Published:Updated:

தவளைகளுக்கு டைவர்ஸ்! - பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் தவளை

விவாகரத்து சடங்கு முடிந்ததும் பெண் தவளையை அதன் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

Frog
Frog ( Pixabay )

மழையில்லாமல் வறட்சி நிலவும் காலங்களில் மழை வேண்டி கழுதைகளுக்கோ தவளைகளுக்கோ திருமணம் செய்துவைக்கும் சடங்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மழை அதிகமாகப் பெய்கிறது என்று தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

Rain flood
Rain flood
Pixabay

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரின் அருகில் இருக்கும் பகுதியான இந்திரபுரியில் ஓம் சிவ சக்தி சேவா மண்டல் என்ற கோயில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய பருவமழை பெய்யாமல் வறட்சி நிலவியதால் இந்தக் கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகள் இரண்டு தவளைகளுக்கு ஜூலை மாதத்தின் நடுவில் திருமணம் நடத்தி வைத்தனர்.

இதனிடையில் பருவமழை தொடங்கி வரலாறு காணாத அளவுக்கு மழைப் பொழிவைக் கொடுத்து வருகிறது. 58 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான மழைப் பொழிவு மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் மழை நின்றபாடில்லை. அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் வானிலை ஆய்வு மையம் வழங்கியிருக்கிறது.

திருமணம் செய்துவைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து பிரித்துவைக்கும் சடங்கைச் செய்தால் மழையின் தீவிரம் குறையும் என்று எங்கள் கோயிலின் பூசாரி ஆலோசனை கொடுத்தார்.
கோயில் நிர்வாகிகள்

தவளைக்குத் திருமணம் செய்துவைத்ததால்தான் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருவதாகவும், அதன் தீவிரத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் ஆலோசித்தனர்.

``ஆண், பெண் தவளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தால் அவர்களை வாழ்த்த இந்திரன் மழையை அனுப்பி வைப்பார் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்று நம்பிக்கை உள்ளது. நாங்கள் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த மறுநாளே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் கனமழை தொடர்ந்து நீடித்து வந்தது. எங்கள் மாநிலத்துக்குத் தேவையான அளவுக்கும் மேல் மழை பெய்து வருவதால் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

Frogs
Frogs
pixabay

திருமணம் செய்துவைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து பிரித்துவைக்கும் சடங்கைச் செய்தால் மழையின் தீவிரம் குறையும் என்று எங்கள் கோயிலின் பூசாரி ஆலோசனை கொடுத்தார்" என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.

ஏற்கெனவே திருமணம் செய்துவைத்த தவளைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்பதால், தவளைகளைப் போன்று களிமண்ணில் செய்த இரண்டு பொம்மைகளுக்கு அந்தச் சடங்கைச் செய்துள்ளனர். பச்சை நிறத்தில் சற்று பெரிய அளவில் செய்யப்பட்ட தவளை பொம்மைகளை வைத்து மந்திரங்கள் முழங்க விவாகரத்துச் சடங்கு நடைபெற்றது.

frog
frog
pixabay

விவாகரத்து சடங்கு முடிந்ததும் பெண் தவளையை அதன் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு இரண்டு பாத்திரத்தில் மழை நீரைச் சேகரித்து அதில் இரண்டு தவளைகளையும் தனித்தனியாக மூழ்கடித்து சடங்கை நிறைவு செய்தனர்.