Published:Updated:

`முப்படைகளுக்கும் ஒரே தளபதி‘ - சுதந்திர தின விழாவில் மோடி அறிவிப்பு

Modi
Modi ( Doordarshan )

ஆறாவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றியுள்ளார் மோடி. இதன் மூலம், முன்னதாக வாஜ்பாய் செய்த சாதனையைச் சமன் செய்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து செங்கோட்டை வந்தடைந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

Modi
Modi
Doordarshan

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோட்டையில் கொடியேற்றிவிட்டு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இந்த நல்ல நாளில் நாட்டில் உள்ள அனைத்துச் சகோதர சகோதரிகளும் மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என விரும்புகிறேன். நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பலர் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இன்று நான் அனைவரையும் நினைவுகூர விரும்புகிறேன். சுதந்திர தினம் கொண்டாடப்படும் இதே நாளில் பல மாநிலங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Modi
Modi
Doordarshan

இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். எங்கள் புதிய அரசு பதவியேற்று பத்து வாரங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை. ஆனால், இந்தக் குறுகிய காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவான 370, 35A -வை நீக்கியது சர்தார் வல்லபபாய் படேலின் கனவை நனவாக்கும் முதல் படி.

நாங்கள் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளோம். இந்த அரசு விவசாயிகளுக்காக வேலை செய்கிறது. உதவித் தொகை மற்றும் ஓய்வூதியங்கள் வழங்குவதன் மூலம், இந்த அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வேலை செய்துள்ளது.

Modi
Modi
Doordarshan

நீர் பற்றாக்குறையைப் போக்க ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2013-14-ம் ஆண்டுகளில் நாட்டின் உணர்வைப் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்தேன். இந்த தேசத்தை மாற்ற முடியுமா என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்த ஐந்து வருடக் கடின உழைப்புக்குப் பிறகு 2019-ம் ஆண்டு ஒட்டு மொத்த தேசமும் எங்கள் பணிக்குச் சாட்சியாக இருக்கிறது. இப்போது மக்களின் உணர்வு மாறி ’என் தேசம் நிச்சயம் மாறும்’ என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

என்னாலும் தேசத்தை மாற்ற முடியும் என அனைத்துத் தனி மனிதர்களும் சிந்திக்கின்றனர். நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் நம்பிக்கை, எங்களுக்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. இந்த முறை நடந்த தேர்தலில் எந்த அரசியல் தலைவர்களும் போட்டியிடவில்லை. எம்.பியும் இல்லை மோடியும் இல்லை. ஆனால் இந்திய மக்கள் தங்களின் கனவுகளுக்காக, ஆசைகளுக்காகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர்.

Modi
Modi
Doordarshan

ஓர் அரசாக பிரச்னைகளை அதன் வேரிலிருந்து அகற்ற முயற்சி செய்கிறோம். முத்தலாக் மூலம் பல இஸ்லாமிய பெண்கள் தாழ்த்தப்பட்டு, சுதந்திரமில்லாமல் இருந்தனர். பல இஸ்லாமிய நாடுகளில் எப்போதோ இந்தச் சட்டம் தடை செய்யப்பட்டுவிட்டது. சில காரணங்களால் இந்தியாவில் அதை ஒழிக்கவில்லை. ஆனால் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக ஏன் குரல் எழுப்பக் கூடாது என நினைத்து இதைச் செய்து முடித்துள்ளோம்.

``2024-ல் என்னை சார்ந்திருக்க வேண்டாம்!” - எம்.பி-க்களுக்கு மோடி சொன்ன அட்வைஸ்

ஜனநாயகத்தின் உணர்வாக, அம்பேத்கரின் உணர்வாகச் சிறப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் பிரச்னைகளை புறக்கணிக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் ஆட்சி செய்த எந்த அரசும் செய்யாததை, புதிதாகப் பதவியேற்றுள்ள எங்கள் அரசு வெறும் 70 நாளில் செய்து முடித்து, இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Modi
Modi
Doordarshan

சுதந்திரம் குறித்த எனது யோசனை என்னவென்றால், அரசாங்கம் மெதுவாக மக்களின் வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும். இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்த வேண்டும். மக்களின் வாழ்வில் அரசின் எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது. அதிக தேவையின் போது மட்டுமே அரசு செயல்படவேண்டும். கடந்த 70 வருடங்களில் நாம் 2 ட்ரில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளோம். வருங்காலத்தில் இதை ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையை இது எனக்கு வழங்கியுள்ளது.

பயங்கரவாதத்தைப் பார்த்து இந்தியா ஒரு போதும் அமைதியாக இருக்காது. நமது அண்டை நாடுகளான பங்களாதேஷ், சீனா போன்றவை தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றன. இந்தியாவில் உள்ள முப்படைகளையும் கண்காணிக்கும் ஒரே தளபதி விரைவில் நியமிக்கப்படுவார். இது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்தியாவைத் தனித் தனியாக நினைக்க முடியாது. எனவே நாட்டின் மூன்று பாதுகாப்பு வடிவங்களும் ஒன்றிணைய வேண்டும்.

Modi
Modi
Doordarshan

வரும் காந்தி ஜயந்தி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படவுள்ளன. பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும். நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும். ரசாயனப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். விண்வெளித் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். நமது சந்திரயான் -2 இன்று நிலவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருகிறது. ஜெய்ஹிந்த்” எனப் பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு