Published:Updated:

`அப்போதே தமிழக அரசு விளக்கமளித்துவிட்டது!' - பெரியார் சிலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம்

மலையரசு

``பெரியார் சிலைக்கு கீழ்உள்ள வாசகத்தை நீக்க முடியாது'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
chennai high court

சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.தெய்வநாயகம் என்பவர் சமீபத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். `பெரியார் உயிரோடு இருந்தபோது அப்போதைய முதல்வர் அண்ணா திருச்சியில் பெரியாருக்கு 1967-ம் ஆண்டு சிலை நிறுவினார். அந்த நிகழ்ச்சியில் காமராஜர், குன்றக்குடி அடிகளார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது நாத்திகம் குறித்து பெரியார் சிலையின் கீழ் எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை. பின்னர் 1973-ம் வருடம் பெரியார் இறந்தபின் தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளின் கீழ், `கடவுள் இல்லை. கடவுள் இல்லை. இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்ற வாசகம் பொறிக்கப்பட்டன.

Periyar Statue
Periyar Statue

பெரியார் பகுத்தறிவு கொள்கையைப் பரப்பினாரே தவிர நாத்திகத்தைப் போதிக்கவில்லை. எனவே, சிலைக்குக் கீழ் உள்ள இந்த வாசகங்களை உடனே அகற்ற உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நடத்திவந்தனர். அதன்படி, தி.க தலைவர் கி.வீரமணி சார்பில் இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. `பெரியாரின் சிலைக்குக் கீழ் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் தீங்கு விளைவிப்பது இல்லை. பொதுநல வழக்கு என்று கூறி சொந்த நலனுக்காக மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

மத போதனைகளைச் செய்ய எங்கள் இயக்க வளாகத்துக்குள் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்பதால், இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே, இவருக்கு பெரும் தொகை அபராதம் விதித்து, இந்த வழக்கை தள்ளுபடி செ ய்யவேண்டும்' என்று கி.வீரமணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதன்படி, ``உச்ச நீதிமன்றம் இதற்குமுன்பு அளித்த பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளில், `மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது' எனக் கூறியுள்ளது. மனுதாரர் தரப்பில் `பெரியார் நாத்திகத்தைப் போதிக்கவில்லை' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 1928-ம் ஆண்டே பெரியார் பேசிய உரை, எழுதிய கட்டுரைகளில் கடவுள் இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது.

Periyar Statue
Periyar Statue

1970-ல் தஞ்சையில் பெரியார் சிலை நிறுவப்பட்டபோதே கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றதுக்கு எதிராகப் புகார் தெரிவிக்கப்பட்டு அப்போதைய தலைமைச் செயலாளர் ராயப்ப ஐ.ஏ.எஸ் அந்தப் புகாரை நிராகரித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19-ன்படி எப்படி கடவுள் உண்டு என்று கருத்து தெரிவிக்க மனுதாரருக்கு உரிமை வழங்கியுள்ளதோ, அதேபோல கடவுள் இல்லை என்று கருத்து தெரிவிக்க எதிர்மனுதாரருக்கு உரிமை வழங்கியுள்ளது. எனவே, பெரியார் சிலை கீழ் உள்ள வாசகங்களை நீக்க உத்தரவிட முடியாது" எனக் கூறிய நீதிபதிகள் மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.