Published:Updated:

கணபதி சிலையும் மொகரம் ஊர்வலமும் சந்தித்த தருணம்! - சில்வாஸா நெகிழ்ச்சி

நாட்டில் இந்து, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு சில்வாஸா நகரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

மொகரம் மற்றும் கணபதி ஊர்வலம் சந்தித்த காட்சி
மொகரம் மற்றும் கணபதி ஊர்வலம் சந்தித்த காட்சி

குஜராத் அருகேயுள்ள குட்டி யூனியன் பிரதேசம், தத்ரா ஹவேலி நாகர். இதன் தலைநகர் சில்வாஸா. கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சில்வாஸாவில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகரம் முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, அன்றைய தினத்தில் கரைக்கப்பட்டன. அதே நாளில்தான் இஸ்லாமிய மக்களின் மொகரம் தியாகத் திருநாள் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் ஊர்வலமாகச் செல்வது வழக்கம். சில்வாஸாவில் சாகித் சவுக் என்ற பகுதியில், சாலையின் ஒரு பக்கத்தில் மொகரம் ஊர்வலமும் மற்றொரு பக்கத்தில் கணபதி ஊர்வலமும் நடைபெற்றன.

சில்வாஸா நகரம்
சில்வாஸா நகரம்

இதனால், என்ன நடக்குமோ... என்று போலீஸாரிடத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால், நடந்ததோ மகிழ்வான நிகழ்வு. இரு மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது ஏறி நின்று ஒருவருக்கொருவர் கரம் குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்தக் காட்சியைப் படம்பிடித்த இளைஞர்கள், சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். `வாட் எ லவ்லி பிக்சர்... இதுதான் என்னுடைய தாய்நாடு' என்று பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தனர்.

சில்வாஸா பகுதி இஸ்லாமிய மக்கள் தலைவர் ஆரிஃப் மேமன் கூறுகையில், ``நானும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றேன். அந்தப் புகைப்படத்தை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினேன். சிறிது நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அந்தப் புகைப்படத்தை ஷேர் செய்திருந்தனர்'' என்றார். நாட்டில் இந்து, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு சில்வாஸா நகரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றிய சில மணி நேரத்தில் வைரலானது.
ஆரிஃப் மேமன்

இரு சமய மக்களும் இணைந்து மகிழ்ச்சியுடன் இந்தக் குட்டி நகரத்தில் வாழ்கின்றனர். சிறிய மதக் கலவரம்கூட இங்கே ஏற்பட்டதில்லை. இரு மத விழாக்களிலும் சாதி, சமய வேறுபாடின்றி மக்கள் அன்புடன் பங்கேற்கின்றனர்.