“மதுவைவிட சிகரெட் மிக மோசம்!”

வைகோவுக்கு ஒரு பதில்!

துவிலக்கு போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் வைகோ, சிகரெட் சம்பந்தமாக அடித்த கமென்ட் அவர் மீது பலத்த விமர்சனங்களை வைத்துள்ளது.

வைகோவின் மகன், தென்மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு சிகரெட் விற்பனை ஏஜென்சி வைத்துள்ளார். ‘மதுவுக்கு எதிராக இவ்வளவு தீவிரமாகப் போராடுகிறீர்கள் நீங்கள். ஆனால், உங்கள் மகன் சிகரெட் கம்பெனி ஏஜென்சி வைத்துள்ளாரே?’ என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, டென்ஷன் ஆன வைகோ, ‘‘சிகரெட் பிடிப்பதால் கற்பழிக்கவோ, கொலை செய்யவோ, பெற்ற மகளையும் தாயையும் வன்புணர்வு செய்யவோ தூண்டாது’ என்று சிகரெட்டுக்கு ஆதரவாக தனது கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

மதுவைப்போலவே சிகரெட்டும் உடலுக்கு மிகக் கேடானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இப்படி இருக்க, வைகோ இவ்வாறு சொல்லியிருப்பது கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. இதுகுறித்து புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டரிடம் பேசினோம். ‘‘தமிழக மக்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மக்களால் மதிக்கப்படும் வைகோ இப்படிச் சொல்லியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மதுவைவிட சிகரெட்தான் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள்தொகையில் 17 சதவிகிதம் பேர் சிகரெட்டுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மதுவைவிட அதிக அளவில் உடலுக்குத் தீங்கு விளைவிப்பது சிகரெட்தான். மதுவால் பாதிக்கப்படுவது அதனை அருந்துபவர்கள் மட்டும்தான். ஆனால் சிகரெட், பயன்படுத்துபவர் மட்டுமல்லாது அவர் அருகில் இருப்பவர்களையும் பாதிக்கிறது. இதன் பாதிப்பு பன்மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள ஆய்வு முடிவில், சிகரெட் பயன்படுத்துபவர்களின் அருகில் இருந்தால் அவர்களுக்கும் 50 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளும் பெண்களும்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மதுவை நான்கு சுவருக்குள் வைத்து அருந்துகிறார்கள். ஆனால், 40 பேர் சுற்றி இருந்தாலும் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது இன்று நம்மைச் சுற்றிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய், நுரையீரல் புற்றுநோய்கள் வரும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சிறுவயதினர் முதலில் பழக்கப்படுத்திக்கொள்வது சிகரெட். பின்புதான் மதுவை நாடுகிறார்கள். மதுவையும் சிகரெட்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது பயங்கர ஆபத்து. காரணம், சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டினும் மதுவில் இருக்கும் ஆல்கஹாலும் ஒன்றுக்கொன்று எதிரிகள். சிகரெட் புகைக்கும்போது உள்ளிழுக்கும் புகை உடல் உறுப்புகளை மோசமாகப் பாதிக்கும். இதனால் சுவாச மண்டலம், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இருதய நோய்களுக்கும் ஆளாக நேரிடும்.

தமிழகத்தில் மது அரசு உடைமையாகிவிட்டது. சிகரெட் இன்னும் தனியார் வசம் இருந்தாலும், அதனை ஏஜென்ஸி எடுத்துள்ளவர்கள் அனைவரும் தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் புள்ளிகளின் வாரிசுகளே. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, ‘மக்கள் நிர்வாகப் பொறுப்பிலோ, சமூகம் சார்பாக முடிவுகளை எடுக்கும் அரசியல் தலைவரோ, அவரது குடும்பமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதுபோன்ற புகையிலை நிறுவனத்தின் தொடர்பில் இருக்கக் கூடாது’ என்று இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அந்த விதி காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் மோட்டார் வாகனங்கள், ஆலைகள் வெளியிடும் நச்சுக்காற்றைவிட சிகரெட் புகை கணிசமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறப்பது இந்தப் புகையிலையால்தான். இதனால் வைகோவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதி உள்ளோம்’’ என்றார்.

மதுவிலக்குக்குப் போராடும் தலைவர்​கள் சிகரெட் விலக்குக்கும் சேர்த்துப் போராட வேண்டும்.

- மா.அ.மோகன் பிரபாகரன், படம்: ரா.வருண் பிரசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick