Published:Updated:

இனமென பிரிந்தது போதும்... ரன் ரேட் ஒன்றே தீர்வாகும்! சேஃப் கேம் ஆன #DCvRCB!

"யெப்பா... இவிய்ங்க வேணும்னே 17.4 ஓவர்ல மேட்ச முடிச்சுடக் கூடாதுன்னு ஆடுறாய்ங்கப்பா" என கொல்கத்தா ரசிகர்கள் கொலைவெறி ஆனார்கள். ஹைதராபாத் ரசிகர்களும் காண்டானார்கள். #DCvRCB

`யார் செகண்ட் இன்னிங்ஸ் ஆடினாலும் 19, 20 ஓவர்லதான் மேட்சை முடிக்கோணும்' என சாதா சத்தியம் அல்ல, டிக் அடித்து சத்தியம் செய்துவிட்டன டெல்லியும் பெங்களூரும். நமக்குத்தான் நேற்று அபுதாபியில் நடந்தது 55-வது ஐபிஎல் மேட்ச். கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ரசிகர்களுக்கு அது ஸ்க்ரிப்ட் எழுதி நிகழ்த்திய சீரியல். ''ஜோடி போட்டு கேடி வேலைப் பார்க்குறீங்களாடா பாடிசோடாக்களா'' என செம கடுப்பில் இருக்கிறார்கள். சரி, சீரியலின் நேற்றைய எபிசோடில் அப்படி என்னதான் நடந்தது?

இதுவரை: `நீ பாயின்ட் டேபிள்ல மேல போ' என ஆர்சிபியை போகவிட்டு புறமண்டையில் அடித்தன மற்ற டீம்கள். கடைசியாக, ஹாட்ரிக் தோல்விகள். டெல்லியின் கதை இன்னும் சோகம். எப்படி விதவிதமாக தோற்கலாம் என ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் அளவிற்கு வேலையைக் காட்டின. அதனால், இந்த இரு அணிகளுமே `இனமென பிரிந்தது போதும். ரன் ரேட் ஒன்றே தீர்வாகும்' என முடிவெடுத்துள்ளன.

நேற்று: டாஸ் வென்ற ஷ்ரேயாஸ், `நீ ஆடு தல' என கோலியை பேட்டிங் செய்ய அழைத்தார். ஹெட்மயர் ஃபார்முக்கு வந்தால் 15 ஓவரிலேயே மேட்சை முடித்துவிடுவார். துஷார் பந்து வீசினால் எதிரணி 15 ஓவரில் மேட்சை முடித்துவிடும் என்பதால், இருவரையும் அணியில் இருந்து தூக்கிவிட்டு டேனியல் சாம்ஸ், அக்ஸர் பட்டேல் ஆகியோரை அணியில் சேர்த்தார் ஷ்ரேயாஸ். 19-வது ஓவர் வரை மேட்ச் நடந்தே ஆக வேண்டும் என்பதால், `எங்க நம்ம ஆட்டோக்கார தம்பியைக் காணோம்' எனத் தேடி, ரஹானாவைக் கொண்டுவந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். தேல்பத்திரிசிங். கோலியும், துபே மற்றும் சாபஷ் அகமது ஆகியோரை அணிக்குள் நுழைத்து திட்டத்திற்கு வலு சேர்த்தது.

#DCvRCB
#DCvRCB

ஃபிலிப்பும் படிக்கல்லும் பெங்களூரின் இன்னிங்ஸைத் துவங்கினர். முதல் ஓவரை வீசவந்தார் டெல்லியின் சாம். 4 ரன்கள் கிட்டின. இரண்டாவது ஓவரை வீசவந்தார் ரவிச்சந்திரன் அஷ்வின். 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன. மீண்டும் 3-வது ஓவரை வீசினார் சாம். இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை மிட் ஆன் திசையில் அறைந்தார் ஃபிலிப்ஸ். அடுத்து நார்க்கியா வந்தார். ஓவரின் 2வது பந்தை, கவர் திசையின் மேல் பவுண்டரிக்கு தூக்கி அடித்தார். 5 வது ஓவரை வீசவந்தார் ரகிட ரகிட ரபாடா ஊ..! ஓவரின் முதல் பந்திலேயே ஃபிலிப் அவுட். லட்டு கேட்சை லாகவமாகப் பிடித்தார் ப்ரித்வி ஷா. அதே ஓவரில், பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியையும் விரட்டியிருந்தார் படிக்கல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நார்க்கியா வீசிய ஆறாவது ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் கோலி ஒரு பவுண்டரியை வெளுக்க, ஷார்ட் தேர்ட் மேன் திசையில் படிக்கல் ஒரு பவுண்டரியை விரட்டினார். பவர்ப்ளேயின் முடிவில், 40/1 என `ஃப்ரெண்ட்ஸ்' சூர்யாவைப் போல் சுவரைத் தேய்த்துக்கொண்டிருந்தது பெங்களூர். 7-வது ஓவரை வீசவந்தார் அஷ்வின். பேக்வார்ட் பாயின்ட் மற்றும் ஷார்ட் தேர்டுக்கு இடையில் ஒரு பவுண்டரியை வெட்டினார் படிக்கல். அக்ஸர் வீசிய 8-வது ஓவரில், பவுண்டரிகள் எதுவும் இல்லை. அஷ்வின் வீசிய 9-வது ஓவரிலும், அதே கதைதான். இவ்வளவு ஏன், அக்ஸர் வீசிய 10-வது ஓவரும் அப்படித்தான். பவுண்டரிகளே இல்லை. இந்த கேப்பில், கோலி கொடுத்த கேட்சையும் டிராப் செய்திருந்தார் நார்க்கியா. `நல்லாருக்குய்யா... நார்க்கியா!' என ஆத்திரம் அடைந்தார்கள் டெல்லி வாலாக்கள்.

#DCvRCB
#DCvRCB

ரபாடா வீசிய 11-வது ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் ஏரியாவில் ஒரு பவுண்டரியை அணுப்பிவைத்தார் கோலி. அதே மூடில், அக்ஸர் வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். `எங்க கேப்டன் கோலி; ஆடினாலே ஜாலி' என ஆர்சிபி வாசிகள் குதூகலமான சற்று நேரத்தில், `உங்க கேப்டன் கோலி; அவுட்டாகி காலி' என எதிர்பாட்டு பாடினார் ரவிச்சந்திரன் அஷ்வின். பவுண்டரி லைன் அருகிலிருந்து அழகான கேட்ச் எடுத்தார் ஸ்டாய்னிஸ். அக்ஸர் பட்டேல் மீண்டும் வந்தார். மீண்டும் பவுண்டரி இல்லாத ஓவராகிப்போனது.

சாம்ஸ் வீசிய 15-வது ஓவரில், பேக்வார்ட் ஸ்கொயரில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டு, அடுத்த பந்திலேயே தனது அரைசதத்தையும் கடந்தார் படிக்கல். இந்த சீசனின் ஐந்தாவது அரைசதம் அவருக்கு. படிக்கல் மெய்யாலுமே வெயிட்டுதான்! நார்க்கியா வீசிய 16-வது ஓவரில், மிட் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் டி வில்லியர்ஸ். கொடுமையாக, அதே ஓவரில் படிக்கல் அவுட். அதனினும் கொடுமையாக, அதே ஓவரில், அடுத்துவந்த மோரிஸும் அவுட். டக் அவுட்! `நார்க்கியா... நல்லாருய்யா' என குஷியானார்கள் டெல்லி ரசிகர்கள்.

#DCvRCB
#DCvRCB

17-வது ஓவரை வீசி, வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ரபாடா. சாம்ஸின் 18-வது ஓவரில், லாங் ஆஃப் திசையில் டி வில்லியர்ஸ் அவசியமான ஒரு பவுண்டரியை அடித்தார். துபே, அழகாக வந்த ஒரு ஃபுல் டாஸை டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அணுப்பிவைத்தார். அதோடு, அதே திசையில் ஒரு பவுண்டரியும் வெளுத்தார். ரபாடா வீசிய 19வது ஓவரில், ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பிரமாண்ட சிக்ஸரை வான் நோக்கி கொளுத்திவிட்டார் டி வில்லியர்ஸ். இந்தப் பக்கம், தூபே எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியைப் போட்டுவிட்டு, அவுட்டானார்.

நார்க்கியா வீசிய கடைசி ஓவரில், டி வில்லியர்ஸை ரன் அவுட் செய்தார் ரஹானே. உடானாவும் மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியைப் போட்டுவிட்டு, அடுத்த பந்தே ஸ்ரேயாஸிடம் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில், 152/7 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது பெங்களூர். இப்போது, 17.3 ஓவர் வரையிலும் இரண்டாவது இன்னிங்ஸ் நீடித்தால் கொல்கத்தாவை விட நல்ல ரன்ரேட்டில் இருக்கும் பெங்களூர். அதேபோல், 134 ரன்களை அடித்தாலேபோதும், டெல்லியும் கொல்கத்தாவை விட நல்ல ரன் ரேட்டுக்கு வந்துவிடும். ஐதராபாத் அணி, மும்பையிடம் ஜெயித்தாலும் இந்த இரண்டு அணிகளுக்கு பெரிய பிரச்னை இராது. ஆக, இரு அணிகளுமே அன்புடன் குஷியானார்கள்.

ஷாவும் தவானும் டெல்லி அணியின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் மோரீஸ். 2வது பந்தை டீப் பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு கிளப்பினார் தவான். 4-வது பந்து, மிட் ஆஃப் திசையிலுள்ள பவுண்டரிக்கு விரைந்தது. ஓப்பனர் யாரும் டக் அவுட் ஆகவில்லை என்பதே டெல்லிக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. இரண்டாவது ஓவரை வீசவந்தார் சிராஜ். ஸ்கொயர் லெக் திசையில் ஒன்று, மிட் ஆன் திசையில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் ஷா. அடடே! என எல்லோரும் ஆச்சர்யமாக, ஓவரின் ஐந்தாவது பந்தில் பிரமாதமான ஒரு பந்தை வீசி ஷாவை அவுட்டாக்கினார் ஆச்சர்ய சிராஜ். அற்புதமான பந்து!

#DCvRCB
#DCvRCB

3வது ஓவரை வீச்வந்தார் தவான். ஷார்ட் தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரி கிட்டியது. சிராஜ் வீசிய 4வது ஓவரில், மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியைக் கொளுத்தினார் தவான். வாஷிங்டன் உள்ளே வந்தார். ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியைக் கூட்டினார் ரஹானே. உடனா வீசிய 6வது ஓவரில், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி என இரண்டு பவுண்டரிகளை குத்திவிட்டார் அஜிங்கியா. பவர்ப்ளேயின் முடிவில், 53/1 என வலுவான நிலையில் இருந்தது டெல்லி.

7வது ஓவரை வீசவந்தார் சாஹல். டீப் ஸ்கொயர் மற்றும் டீப் மிட் விக்கெட் திசைகளுக்கு இடையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ரஹானே. வாஷி வீசிய அடுத்த ஓவரில், பவுண்டரிகள் ஏதுமில்லை. மீண்டும் சாஹல் வந்தார். டீப் ஸ்கொயரில் ஒரு பவுண்டரியை வெளுத்தார் தவான். மீண்டும் வாஷி வந்தார். பவுண்டரிகள் ஏதும் கொடுக்காமல் திரும்பினார். 10 ஓவர் முடிவில், 81/1 என ஆடிக்கொண்டிருந்தது டெல்லி. 60 பந்துகளில் 72 ரன்கள் மட்டுமே தேவை.

#DCvRCB
#DCvRCB

சாபஷ் அகமது வீசிய 11வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதுமின்றி 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. அடுத்து உடானா வீசிய 12வது ஓவரில், ஷார்ட் ஃபைனில் ஒரு பவுண்டரியை தவான், தனது அரைசதத்தையும் கடந்தார். ஒட்டுமொத்த டெல்லியும் ஒரே நேரத்தில் தொடையைத் தட்டியது. அதே ஓவரின், கடைசிப் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையிலுள்ள பவுண்டரிக்கு விளாசினார் உடானா. அகமது வீசிய 13வது ஓவரில், லாங் ஆஃப் திசையில் ரஹானே ஒரு சிக்ஸரை வெளுத்தார். அடுத்த இரண்டாவது பந்தில், தவானோ தூபேவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். கேப்டன் ஷ்ரேயாஸ் உள்ளே வந்தார்.

சாஹல் வீசிய 14வது ஓவரில், பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் கிடைத்தன. 15வது ஓவரும், முந்தைய ஓவரின் ஜெராக்ஸ்தான். 16வது ஓவரில், ஒரு ரன் அதிகம் கிடைத்தது. `யெப்பா... இவிய்ங்க வேணும்னே 17.4 ஓவர்ல மேட்ச முடிச்சுடக் கூடாதுன்னு ஆடுறாய்ங்கப்பா' என கொல்கத்தா ரசிகர்கள் கொலைவெறி ஆனார்கள். ஐதராபாத் ரசிகர்களும் காண்டானார்கள்.

ரொம்ப பொறுமையாக ஆடியதில், தெரியாத்தனமாக ஷ்ரேயாஸின் விக்கெட்டைக் கழட்டினார் அகமது. `இன்னா தல' என இருவருமே, ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ரசிகர்கள் `அருந்ததி' அனுஷ்காவைப் போல் மொத்த கோபத்தையும் தனக்குள் அடக்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அடுத்து மேட்சில் வீசிய ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு தேங்காயாக அவர்களின் தலையில் வந்து விழுந்தது.

#DCvRCB
#DCvRCB

18-வது ஓவரில், வாஷிங்டன் பந்தில் தூபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அஜிங்கியா ரஹானே. 60 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அட இருங்க, இவரு எப்போ அரைசதம் அடிச்சார்? கேப்ல இது வேற நடந்திருக்கு! சிராஜ் வீசிய 19வது ஓவரில், டீப் ஸ்கொயரில் ஒரு சிக்ஸரை வெளுத்தார் ஸ்டாய்னிஸ். பன்ட், தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை தட்டிவிட 154/4 என மேட்சை முடித்தது டெல்லி. 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி! ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிகரமான தோல்வி! டெல்லி அணி, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது. ப்ளே ஆஃபில் மும்பையுடன் விளையாடும். பெங்களூர் அணியும் ப்ளே ஆஃபுக்கு தகுதி அடைந்துவிட்டது. அது கொல்கத்தா அல்லது ஐதராபாத் அணியோடு விளையாடும்.

''11வது ஓவர்லதான், நீங்க 17.3 ஓவர் வரைக்கும் மேட்சை இழுக்கணும்னு மேனேஜ்மென்ட்கிட்டே இருந்து மெசேஜ் வருது. நான் பயந்துட்டேன். உடனே, உடானாவையும் சாஹலையும் கூப்பிட்டு மிடில் ஓவர்களைத் தடுத்து நிப்பாட்டுங்கனு சொன்னேன். அவங்களும் சிறப்பா பண்ணிட்டாங்க. இன்னும் 2 மேட்ச்ல ஃபைனல் அடைஞ்சு, கப்பையும் கைப்பத்தியே தீருவோம். ஈ சாலா கப் எங்குள்தே'' என்றார் கோலி. ''செய் அல்லது செத்துமடிங்கிற மாதிரியான மேட்ச் இது. நாங்க ஜெயிக்கணும்னுதான் விளையாடினோம். ரன் ரேட்டுக்காக இல்ல. தொடர் தோல்விகள்ல இருந்து சிறப்பா மீண்டெழுந்து வந்திருக்கோம். இதே ஃபார்முல ஃபைன்லஸ் மீட் பண்றோம்'' என்றார் ஷ்ரேயாஸ்.

ஆட்டநாயகன் விருதை வென்றார் நார்க்கியா! நல்லாருங்கய்யா...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு