ஒரு புதியவரின் போஸ்ட் பிடித்திருந்தாலும் லைக் போட யாருக்கும் கைகள் எளிதில் வராது. குறிப்பாக, நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் 'வாய்ப்பில்ல ராஜா' என்ற உண்மையை நீங்கள் உளமாற உணர வேண்டும். அதனால் நீங்கள் முதலில் எல்லோருக்கும் தெரிந்த முகமாக, பழகியவராக மாற வேண்டும்.

Goundamani
Goundamani

3. ஊரார் பதிவுகளுக்கு நீங்கள் தாராளமாக லைக் அல்லது ஸ்மைலிகளைப் போட்டு ஊக்குவிக்க உங்கள் பதிவுகளுக்கும் நியூட்டனின் மூன்றாவது விதிப்படி நல்லது நடக்கும். உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள வஸ்தாதுகள், முன்னோடிகளின் பதிவுகளில் உங்கள் கருத்தையோ, கவுன்ட்டரையோ போடுவதன் மூலம் அந்த இளநி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை உங்கள் கடைபக்கம் கயிறுபோட்டு இழுக்கலாம். கொஞ்சம் கமென்ட்டுகள், கவுன்ட்டர்கள், மீம்கள் எல்லாம் போட்டு தொழில் கற்றபின் தனியாகக் கடை போடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. சினிமா, சமூகம், அரசியல், இலக்கியம்... இதில் உங்களின் களம் எதுவென முதலில் முடிவு செய்ய வேண்டும். டார்கெட் ஆடியன்ஸ் மிகவும் முக்கியம். அடுத்து உங்கள் நட்பு வட்டத்தின் ப்ரைம் டைம் அதாவது போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்கள் எதுவென தெரிந்து வைத்து அந்த நேரத்தில் கருத்துகளை கச்சிதமாகக் களமிறக்க வேண்டும்.

Meme
Meme

5. அன்றைய டிரெண்டிங் அல்லது வைரல் டாபிக்கில் கருத்தை சொல்ல வேண்டுமானால் டைமிங் மிகவும் முக்கியம். பால் விலை ஏறிப்போனதை பற்றி எல்லோரும் காலையில் கலக்கோ கலக்கென கலக்கி, கழுவி, கவிழ்த்துவிட்டு அடுத்து பெட்ரோல்/டீசல் டாப்பிக் போனபின் நீங்கள் ஆமைபோல வந்து பால் பாக்கெட் ட்வீட் போட்டால் உங்கள் போஸ்ட் கரிகாலன் மேஜிக் ஷோபோல காத்தாடும். காய்ந்துபோன மிளகாய் பஜ்ஜியின் சுவை அறியாதவரா நீங்கள்?

6. பெருவிரல் கீழே இருந்து மேலே ஸ்க்ரோல் செய்யும் 1 - 2 விநாடி இடைவெளிக்குள் கவனத்தை ஈர்க்க வேண்டியது உங்கள் சாமர்த்தியம். அப்படியே வந்தாலும் பிரபலம் அல்லாத ஒருவருக்கு அதிகபட்சம் 5 - 30 விநாடிகள்தான் ஒருவர் ஒதுக்க முடியும், அதற்குள் உங்கள் கருத்துகளை க்ரிஸ்ப்பாக ப்ரசன்ட் செய்ய வேண்டும். இங்கே பிரசன்டேஷன்தான் முக்கியம் ஃபிரெண்ட்ஸ்.

7. ஃபேஸ் வேல்யுவுக்காக போட்டோக்களுக்கு எப்போதும் அதிக லைக், கமென்ட்ஸ்கள் கிடைக்கும். அதனால் அவ்வப்போது சில ஃபோட்டோக்களையும் சூடாக இறக்க வேண்டும். உங்கள் போஸ்ட்டுக்கு விழும் லைக்/கமென்டுகள் உங்கள் போஸ்ட்டை அடுத்தவர் டைம்லைனுக்கும் இழுத்துப் போகும். இது உங்கள் போஸ்ட் கூட்டத்தில் அமிழ்ந்துவிடாமல் அடிக்கடி அடுத்தவர் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க உதவும். இது இயல்பாக நிகழும் அல்லது நீங்களே எதார்த்தமாக உங்கள் போஸ்ட்டில் யாருக்காவது கமென்ட்டோ லைக்கோ போட்டு மீண்டும் அதை பதார்த்தமாக ப்ரைம்டைமில் டைம்லைனுக்கு இழுத்து வரலாம்.

8. தொடர்ந்து என்கேஜிங்காக இயங்குவதோடு, குவாலிட்டியான கன்டென்ட் கொடுப்பதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு லைக்ஸ் அதிகமாகும். கொஞ்ச காலத்துக்கு அமைதியாக 'அமைதிப்படை' அமாவாசையாய் நுனி சீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 'சோழர் பரம்பரையில் மற்றும் ஓர் எம்.எல்.ஏ' என நாகராஜ சோழன்போல பிரபலமாகி பின் ஒரு இன்டலெக்சுவல் அவதாரம் எடுத்து விட வேண்டுமென்பது ஃபேஸ்புக்கின் முக்கிய சம்பிரதாயங்களில் ஒன்று. அப்போதுதான் உங்களுக்கு மவுஸும் லைக்ஸும் கூடும்.

Vadivelu, Arjun
Vadivelu, Arjun

9. இந்த அந்தஸ்த்தை அடைந்த பின் நீங்கள் எந்த போஸ்ட்டுக்கும் சென்று பதில் முறை செய்யத்தேவை இல்லை. இனிமேல் எல்லாம் அப்படித்தான் என மாறிப்போகும். இதுல எப்பிடிண்ணே லைட்டு எரியும் எனக் கேட்கிறீர்களா? கொஞ்சம் இன்னும் டீப்பாக அலசுவோம்.

A-வுக்கு பின் B என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை ஏன் என விளக்கினால்... நீங்கள் பிகினர் லெவல் இன்டலெக்சுவல்.

A-வுக்கு பின் B என்பதொரு முட்டாள்தனம் எனத் தோசையை லைட்டாகத் திருப்பிப் போட்டால்... ஜூனியர் லெவல்.

A என்பதே இல்லாத ஒன்று... Z என்பதுதான் முதற்றே உலகு என அப்படி மொத்தமாக கல்லையே புரட்டிப் போட்டால்... யெஸ் யெஸ்... இதுதான் அட்வான்ஸ்ட் லெவல்.

10. முதலில் மசாலா படங்கள், தமிழ் சீரியல்கள் பார்ப்பது என சராசரி தமிழன் செய்யும் எந்தக் காரியங்களையும், பொது புத்தியையும் கலாய்ப்பதன் மூலம் சுலபமாக உங்களுக்கு அந்த புத்திசாலி பட்டம் கிடைத்துவிடும். ஊரே ஒரு எதார்த்தப் படத்தை கழுவி ஊற்றினால், நீங்கள் அதற்கு நேரெதிர் ஸ்டாண்ட் எடுத்துக் கொண்டு, ''சமூகத்தின் மீதான போலி பிம்பங்களையும் பாசாங்குகளையும் தனது படைப்பின் மூலம் அகவெழுச்சியின் நீட்சியாக, விளிம்பு நிலை மக்களின் விழுமியங்களையும், வாழ்வியலின் அழகியலோடு உள்ளொளி தரிசனம் தந்து" என இலக்கிய ஜாங்கிரி பிழிந்து நலங்கு வைத்தால், மிடியாக்கர் உலகம் உங்கள் முன் மண்டியிடும்.

11. ஒரு வேளை அது ஊரே கொண்டாடிய ஒரு படமாக இருந்தால், உதாரணமாக 96' படம் என்றால் அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியது இதற்கு நேரெதிர் யுக்தி. ''ஓவர் ரேட்டட்... முரளியிஸ, மாடர்ன் ஏஜ் விக்ரமனிஸ மூவி'' என ஒரே அடியாக பொடணியிலேயே போட்டுப் பொளக்க வேண்டும்.

Goundamani
Goundamani

12. டேமில் படங்கள் பார்ப்பதையே கூடுமானவரை மறந்தோ, மறைத்தோ விட வேண்டும். புரிகிறதோ இல்லயோ உலகப்படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட வேண்டும். சப் டைட்டிலோடு படத்தையும் உத்து உத்து பார்த்துவிட்டு படம் முடிந்ததுகூடத் தெரியாமல் திருதிருவென திரையைப் பார்த்தபடி தேமேவென உட்கார்ந்திருந்தாலும் கூகுள் இருக்கிறது பிரச்னையில்லை.

13. அந்தப்படம் பற்றிய விளக்கவுரைகளைக் கூகுள் செய்து படித்துவிட்டு, ''அதாவது இப்ப பாத்தீங்கன்னா'' என குன்சாக இங்கே உங்கள் சொந்த அபிமானத்தோடு சீரியஸாக விளக்கி ''யாரு சாமி இவன்?" என எல்லாரும் மூக்கில் விரல் வைக்க விட வேண்டும். (ஆம், கிளவுஸோடுதான்)

14. ஒருவேளை எல்லோரும் உலகப் படங்களுக்கு போஸ்ட்டர் ஒட்டினால் நீங்கள் மலையாளம், கன்னடம், மராட்டி, பெங்காலி, போஜ்புரி என வடக்கு வரை பயணித்து அப்படிப் பார்க்கும் எந்த ஒரு படத்தையும் 'ஆம், அது நிகழ்ந்துவிட்ட அற்புதம்' என்றும் நிறுவலாம்.

15. வடக்குப் பக்கமும் க்ரவுட் அதிகமானால் தமிழிலேயே கொஞ்சம் பின் நோக்கி 'அவள் அப்படித்தான்,' 'அக்ரஹாரத்தில் கழுதை,' 'நெஞ்சத்தைக் கிள்ளாதே,' 'நாம் இருவர்,' 'அந்த நாள்,' 'அதே கண்கள்,' 'இரத்த திலகம்' என ரிவர்ஸ் கியரில்கூட ஃபுல் ஸ்பீடில் ஃப்ளாஷ்பேக் அடிக்கலாம்.

vadivelu
vadivelu

16. இசை/பாடல்களை எடுத்துக்கொண்டால் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும் பாடல்களை நமக்குப் பிடிக்கும் எனச் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதேபோல் மற்றவர்களுக்குப் பிடிக்காத பாடல் என்றால் இதை ரசிக்க ஒரு தனி ரசனை வேண்டும் என்றுகூட பொங்கல் வைக்கலாம்.

17. பாடலின் இடையிசையில் 2.42 நிமிடத்தில் வரும் பேஸ் கிட்டாரின் இசை நுணுக்கத்தைப் பற்றி எங்காவது கேட்டுவிட்டு வந்து நீளமாக இங்கே விளக்கினீர்களேயானால் சொசைட்டிக்கு உங்கள் முன் சரண்டராவதைத் தவிர வேறு வழியில்லை.

18. யாராவது இளையராஜா போன்ற மேதையைப் புகழ்ந்தால், உடனே மறுத்து 'ஆப்பிரிக்காவில் உள்ள நாட்டார் இசையை கேட்டிருக்கிறீர்களா... கடவுளே அருகில் உட்கார்ந்து வாசிப்பதைப் போன்றிருக்கும்' என ஏதாவது யூடியூப் டாக்குமென்டரியை மேற்கோள்காட்டி எதிராளியை மெர்சலாக்கலாம்.

19. கொஞ்சம் அசதியாக இருந்தால் சுஜாதா, மணிரத்னம் எனப் பலர் லெஜண்டுகளாக நினைக்கும் சிலரை லெஃப்ட்டில் டீல் செய்து பயிற்சியில் ஈடுபடலாம். படிப்பவர்கள் 'இந்தத் தம்பிகிட்ட ஏதோ ஷக்தி இருக்குது' என எண்ணி மிரள வாய்ப்புண்டு.

vadivelu, kovai sarala
vadivelu, kovai sarala

20. செய்தித்தாள், வாரப்பத்திரிகை தவிர்த்த புத்தக வாசிப்பு இருந்தால் நீங்கள் அதிகம் பிரயத்தனம் செய்ய வேண்டாம். அதுவே மிகப் பெரிய பலம். புத்தக அலமாரிகளின் அணிவகுப்பை பறை சாற்றலாம். அது உங்கள் வீட்டு அலமாரியாய்கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் சொல்லி உங்களுக்குப் புரிய வேண்டியதில்லை. இப்போது அட்வான்ஸ் லெவலில் உள்ள உங்கள் மனம் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறது உங்களுக்குத்தெரியும். ஒரு ஹைஃபை சொல்லுங்க ஃபிரெண்ட்ஸ்.

`` `முந்தானை முடிச்சு' ரீமேக்குக்கு நல்ல இயக்குநரை தேடிட்டு இருக்கேன்!'' - சசிகுமார் #VE
இப்போதே உங்களுக்கு ஒரு 500 லைக்ஸ் கியாரன்ட்டி என்கிற நம்பிக்கை வந்திருக்கும். 'பிராக்டீஸ் மேக்ஸ் எ மேன் பர்ஃபெக்ட்' என்கிற தத்துவப்படி களத்தில் இறங்குங்கள். களமாடுங்கள். க்ரவுடைக் கூட்டுங்கள். அதேசமயம் பொறுப்புணர்வு மிகவும் முக்கியம் ப்ரோ... கொஞ்சம் பிசகினாலும் கிட்னியை சட்னியாக்கிவிடுவார்கள் நண்பர்களே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு