Published:Updated:

`நீங்க உள்ளே வரக் கூடாது!' - கர்நாடகக் கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு

கர்நாடகத்தில் ஆதிக்க சமுதாயத்தினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் நடந்துள்ளது.

Temple
Temple ( Representative image )

கர்நாடக மாநிலம் கடங்கா கிராமத்தில் உள்ள 70 வருடங்கள் பழைமையான கோயிலை புனரமைக்கும் பணி நடந்துவந்தது. கோயில் புனரமைப்பு பணிக்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களிடமும் நிதி வசூலித்து பணிகள் நடந்துவந்துள்ளது. இந்தப் பணிகள் முடிந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர் கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அப்போது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை கோயிலின் உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.

karnataka temple
karnataka temple
The Hindu

ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளனர். காலணிகளுடன் ஒப்பிட்டு தங்களை பேசியதாக தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் முயற்சியால்தான் இந்த மக்கள் கோயிலில் வழிபாடு செய்துவந்ததாகத் தெரிகிறது. கோயில் பராமரிப்புப் பணிகளுக்கு அனைவரிடமும் நிதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் அந்த எம்.எல்.ஏ காலமானார். இந்த நிலையில், பழைய வழக்கத்தைத் தொடர ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் முயன்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக செயற்பாட்டாளர்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக காவல்துறையினரை அழைத்துக்கொண்டு தாசில்தார் அந்தக் கிராமத்துக்குச் சென்று இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

karnataka temple
karnataka temple

கோயிலுக்கு முன்பாக இருதரப்பினருடனும் நடத்திய பேச்சுவார்த்தையில், `சமூகத்தைக் காரணம் காட்டி கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் கோயிலில் சென்று வழிபாடு நடத்த வேண்டும் இல்லையென்றால் யாரும் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்' என எச்சரித்துள்ளனர்.