Published:Updated:

கொல்கத்தா கண்ணீர்... ஆனா, பஞ்சாப் செம ஹேப்பி அண்ணாச்சி! #KKRvKXIP

நரைன் வீசிய 11-வது ஓவரின் கடைசிப்பந்தில், லாங் ஆனில் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டார் கெயில். `கெயில் புயல் துவங்கிடுச்சு' என பஞ்சாப் ரசிகர்கள் குதூகலமானார்கள். #KKRvKXIP

`என்னைத் தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே. அட அவனும் இங்க நான்தானே' என எளிதாக ஜெயிக்க வேண்டிய மேட்சைக்கூட கஷ்டபட்டு தோற்றுக்கொண்டிருந்த பஞ்சாப், இப்போதுதான் நிலைமையை உணர்ந்திருக்கிறது. `இனி ஜெயிச்சும்தான் பார்ப்போமே' என செட்டப்பை, கெட்டப்பை எல்லாம் மாற்றி, உண்மையை உணர்ந்து உக்கிரமாக விளையாடத் தொடங்கி தொடர் சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார்கள். கரீபியன் கட்டப்பா கெயில் வேறு அணிக்குள் நுழைந்து கங்கம் ஸ்டைல் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ஷார்ஜாவில் நடந்த 2020 ஐபிஎல்-ன் 46வது மேட்சில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. `அண்ணன் எப்போ எழுந்திருப்பான். திண்ணை எப்போ காலியாகும்' என பஞ்சாப் காத்திருக்க, `நான் திண்ணையை பிடிச்சு நடந்தபோது, நீ என்னையைப் பிடிச்சு நடந்த பய. உனக்கு திண்ணைக் கேட்குதா' என கொல்கத்தாவும் மனம் முழுக்க வன்மத்தை நிரப்பிக்கொண்டு சண்டை செய்தனர். டாஸ் வென்ற கே.எல்.ராகுல், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு அணிகளின் லெவன்களிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

#KKRvKXIP
#KKRvKXIP

ஷுப்மான் கில்லும், ராணாவும் ஓப்பனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் மேக்ஸ்வெல். முதல் பந்து கில்லுக்கு ஒரு சிங்கிள். இரண்டாவது பந்து, மேக்ஸ்வெல்லுக்கு ஒரு பொங்கல். அதுவும் ஸ்வீட்டான சர்க்கரை பொங்கல். ராணாவின் விக்கெட் காலி! ஸ்வீப் ஆடச் சென்று, டாப் எட்ஜாகி ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றுகொண்டிருந்த கெயிலிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்திறங்கிய திரிபாதி, அதே ஓவரில் டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டார். இரண்டாவது ஓவரை வீசவந்தார் ஷமி. 4-வது பந்தில், திரிபாதியை பெவிலியனுக்கு அணுப்பிவைத்தார். டெஸ்ட் மேட்ச் லைன் மற்றும் லென்த்தில் வீசியே, விக்கெட்டை அள்ளினார்.

முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். அவரையும் அடுத்த இரண்டாவது பந்தில், டாடா காட்டி பெவிலியனுக்கு பார்சல் செய்தார் ஷமி. நிச்சயம் கொல்கத்தா டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு கண்ணாடி இருந்திருக்கும். அதைப் பார்த்து ஆனந்தராஜைப் போல `தோத்துட்டே இருக்கியேடா' என நிச்சயம் புலம்பியிருப்பார் கார்த்திக்.

அடுத்து கேப்டன் மோர்கனும், இளம் தென்றல் கில்லும் ஜோடி சேர்ந்தனர். அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில், ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் கில். மோர்கனும் ஷமி வீசிய 4வது ஓவரில், அப்பர் கட் ஆடி ஒரு பவுண்டரியைக் கணக்கில் சேர்த்தார். அர்ஷ்தீப் வீசிய 5வது ஓவரில், மோர்கன் ஒரு பவுண்டரியும் கில் ஒரு பவுண்டரியும் விரட்டினர். மீண்டும் 6வது ஓவரை வீசவந்தார் ஷமி. `பயந்துகிட்டே இருந்தா வேலைக்கே ஆகாது பரமா. அடிச்சுத் தூக்கு' என ஓவருக்கு இடையில் பேசியிருப்பார்களோ என்னவோ, ஷமியின் ஓவரில் வெளுத்துக்கட்டியது கொல்கத்தா. ஒரே ஓவரில், மிட் ஆன் மற்றும் பாயின்ட் திசையில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் மோர்கன். அந்தப்பக்கம், லாங் ஆன் திசையிலேயே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் கில். பவர்ப்ளேயின் முடிவில், 54/3 என மதில் மேல் பூனை போல் மியாவ் என்றது கொல்கத்தா.

#KKRvKXIP
#KKRvKXIP

`ஆல் இஸ் வெல்' சொல்ல மீண்டும் மேக்ஸ்வெல் வந்தார். எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, டீப் பேக்வார்ட் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர் என வெளுத்தார் மோர்கன். நிலைமையை உணர்ந்த கே.எல்.ராகுல், முருகன் அஷ்வினை அழைத்தார். அவர் ஓவரிலும், மோர்கன் ஒரு சிக்ஸர், கில் ஒரு சிக்ஸர் விளாசினர். 10-வது ஓவர் வீச பிஷ்னோய் வந்தார். லாங் ஆனில் ஒரு சிக்ஸரை வெளுத்தார் கில். மாஸ் காட்டியதுபோதும் என அடுத்த இரண்டே பந்தில் மோர்கனின் விக்கெட்டைத் தூக்கி கொலமாஸ் காட்டினார் பிஷ்னோய். மோர்கனின் கேட்சைப் பிடித்தது முருகன். 25 பந்துகளில் 40 ரன்கள் எனும் கேப்டன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சுனில் நரைன் உள்ளே வந்தார். 10 ஓவர்கள் முடிவில் 92/4 என தெம்பாக நின்றுக்கொண்டிருந்தது கொல்கத்தா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிறிஸ் ஜோர்டன் வீசிய 11-வது ஓவரில், ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் நரைன். கொல்கத்தா ரசிகர்களின் கண்கள் மிளிர்ந்தன. அடுத்த பந்தே நரைன் அவுட். ரசிகர்களின் கண்கள் கலங்கின. அடுத்த ஐந்து ஓவர்கள். பவுண்டரி எடுக்கத் தடுமாறியது கொல்கத்தா அணி. பிஷ்னோய் - முருகன் அஷ்வின் சுழலில் சிக்கி தவித்தது நைட் ரைடர்ஸ். 15-வது ஓவரில், நாகர்கோட்டியின் விக்கெட்டைக் கழட்டினார் முருகன் அஷ்வின். 16-வது ஓவரில், கம்மின்ஸின் விக்கெட்டைக் கழட்டினார் பிஷ்னோய். இந்தப்பக்கம் ஷுப்மான் கில்லும் அரைசதத்தைக் கடந்திருந்தார்.

17-வது ஓவரில், கொஞ்சம் மூச்சு விட்டது கொல்கத்தா. மீசைக்காரர் லாக்கி, ஒரு பவுண்டரியைத் தட்டிவிட, கில்லும் ஒரு பவுண்டரியைத் தொட்டுவிட்டார். அடுத்த ஓவர் வீசவந்த ஜோர்டனையும், 2 பவுண்டரிகள் வெளுத்து அனுப்பினார் ஃபெர்குசன். ஷமி வீசிய 19-வது ஓவரில், ஷமிக்கு கில்லின் விக்கெட்டும் ஃபெர்குசனுக்கு ஒரு சிக்ஸரும் கிடைத்தது. கடைசி ஓவரில், வருண் சக்ரவர்த்தியின் விக்கெட்டைக் கழட்டினார் டெத் ஓவர் சக்ரவர்த்தி ஜோர்டன். 149/9 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது கொல்கத்தா!

#KKRvKXIP
#KKRvKXIP

150 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு, ராகுலும் மந்தீப்பும் பஞ்சாப்பின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கம்மின்ஸ் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் முதல் பந்தை, தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு தட்டிவிட்டார் ராகுல். சிறப்பான ஸ்டார்ட்! அடுத்த 2 ஓவர்கள் ஏனோ அடக்கிவாசித்தார்கள். ப்ரசித் வீசிய 4வது ஓவரில், மிட் ஆனில் ஒரு பவுண்டரி, மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி என கெத்து காட்டினார் ராகுல். கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில், மிட்விக்கெட் பக்கம் ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் விரட்டி, ஆச்சர்யம் கூட்டினார் மந்தீப். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்த வருண் சக்ரவர்த்தி, வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப்.

8-வது ஓவரில், ராகுலின் விக்கெட்டைக் கழட்டினார் வருண் சக்ரவர்த்தி. எல்பிடபிள்யு ஆகி பெவிலியனுக்கு கிளம்பினார். மீண்டும் 10வது ஓவர் வீசவந்த வருண் சக்ரவர்த்தியை வைத்து செய்தது பஞ்சாப் அணி. மந்தீப் ஒரு பவுண்டரியை விளாசி, கெயில் பக்கம் அணுப்பி வைக்க, அவர் 2 சிக்ஸர்களை பொளந்தார். லாங் ஆனில் ஒன்று லாங் ஆஃபில் ஒன்று வானத்திற்கு பறந்தன. 10 ஓவர் முடிவில், 67 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். 60 பந்துகளுக்கு 83 ரன்கள் வேண்டும் என்கிற நிலை!

#KKRvKXIP
#KKRvKXIP

நரைன் வீசிய 11-வது ஓவரின் கடைசிப்பந்தில், லாங் ஆனில் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டார் கெயில். `கெயில் புயல் துவங்கிடுச்சு' என பஞ்சாப் ரசிகர்கள் குதூகலமானார்கள். ஃபெர்குசன் வீசிய 12-வது ஓவரில், மந்தீப் ஒரு பவுண்டரியும் கெயில் ஒரு பவுண்டரியும் விரட்டினார்கள். நரைன் வீசிய 13வது ஓவரில், ஒரு சிக்ஸரை போட்டுவிட்டார் கெயில். `என்ன அடிச்சுட்டே போறீங்க' என வெறியான ஃபெர்குசன் அசுர வேகத்தில் பந்து வீசத் துவங்கினார். அப்போதும் ஒரு பவுண்ட்ரியை விரட்டினார் மந்தீப். 15 ஓவர் முடிவில், 113/1 என வலுவான நிலையில் இருந்தது பஞ்சாப். 30 பந்துகளில் 37 ரன்கள் தேவை. ப்ரஷீத் வீசிய 16 ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார் மந்தீப். ஃபெர்குசனின் 17வது ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை அள்ளினார் யுனிவர்சல் பாஸ்.

கம்மின்ஸின் கணக்கும் சரியாக வரவில்லை. அவர் ஓவரிலும், ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்டினார் மந்தீப். இப்போது 12 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்கிற நிலை. 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த மந்தீப்பும், 28 பந்துகளில் 51 ரன்களைப் பறக்கவிட்ட கெயிலும் கூலாக களத்தில் நின்றுக்கொண்டிருந்தார்கள்.
#KKRvKXIP
#KKRvKXIP

ஃபெர்குசன் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டானார் கெயில். அசுர வேகத்தில் வீசிய ஃபெர்குசன், திடீரென ஆமை வேகத்தில் வீசிய பந்தில் குழப்பமாகிப்போனார் கெயில். அவ்வளவுதான், அதே ஓவரில் மேட்சும் முடிந்தது! "195 ரன் எடுத்திருந்தால் நாங்க ஈஸியா ஜெயிச்சுருப்போம். விடுங்க, டோர்னமென்ட்னா அப்படித்தான் முன்ன பின்ன இருக்கும். அடுத்த ரெண்டு மேட்ச்லேயும் சிறப்பா ஆடி, சிறப்பான இடத்தைப் பிடிப்போம்" என்றார் மோர்கன். "நாங்க ரொம்ப ஹேப்பியா இருக்கோம். அப்ல இருக்குறவன் டவுன்ல போறதும், டவுன்ல இருக்குறவன் அப்ல வர்றதும் மேட்டரே இல்ல மச்சி. யார் கடைசியில, எதிரிக்கு ஆப்படிச்சி மேல வர்றாங்கன்றது மேட்டர். கெயில்லாம் டிரெஸ்ஸிங் ரும்ல வெறியா இருப்பாப்டி. அவர் லெவன்ல விளையாடுறது எல்லோருக்குமே பாசிட்டிவ் வைப்ஸ். பார்ப்போம். அடுத்தடுத்த மேட்சும் நிச்சயம் கெத்து காட்டுவோம்" என்றார் கேப்டன் கே.எல்!

யுனிவர்சல் பாஸூக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு