Published:Updated:

`34 ஆண்டுகள் பணி; 2 முறை குடியரசுத் தலைவர் விருது!' - இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி மறைந்தார்

தன் அப்பாவைப் போல, காவல்துறையில் உதவி தேவைப்படுகிற சாமான்ய மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வந்தவர்!

Kanchan Chaudhary Bhattacharya
Kanchan Chaudhary Bhattacharya ( amarujala.com )

இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி கஞ்சன் செளத்ரி பட்டார்ச்சார்யா தற்போது நம்முடன் இல்லை. 1947-ல் இமாசலில் பிறந்த இவர், 1973-ல் உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்.ஸாக தேர்வானார். கிரண்பேடிக்குப் பிறகு, அதாவது, இந்தியாவின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ். கஞ்சன் செளத்ரிதான். தன்னுடைய சிறந்த காவல்துறை சேவைக்காக இரண்டு முறை ஜனாதிபதி பதக்கமும், சிறந்த பெண் சாதனையாளாருக்கான ராஜீவ் காந்தி விருதையும் பெற்ற கஞ்சன் செளத்ரி, காவல்துறைக்கு வந்ததன் பின்னணியில் வலி மிகுந்த காரணம் ஒன்று இருக்கிறது.

வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மோசடி செய்யும் படித்த, உயர் பதவிகளில் இருக்கிற ஒயிட் காலர் கிரிமினல்களை அடையாளம் காண்பது போன்ற சிக்கலானப் பணிகள்தான் கஞ்சனின் விருப்பம்.

கஞ்சனின் அப்பா, மதன் மோகன் செளத்ரி சொத்துத் தகராறு ஒன்றில் படுகாயம் அடைகிறார். இதுதொடர்பாக, கஞ்சனின் அப்பா காவல்துறையில் புகார் செய்ய, அதைப் புகாராக பதிவதற்கும் எந்தக் காவல்துறை அதிகாரியும் முன்வரவில்லை. காவல்துறையின் உதவி தேவைப்படுகிற சாமான்ய மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிக்கிறார். அப்போது, கஞ்சன் ஆங்கிலத்திலும் வணிக மேலாண்மையிலும் மாஸ்டர் டிகிரி முடித்திருந்தார்.

உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்., இந்தியாவின் முதல் முதல் பெண் அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், பிறகு பெண் டி.ஜி.பி., முதல் பெண் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்று பல 'முதல்'களுக்கு சொந்தக்காரர் கஞ்சன் செளத்ரி. பிடிக்க முடியாத கொலைக் குற்றவாளிகளைப் பிடிப்பது, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மோசடி செய்யும் படித்த, உயர் பதவிகளில் இருக்கிற ஒயிட் காலர் கிரிமினல்களை அடையாளம் காணுதல் போன்ற சிக்கலானப் பணிகள்தான் கஞ்சனின் விருப்பம். இதில் குற்றவாளிகளைப் பிடித்தும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

Kanchan Chaudhary Bhattacharya
Kanchan Chaudhary Bhattacharya
IPS Association

கணவர் தேவ் பட்டார்ச்சார்யா, இரண்டு மகள்கள் என்று மகிழ்ச்சியான குடும்பத்துக்குச் சொந்தக்காரர். கவிதை எழுதுவதில் ஆர்வம், நாடகங்களில் பங்கேற்பது என கஞ்சனின் பர்சனல் பக்கமும் இன்ட்ரஸ்டிங்கானதுதான். இவருடைய வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஒரு சீரியலும் எடுக்கப்பட்டது. தன் தங்கை கவிதா செளத்ரியால் எடுக்கப்பட்ட அந்த சீரியலில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தும் கொடுத்தார் கஞ்சன். வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக மும்பை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த கஞ்சன், நேற்று இரவு மறைந்தார். 'அவருடைய தலைமையின் கீழ் நாங்கள் சுதந்தரமாக வேலை பார்த்தோம்; எங்கள் நேர்மைக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத தலைமை அவர்' என்று கஞ்சனுக்கு புகழ் மாலை சூட்டுகிறார்கள் சக காவல்துறையினர்.

சல்யூட் மேம்.