கட்சித் தலைவரா.. பிரதமர் வேட்பாளரா? | raghul Gandhi congress leader post | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/01/2014)

கட்சித் தலைவரா.. பிரதமர் வேட்பாளரா?

குழப்பத்தில் ராகுல்!

அடுத்த வாரத்தில் ராகுல் காந்திக்கு ஒரு புரமோஷன் காத்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆவாரா? அல்லது, காங்கிரஸ் கட்சிக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? இதுதான் டெல்லி கிளப்பும் அந்த புரமோஷன் பரபரப்பு.

 பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியோ இப்போதுதான், எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்று யோசித்து வருகிறது. அதற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் வரும் 17-ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது. இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராக இல்லை. சோனியாவுக்குப் பதவி மீது பற்று இல்லை. அதனால், ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதை மன்மோகன் சிங் ஏற்பாரா என்ற தயக்கம் சோனியா, ராகுல் ஆகிய இருவருக்கும் இருந்தது. நம்பர் 10, ஜன்பத் ரோடு தூதுவர்கள் மூலமாக மன்மோகனிடம் பேசியது. அவருமே போதும் என்ற மனநிலையில் இருப்பது தெரிந்தது. 'அதை நீங்களே நாட்டுக்கு அறிவித்துவிட்டால் நல்லது’ என்றும் சோனியா தூதுவர்கள் தூபம் போட்டார்கள். அதன் எதிரொலிதான் பிரதமர் கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

மூன்றாவது முறையும் பிரதமர் ஆகும் ஆசை இல்லை என்று சொன்ன மன்மோகன் சிங், அடுத்து பிரதமர் ஆகக்கூடிய தகுதி ராகுல் காந்திக்குத்தான் இருக்கிறது என்று சொன்னார். அவரது பேட்டியில் காங்கிரஸ் மேலிடம் விரும்பியது இரண்டு வாக்கியங்களைத்தான்.

தமிழர்களுக்குத் தை பிறந்தால் வழி பிறக்கும். ராகுல் காந்திக்கு வட இந்திய முறைப்படி சங்கராந்திக்குப் பின்னர் வழி பிறக்க கட்சி தயார் செய்துகொண்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளின் பின்னணியில்தான் பிரதமரின் மெகா பத்திரிகையாளர்கள் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகளின் பின்னணியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது. ராகுல் காந்தியை பூஸ்ட் செய்யும் விதமாகப் பிரதமரை இந்தப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேச வைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் பூசாரிகளின் திட்டம்.

இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது தெரிந்ததுமே டெல்லி மீடியா உஷார் ஆனது. 'பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகுகிறார். ராகுல் பதவி ஏற்கிறார்’ என்று பேச ஆரம்பித்தார்கள். 'ராகுல் வட்டாரம் கிளப்பும் வதந்தி’ என்று இன்னொரு தரப்பு சொல்ல ஆரம்பித்தது. எதுவாக இருந்தாலும் சோனியா குடும்பம், மன்மோகனை கைகழுவிவிடத் தயாராகிவிட்டது உறுதி.

கடந்த ஆண்டு இதே ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி. வருகிற பொதுத்தேர்தலில் நரேந்திர மோடியின் போட்டியைச் சமாளிக்க வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற காங்கிரஸ் கட்சியும் ஒரு முகத்தைக் காட்ட நினைக்கிறது. அதற்கு எத்தனையோ பெயர்கள் பரிசீலனை செய்தது. ஆனால், இனி மற்ற தலைவர்களை இந்தப் பதவியில் இறக்கி ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. நஷ்டமோ, லாபமோ ராகுல் காந்தியை இறக்குவதே சரியானது என்று முடிவு எடுத்துள்ளனர். ஆனால் ராகுலை எதற்கு எப்படி முன்னிறுத்துவது என்பதில் குழப்பங்கள் தொடர்கின்றன. இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில், 'ராகுலை காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்’ என்று மன்மோகனைச் சொல்ல வைக்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், ''உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நான் பிரதமர் பதவியைத் தொடர விரும்பவில்லை'' என்றும் மன்மோகன் சொன்னால் நல்லது என்றும் காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்ததாம். ஆனால் மன்மோகன், தன்னுடைய ராஜினாமாவைப் பற்றி பேசவில்லை. மே மாதம் வரை பிரதமர் பதவியில் தொடருவேன் என்றார்.

ஒரு பெண் பத்திரிகையாளர், ''காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கிளாமர் இருந்தது. அது இப்போது போய்விட்டது. இதற்கு ஊழலும் விலைவாசி உயர்வும் காரணம் என்கின்றனர். இதற்குப் பொறுப்பேற்றுத் தேர்தலுக்கு முன்பு பதவியில் இருந்து விலகுவீர்களா?'' என்று நேரடியாகக் கேட்டார். இது அந்தச் செய்தியாளர் மூலமாக சோனியா தரப்பு கேட்ட கேள்வி.  

''எந்த ஆட்சியிலும் சாதிக்காத அளவுக்கு என்னுடைய ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒன்பதரை சதவிகிதம் வரை வந்தது. பின்னர் உலகமே பொருளாதார வீழ்ச்சிக்கு சென்றது. இருப்பினும் நாம் மோசமாகப் போகவில்லை. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தனி நபர் வருமானம் கூடியுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூலம் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்தாலும் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்பதை மறுக்கக் கூடாது. நான் ஒன்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன். நானோ என் குடும்பத்தினரோ எதிலும் சம்பந்தப்படவில்லை. ஊழலைப் பொறுத்தவரை முந்தைய ஆட்சியில் பத்திரிகைகள், சி.ஏ.ஜி. நீதிமன்றங்கள் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்டன. ஆனால், மக்கள் இவற்றையெல்லாம் புறக்கணித்துதான் இந்த ஆட்சியை 2009-ல் மீண்டும் தேர்ந்தெடுத்தனர். இவை குறித்து வரலாறு எழுதப்படும்போது உண்மைகள் வரும். எனக்கு நேரம் இருந்தால் ஓய்வுக்குப் பின்னர் எழுதுவேன்'' என்றார் பிரதமர். 'வரலாறு பதில் சொல்லும்’, 'காலம் பதில் சொல்லும்’ என்ற ரெடிமேட் பதில்களை பலமுறை கூறினார் மன்மோகன்.

ராகுலிடமும் ரெடிமேட் பதில் உண்டு. அது, ''எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை இல்லை.''

'கட்சித் தலைவர் பதவியை ஏற்றுப் பிரசாரம் செய்யுங்கள். வெற்றி பெற்றால் பிரதமர் ஆகுங்கள்’ என்று சிலர் ராகுலுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். 'பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டுத் தோல்வியைத் தழுவினால், அது அடுத்த கட்ட தேர்தலிலும் பாதிக்கும்’ என்று ராகுல் ஆதரவாளர்கள் யோசிக்கிறார்கள்.

என்ன ரோல் எடுக்கப்போகிறார் ராகுல்?

- சரோஜ் கண்பத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close