“கடைகளை கண்ணியமானவையாக மாற்ற வேண்டும்!”

வழி சொல்கிறார் மது ஆலை நிர்வாகி!

லாபம்... லாபம்... மேலும் லாபம் என்பதே தாரக மந்திரம். தமிழகத்தில் மதுபானங்களை உற்பத்தி செய்து, டாஸ்மாக்குக்கு விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் சாராய அதிபர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் அனைவருக்கும் அரசியல், சர்க்கரை ஆலைகள், ரிஸார்ட்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல தொழில்கள் உள்ளன. அவற்றோடு கூடுதலாக மதுபானங்களையும் தயாரித்து விற்கிறார்கள். கடந்த இதழின் தொடர்ச்சி....

‘உளியின் ஓசை’க்குப் பின்னால்...

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கள்ளபிரான் கிராமத்தில் எஸ்.என்.ஜெ. டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மது உற்பத்தி ஆலை உள்ளது. இதன் இயக்குநர்களாக எஸ்.என்.ஜெயமுருகன், கீதா ஆகியோர் உள்ளனர். எஸ்.என்.ஜெயமுருகன் என்பதன் சுருக்கம்தான் எஸ்.என்.ஜெ. இவர் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் லாட்டரி, ஹோட்டல் தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது. முருகனின் வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் கேரளாவில் லாட்டரித் தொழிலை நடத்தினார். அங்கும் காலூன்ற முடியவில்லை. அந்த நேரத்தில், டாஸ்மாக்குக்குத் தேவையான மதுபானங்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு உரிமம் வழங்கிக்கொண்டிருந்தனர். அதில் இறங்கலாம் என்று முடிவு செய்து 3 லட்சம் ரூபாயை டெபாசிட்டாகக் கட்டி விண்ணப்பித்தார் ஜெயமுருகன். உரிமம் கிடைத்தது. இவர், இந்தத் தொழிலில் காலடி எடுத்து வைத்தபோது, பலத்த போட்டி. ஆனால், தனது தயாரிப்புகளை கூடுதல் தரத்துடன் கொடுத்ததால், மார்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்தது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய  கதை - வசனத்தில் ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ என்ற திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பின்னணியில் இருந்தது ஜெயமுருகன்தான் என்றும் அதனால்தான் அவருக்கு மதுபானம் தயாரிக்கும் ஆலைக்கான உரிமம் வழங்கப்பட்டது என்றும் பரவலாகப் பேசப்பட்டது. கசப்பு மிகுந்த பீர் ரகங்களுக்கு மத்தியில், குறைந்த கசப்புடன் பச்சை நிற பாட்டில்களில் விற்கப்படும் பிரிட்டிஷ் எம்பரர் ரக பீர்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். இவைதவிர, பிரிட்டிஷ் எம்பயர் பிராந்தி, ராயல் சேலஞ்ச், ஓல்டு சீஃப், பகார்டி பிளாக், பகார்டி லெமன் போன்ற மதுபானங்களை இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது.

வயலார் ரவியின் சம்மந்தி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், மேவலூர் குப்பம் கிராமத்தில் எம்.பி. டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி ஆலை செயல்படுகிறது.  கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.பி.புருஷோத்தமன் இதன் உரிமையாளர். முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் சம்பந்தி. புருஷோத்தமனின் மகள் நிஷாவைத்தான், வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணகுமார் திருமணம் செய்துள்ளார். எம்.பி. டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தில் இணை இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார் நிஷா. இதே நிறுவனத்தில் மற்றொரு இயக்குநராக புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன் இருக்கிறார். ஷாஜி புருஷோத்தமன் வேறு யாருமல்ல... 2012-ம் வருடம் மே 22-ம் தேதி நள்ளிரவில்  கார் ஓட்டி, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகே நடந்த விபத்துக்குக் காரணம் ஆனவர்.  இதில் முனிராஜ் என்ற 13 வயது சிறுவன் பலியானான். அப்போது இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தில் பீர்களைத் தயாரித்து விற்கும் அப்போலோ டிஸ்டில்லரீஸ் நிறுவனமும் இவர்களுக்குச் சொந்தமானதுதான். வருடத்துக்கு 2,000 கோடி சம்பாதிக்கும் எம்.பி. குழுமம் ஒரு வருடத்துக்கு 5 லட்சத்து 32 ஆயிரத்து 800 மதுபானப் பெட்டிகளை உற்பத்தி செய்கிறது.  

360 கோடி டு 1,077 கோடி!

மிடாஸ் கோல்டன் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் மதுபான உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரின் நம்பிக்கையைப் பெற்ற டாக்டர் சிவக்குமார், கலியபெருமாள் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். 2010 - 11-ம் ஆண்டின் வருவாய் ரூ.360 கோடியாக இருந்தது. அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றப் பிறகு இரண்டு ஆண்டுகளில், அதன் வருவாய் ரூ.1,077 கோடியை எட்டியது. மற்ற நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதைவிட இந்த நிறுவனத்தில் இருந்து கூடுதலாக கொள்முதல் செய்கிறார்கள்.  டாஸ்மாக்கின் மொத்த கொள்முதலில், 20 முதல் 25 சதவிகிதம் வரை மிடாஸ் கோல்டனில்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத உத்தரவாம். டே நைட் பிராந்தி, ஆப்பிள் வோட்கா, கிரீன் வோட்கா, ஆரஞ்ச் வோட்கா, ஜெட் செலக்ட் உள்ளிட்ட 30 ரக மதுபானங்களை இந்த நிறுவனம் தயாரிக்கின்றன. வருடத்துக்கு ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் பெட்டிகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

சதர்ன் அக்ரிபுரேன் இண்டஸ்ட்ரீஸ்

விழுப்புரம் மாவட்டம், வழுதாரெட்டி கிராமத்தில் இந்த நிறுவனத்தின் மதுபான உற்பத்தி ஆலை உள்ளது. எம்.ஜி.எம். குழுமத்துக்குச் சொந்தமானது. எம்.ஜி.முத்து என்பதன் சுருக்கம்தான் எம்.ஜி.எம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் முத்து. சென்னை துறைமுகத்தில் 1963-ல் கார்கோ தொழிலில் வளரத் தொடங்கிய எம்.ஜி.எம் குழுமம், அதன்பிறகு ஏற்றுமதி இறக்குமதி, ஹோட்டல், எம்.ஜி.எம் ரிசார்ட்ஸ், துரித உணவுகளைத் தயாரித்து விற்கும் மேரிபிரௌன் என்று தன்னுடைய தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியது. 1983-ம் ஆண்டு மதுபானத் தயாரிப்பில் இறங்கியது. ஆந்திராவில் ‘கமல் ஒயினரீஸ்’ என்ற பெயரிலும் கர்நாடகா, பீகார் என முக்கியமான மாநிலங்களிலும் மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். பல மாநிலங்களில் தற்போது இந்த நிறுவனத்துக்கு மதுபான ஆலைகள் உள்ளன. வருடத்துக்கு 60 லட்சம் மதுபானப் பெட்டிகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. எம்.ஜி.எம் பிராண்டுகளில் ஆப்பிள் வோட்கா, கிரீன் வோட்கா, ஆரஞ்ச் வோட்கா, கிரிஸ்டல் வோட்கா, கோல்டு வி.எஸ்.ஓ.பி பிராந்தி, ரிச்மண்டு டிரிபிள் எக்ஸ் ரம் வகைகள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள். தற்போது எம்.ஜி.முத்துவின் மகன் எம்.ஜி.எம்.ஆனந்த் இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

மதுவிலக்கு  அமல்படுத்தப்பட்டால் தங்களின் சாராய சாம்ராஜ்ஜியம் சரிந்துவிடுமே என்று கவலையோடு இருக்கிறார்கள் இந்த மது மன்னர்கள்.

“கண்ணியமிக்க கடைகளாக மாற்றப்பட வேண்டும்!”

மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தை மதுபான ஆலை அதிபர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய எஸ்.என்.ஜே.டிஸ்டில்லரீஸ் நிர்வாக அதிகாரி பரஞ்ஜோதியிடம் பேசினோம்.

“சட்டங்களைக் கடுமையாகப் பிரயோகித்து, கட்டாயமாக மதுக் கடைகளை மூடினால் அது கள்ளச்சாராய விற்பனைக்கு வழிவகுக்கும். சரியான திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது பூரண மதுவிலக்கை சாத்தியமாக்கும். பள்ளிக்கூடங்களில் உயர்நிலை வகுப்புகளில் இருந்து இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால், இனிமேல் குடியை நாடாதவர்களாகவோ அல்லது குடிப்பவர்களாகவோ இருக்கப்போகிறவர்கள் இன்றைய மாணவர்கள்தான். அவர்களிடம் குடியின் தீமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் தானாகவே அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். இது கடந்த காலங்களில் பல திட்டங்களில் சாத்தியப்பட்டு இருக்கிறது. சிறந்த உதாரணம், குடும்பக் கட்டுப்பாடு திட்டம். குழந்தைகளே பெற்றுக் கொள்ளக் கூடாது என்றோ அல்லது ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றோ இங்கு சட்டம் போடவில்லை. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வு தீவிரமாக செய்யப்பட்டது. அதன் விளைவுதான் இன்று ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெரும்பாலானோர் பெற்றுக்கொள்வதில்லை.

இது தவிர உடனடியாக அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்றால், எங்களைப் பொறுத்தவரை கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். 6,500 கடைகள் தேவையில்லை. 1,200 கடைகள் போதும். அந்த 1,200 கடைகளை கண்ணியமிக்க வகையில் நடத்தவேண்டும். பெட்டிக் கடைகளைப்போல தெருவுக்கு ஆறேழு கடைகளைத் திறக்காமல், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் பெரிய கடைகளாகத் திறந்து வைக்கலாம். அதன் மூலம் பல பிரச்னைகளைத் தீர்க்கலாம். இங்கு நாங்கள் எங்கள் சார்பில் மற்றொரு விளக்கத்தையும் கொடுக்க விரும்புகிறோம். ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய படங்களை நாங்கள் தயாரித்ததாக எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மையல்ல” என்றார்.

மதுவிலக்கு பற்றி அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று இந்த ஆலை அதிபர்களும் காத்திருக்கிறார்கள்.

- ஜோ.ஸ்டாலின்


மிடாஸுக்கு எதிராக நாம் தமிழர்!

தமிழகத்தில் மதுபான ஆலைகளை இழுத்து மூடி பூட்டுப்போடும் போராட்டத்தை கடந்த வாரம் நடத்தியது ‘நாம் தமிழர்’ கட்சி. எம்.பி. டிஸ்டில்லரீஸ், மிடாஸ் கோல்டு, கோல்டன் வாட்ஸ், கால்ஸ் மதுபான ஆலைகள் முன்பு நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட ‘நாம் தமிழர்’ கட்சியினர் கைதாகினர். படப்பையில் உள்ள மிடாஸ் கோல்டு முன்பும் போராட்டம் நடத்தப்போவதை அறிந்த போலீஸ், முன்கூட்டியே கைது நடவடிக்கையில் இறங்கியது. இதனால் கொடிகள் இல்லாமல் பொதுமக்கள்போல ஒவ்வொருவராகச் சென்று மிடாஸ் கோல்டு ஆலையின் முன்பு ஒருங்கிணைந்தனர் ‘நாம் தமிழர்’ கட்சியினர். அதன்பிறகு, “இழுத்து மூடு... இழுத்து மூடு... மதுபான ஆலைகளை இழுத்து மூடு” என கோஷம் போட்டபடி தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். தள்ளுமுள்ளுடன் ‘நாம் தமிழர்’ கட்சியினர் கைதாகினர்.

‘துப்புரவு பணிக்குப் பயன்படுத்தவில்லை’

‘விரல் போச்சு’ என்ற தலைப்பில் 19.08.15 தேதியிட்ட ஜூ.வி. இதழில் செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பாக மதுரை திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளி சார்பில் அதன் வழக்கறிஞர் ஏ.தமிழ்ச்செல்வன் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ‘‘தங்கள் இதழில் எமது கட்சிக்காரரின் கல்வி நிறுவனத்தைப் பற்றி வந்துள்ள செய்திக்கும் எனது கட்சிக்காரருக்கும் கல்வி நிறுவனத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. மாணவர்களை இந்த நிறுவனத்தில் துப்புரவு பணிக்குப் பயன்படுத்துவது இல்லை. வகுப்பறையை மாணவன் சிவநிதி துப்புரவு செய்யவில்லை. வகுப்பில் தனது இருக்கையை சரி செய்தபோது அவரது கால் இடித்து ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவரது பெற்றோருக்குச் சொல்லி அவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். அதன்பிறகு கால் விரல் குணமாகி அந்த மாணவன் பள்ளிக்கு வந்து சென்றுவருகிறார். எனவே தங்களது செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானது அல்ல” என்று கூறியுள்ளார். யாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் நமக்கு இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick