தகவல் ஆணையர்களா? தலையாட்டி பொம்மைகளா?

‘வெளிப்படை’யான நிர்வாகம் அமைய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தகவல் ஆணையத்தின் கமிஷனர்கள் நியமனம் ‘ரகசியமாக’ நடந்திருக்கின்றன.

வெளிப்படைத் தன்மை இல்லை! 

தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கேட்டுக் கிடைக்காவிட்டால் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். தகவல் தரவில்லை என்றால், ஆணையத்தின் மூலம் அதிகபட்சமாக 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அப்படிப்பட்ட அதிகாரமிக்க ஆணையத்தின் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடன் ஆணையர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை.

முதலமைச்சர், அமைச்சர் ஒருவர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரைக்கொண்ட குழுதான் தகவல் ஆணையர்களைத் தேர்வுசெய்ய முடியும். அப்படித் தேர்வானவர்களைத்தான் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் கவர்னர். ஆகஸ்ட் 6-ம் தேதி இதற்காக நடந்த குழுக் கூட்டத்தில் ஜெயலலிதாவும் ஓ.பன்னீர்செல்வமும் மட்டுமே பங்கேற்றனர். எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் கருத்தை கேட்காமலே முடிவு எடுத்திருக்கிறார்கள். பேருக்காக விஜயகாந்த்துக்குக் கடிதம் அனுப்பிவிட்டு கூட்டத்தைக் கூட்டி ஆணையர்களைத் தேர்வு செய்திருக்கிறது அரசு. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க விஜயகாந்த் கட்டையை போட்டுவிடுவார் என்கிற பயம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது அப்பட்டமாகிவிட்டது. விஜயகாந்த்துக்கு அனுப்பிய கடிதத்தில், ஆணையர் பதவிக்கு மனு அளித்தவர்களின் விவரங்கள் இல்லை. மதுவிலக்குக் கோரி, மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி விஜயகாந்த் கைது ஆன அன்றுதான் தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையிலும் ஆணைகளை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்து 9-ம் தேதி பதவியேற்பை நடத்திவிட்டனர்.

‘ஆணையர்கள் நியமனம் முறையாக நடைபெறவில்லை, எனக்கு அனுப்பிய கடிதத்தில் நியமனத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நபர்களின் சுயவிவரங்கள் இணைக்கப்படவில்லை’ என கவர்னர் ரோசய்யாவிடம் நேரில் புகார் மனுக் கொடுத்தார் விஜயகாந்த். இப்போது விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட அதே நிலைதான் முன்பு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா எப்படி செயல்பட்டார்?

இதோ ஃபிளாஷ்பேக்.....

கடந்த தி.மு.க ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதியை தலைமைத் தகவல் ஆணையராக நியமித்தபோது சர்ச்்சைகள் வெடித்தன. ஸ்ரீபதியை தேர்வு செய்வதற்காக 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி தேர்வுக் குழு கூடியது. ஜெயலலிதாவுக்கு அழைப்பு போனது. ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு எதிரான ஸ்ரீபதியை நியமிக்கக் கூடாது’ என தகவல் அறியும் ஆர்வலர்கள் மாதவ், நித்தியானந்த் ஜெயராமன், சரவணன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டனர். உடனே, ‘கூட்டத்தில் பங்கேற்க வசதியாக ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அனுப்பவும்’ என கடிதம் எழுதினார் ஜெயலலிதா. விவரங்கள் அனுப்பாததால் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.

‘குழு உறுப்பினராகிய எனக்கு விவரங்களை அளிக்காமல், தகவல் ஆணையரை நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது’ என அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. ‘ஆணையத்தின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிப்படையான முறை கடைப்பிடிக்கப்படவில்லை. முக்கியமான பதவி ஒளிவுமறைவின்றி நியமனம் செய்யப்பட வேண்டும். பட்டியலை அளித்திருந்தால் நிச்சயமாகக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பேன். குழு உறுப்பினராகிய எனக்கு மட்டும் விவரங்களைத் தர மறுப்பது பாரபட்சமானது’ என அப்போது அறிக்கையில் சீறிய ஜெயலலிதாதான், எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்த்துக்கு இப்போது விவரங்களை அனுப்பவில்லை.

என்னவாகும் வழக்கு?

தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு என்ன ஆகும்? அதற்கும் விடை இருக்கிறது. ஸ்ரீபதியை தவிர, இன்னும் மூன்று பேரை ஆணையர்களாக நியமித்தது முந்தைய தி.மு.க ஆட்சி. 2011-ல் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் அவசர, அவசரமாக அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமல் ராமையா, மனோகரன், ஆறுமுக நயினார் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ‘விதிமுறைகளை மீறிய இந்த நியமனம் செல்லாது’ என்று சொன்னது, சென்னை உயர் நீதிமன்றம். ‘எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்கு தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனாலும், ஆணையர்களை நியமனம்செய்து அன்றே ஆணையை வெளியிட்டிருக்கிறார்கள். நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த நியமன உத்தரவு சட்ட விரோதமானது’ எனச் சொன்னது தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அடங்கிய பெஞ்ச். அந்தத் தீர்ப்பிலிருந்து இப்போதைய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. 

அரசியல் போஸ்டிங்!

தேர்தல் கமிஷனைப்போல தன்னாட்சி அதிகாரம்கொண்டது தகவல் ஆணையம். அப்படிப்பட்ட ஆணையம், ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு போஸ்டிங் போடும் இடமாக மாறிவிட்டது. தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஸ்ரீபதிக்கு நீட்டிப்பு கொடுத்தது தி.மு.க அரசு. அதன்பிறகு செம்மொழி மாநாட்டை நடத்த அவர் ஒத்துழைத்ததால், அதற்குப் பரிசாக, தலைமை தகவல் ஆணையராக அமர்த்தப்பட்டார். இத்தனைக்கும் தகவல் அறியும் சட்டத்துக்கு எதிரானவர் ஸ்ரீபதி. அவர் பதவியேற்றபோதே போராட்டம் நடந்தது. நள்ளிரவில் கருணாநிதியை கைதுசெய்ய உதவியதற்காக கிறிஸ்டோபர் நெல்சனுக்கும் வழக்குகளைப் பார்த்துக்கொண்டதற்காக நீலாம்பிகைக்கும் கருணாநிதியிடம் செயலாளராக இருந்ததற்காக டி.ஆர்.ராமசாமிக்கும் ஆணையர் பதவிகள் தரப்பட்டன. அ.தி.மு.க முன்னாள் எம்.பி. சரோஜாவும் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

‘‘அரசுக்கு பல வகைகளில் உதவியதற்காக இப்போது ராமானுஜத்துக்கு பதவி தரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கு வழக்கில் அவருடன் சமரசம் செய்து கொண்டதாகக் கூறி, வழக்கை திரும்பப் பெறுவதாக வருமான வரித் துறை மனுத் தாக்கல் செய்தபோது, அந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி தட்சிணாமூர்த்தி. அவருக்கும், அ.தி.மு.க நிர்வாகி முருகனுக்கும் தகவல் ஆணையர் பதவிகள் தரப்பட்டிருக்கின்றன. உளவுத் துறையில் பணியாற்றிய ராமானுஜம்தான் தகவல்கள் தரக்கூடிய இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் எப்படி வெளிப்படையாக தகவல்களை சொல்வார்?” என்று கேட்கிறார்கள் தகவல் உரிமை ஆர்வலர்கள்.

‘‘அறிவியல், சட்டம், தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், ஊடகம், நிர்வாகம் மற்றும் ஆட்சி முறையில் அறிவு பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும்’ என்கிறது சட்டம். ‘பல்வேறு கட்டங்களில் தமக்கு உதவியவர்களுக்குத் தகவல் ஆணையர்கள் பதவியளித்து செஞ்சோற்று கடன் தீர்த்திருக்கிறார் ஜெயலலிதா’ என்கிறார் ராமதாஸ்.

அரசியல் சாயம் போர்த்தப்பட்டிருப்பதால் தமிழக தகவல் ஆணையத்தின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சங்கு ஊதும், பாய் விரித்துத் தூங்கும், பூட்டுப் போடும் போராட்டங்கள் ஆணையத்துக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையராக இருந்த சைலேஷ் காந்தி, ‘‘இந்தியாவிலேயே மோசமான ஆணையம் தமிழ்நாடு தகவல் ஆணையம்தான்’’ என சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்.

நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick