“எங்களுக்கு தேரும் வேணாம்; ஊரும் வேணாம்”

வேதனையின் விளிம்பில் விழுப்புரம்!

‘‘பாதிக்கப்பட்ட எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரங்களே எங்கக்கிட்ட, ‘எப்படியாவது நீங்க தப்பிச்சு ஓடிருங்க’னு சொல்லிட்டு, அவங்களும் ஓடிப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் எங்களால என்ன செய்ய முடியும்? இப்போ நாங்க தெருவுல நிக்கிறோம். ரெண்டு நாளா எங்களோட சேர்ந்து எங்க குழந்தைங்களும் பட்டினி கெடக்குதுங்க. எங்களுக்கு இந்தத் தேரும் வேணாம்; ஊரும் வேணாம்” என்று நம்மிடம் கதறினார்கள், நெடுமானூரில் தஞ்சம் அடைந்திருந்த தலித் மக்கள்.

சாதி அரக்கனின் கோரப்பசிக்கு இரையாகி இருக்கிறது, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமம். தலித் மக்களின் கோயில் தேரை இழுத்துச் செல்வது தொடா்பான பிரச்னை, வன்முறையாக வெடித்திருக்கிறது.

சேஷசமுத்திரத்தில் நடந்தது என்ன?

சேஷசமுத்திரத்தில், தலித் மக்கள் வாழும் பகுதியில் அம்மன் கோயில் உள்ளது. ஆடி திருவிழாவின்போது அம்மனை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வது வழக்கம். 2012-ல், தே.மு.தி.க சார்பில் சுப்பிரமணியன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ‘‘அம்மனை இனி தலையில் சுமந்து செல்ல வேண்டாம். தேர் செய்யும் செலவில் பாதியைத் தருகிறேன்” என்று தலித் மக்களிடம் அவா் வாக்குறுதி அளித்துள்ளார். அவா் வெற்றி பெற்றதும், தோ் ஊா்வலத்துக்கு வெள்ளோட்டம் பார்த்துள்ளனா். அப்போது அதற்கு, சட்டம் - ஒழுங்குப் பிரச்னை இருப்பதாகச் சொல்லித் தடை விதிக்கப்பட்டது. பிறகு, வட்டாட்சியரின் அனுமதியோடு தேர் இழுக்கப்பட... அதற்கு இன்னொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவிக்க... மோதல் வெடித்தது.

2014 ஜனவரியில், தலித் மக்கள் அனைவரும் பௌத்த மதத்துக்கு மாறப்போவதாக அறிவிக்க... ஆடிப்போனது மாவட்ட நிர்வாகம். ‘மதம் மாற வேண்டாம். தேரை இழுக்க நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதி அளித்தது. கடந்த 16-ம் தேதி தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 14-ம் தேதி கோட்டாட்சியர் மாலதி தலைமையில் இரு தரப்பினருக்குமான அமைதிப் பேச்சு நடந்தது. 15-ம் தேதி, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை தலித் மக்கள் செய்தனர். அப்போதுதான், வன்முறை ஆரம்பமானது.

கருங்கற்கள், பெட்ரோல் குண்டுகளுடன் தலித் மக்கள் குடியிருப்பின் மீது மாற்று சாதியைச்  சேர்ந்தவா்கள், தாக்கத் தொடங்கினர். வீட்டுக்குள் இருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இந்தத் தாக்குதலில்
எஸ்.பி நரேந்திர நாயர் உட்பட ஏழு போலீஸார் படுகாயமடைந்தனர். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு நின்றிருந்த தேர் மற்றும் இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் குண்டுகள் வீசியும், டயர் வைத்துகொளுத்தியும் தீக்கிரையாக்கினர்.

கலவரத்தில் ஈடுபட்ட 11 பெண்களும், 57 ஆண்களும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், ‘‘இவ்வளவு பிரச்னைக்குரிய விஷயத்தில், காவல் துறை பொறுப்பற்ற விதத்தில் நடந்துள்ளது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. 30 போலீஸ்காரர்களை மட்டுமே பாதுகாப்புக்காக நிறுத்தி, ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார்.

கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மாலதி, ‘‘அது அரசாங்கத்துக்குச் சொந்தமான பொதுச் சாலை என்பதாலும், அமைதிப் பேச்சுவார்த்தையின்போது பெரும்பான்மையானவர்கள் ஒப்புக் கொண்டதாலும்தான், தேரோட்டத்துக்கு அனுமதி அளித்தோம்’’ என்றார்.

எஸ்.பி-யான நரேந்திரன் நாயர், ‘‘16-ம் தேதிதான் தேரோட்டம் என்பதால், அன்றைய தினம் அதிகமான போலீஸாரை வரவழைத்துக் கொள்ளலாம் என நினைத்தோம்’’ என்றார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று நடந்துள்ளது இந்தத் தாக்குதல். அவர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

- ஜெ.முருகன்
படங்கள்: தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick