தண்ணீரால் ‘தண்ணி’ பிரச்னையை தீர்க்கலாம்!

ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புவெ.பொன்ராஜ்

நீர் அடித்து நீர் விலகுமா என்பார்கள். குடிநீரால் ‘குடி’யை விலக்க முடியும். அமெரிக்க பூர்வீகக் குடிகள்போல், நம் தமிழக இளைஞர்கள், மாணவர்கள், டாஸ்மாக் சரக்கால், கூடிய சீக்கிரத்தில் மியூசியத்துக்குச் சென்றுவிடுவார்கள். வீரத்துக்கும் விவேகத்துக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் பேர்போன இந்த தமிழ் சமூகம், இன்றைக்குக் குழந்தைக்கு சாராயம் புகட்டும் இழிநிலைக்குச் சென்றதற்குக் காரணம் என்ன?

ஆள்வதற்கு வருமானத்தைப் பெருக்க வழிதெரியாத அரசுகள், மாறிமாறி சாராயம் விற்று ஆட்சியை நடத்த வேண்டிய சூழ்நிலை தேவையா என்பதை நாம் அறிவார்ந்த முறையில் அணுகவேண்டும்.

பூரண மதுவிலக்கைக்கொண்டு வந்தால் தமிழக அரசு, 24,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தை எப்படி ஈடுகட்டுவது என்பது மிகப்பெரிய கேள்வி.

குடிதண்ணீரால், ‘தண்ணி’ப் பிரச்னையைச் சரிசெய்யலாம் என்பதுதான் ஒரு வரி பதில்.

2011-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலுக்காக அ.இ.அ.தி.மு.க ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டர் இலவசக் குடிதண்ணீர் தரும் திட்டம் அது. அதனைச் செயல்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.51,000 கோடி வருமானத்தைப் பெறலாம். தமிழக முதல்வர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அவர் மக்கள் மனதில், குறிப்பாக பெண்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடிப்பார். இன்றைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பது கிராமம் வரைக்கும் சென்றுவிட்டது. ஆனால், மக்கள் அதற்குக் கொடுக்கும் விலை அதிகம்.
 
இந்த 20 லிட்டர் இலவச குடிநீர் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தினால், மக்களை சாராயத்தில் இருந்தும், வியாதிகளில் இருந்தும் பாதுகாக்க முடியும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 1.5 கோடி மக்களுக்கு 20 லிட்டர் விலை இல்லா குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்க முடியும். அதே நேரத்தில் 5 கோடி மக்களுக்கு, மார்க்கெட் விலையைவிட குறைந்த விலையில் குடிதண்ணீரைக் கொடுக்க முடியும். இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால், 20,000 சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் உருவாகும். அதன் மூலம் 5.6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

தமிழகத்துக்கு உடனடித் தேவை தண்ணீர் புரட்சி. ரூ.6,000 கோடியில் தமிழக நதிகளை இணைப்பதற்கு என்ன தடை இருக்கிறது? ஆண்டுக்கு, 1.40 லட்சம் கோடி பட்ஜெட் போடும் தமிழக அரசு, நதிகளை இணைப்பதற்கு மத்திய அரசை நம்பித்தான் செய்ய வேண்டுமா? ஆறுகளை, குளங்களை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை தூர்வாரி, மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கி, தமிழக நதிகளை இணைத்து, தமிழக அதி திறன் நீர் வழிச்சாலையை உருவாக்கி, பாசனத்துக்கும் குடிதண்ணீருக்கும் தொழில் துறைக்கும், தேவையான தண்ணீரை நாம் பெற்றாக வேண்டும். இந்தத் திட்டங்களை மட்டுமல்லாமல், கொள்ளிடத்தில் இரண்டு தடுப்பணைகள் மற்றும் அனைத்து ஆறுகளின் ஓரங்களைச் சுத்தப்படுத்தி, அதில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும். இந்தத் திட்டங்களைச் செய்து தமிழகத்தில் ஒரு தண்ணீர் புரட்சிக்கு வித்திடவேண்டும். இந்தத் திட்டங்கள்தான், கண்மாய்களிலும், ஊருணிகளிலும், குளங்களிலும் மழைக்கால தண்ணீரை சேமிக்க உதவும். நிலத்தடி நீரை உயர்த்தினால் மட்டும்தான், மக்களுக்குத் தேவையான தண்ணீரும் சுத்தமான குடிநீரும் கிடைக்கும். இது, அடிப்படையான... உடனே செய்ய வேண்டிய மிகப் பெரிய திட்டம்.

கோயம்புத்தூரில் சிறுதுளி அமைப்பு, மக்களோடும் மாவட்ட நிர்வாகத்தோடும் இணைந்து 7 குளங்களைத் தூர்வாரி மக்களால் இது சாத்தியம் என்று எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். எனவே, அரசை மட்டும் நம்பி பயனில்லை. மக்கள் அனைவரும் ஆங்காங்கே குழுக்களை அமைத்து, இளைஞர்களும் அரசுசாரா அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் சிறிய அளவில் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முன் வரவேண்டும்.

கடல்நீரை குடிநீர் ஆக்குவதோடு மட்டுமல்ல... ஒவ்வொரு கிராமமும், ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தினமும் உற்பத்தி செய்ய முடியும்.  அருப்புக்கோட்டை அத்திப்பட்டி ஊராட்சி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி மாநில மற்றும் மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. மழைநீர் சேகரிப்பை வீட்டோடு மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் குளங்களை, ஊருணிகளை இணைத்துச் செயல்படுத்த வேண்டும். வீட்டுக்கழிவுகள் ஊருணியில் கலக்கும் இடத்தில், இயற்கையாகச் சுத்திகரிக்கும் முறையை அமல்படுத்தி அதை ஊருணியில் கலக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஆழ்குழாய் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தி, அறிவியல் முறையில் சவ்வூடு பரவல் திட்டத்தைச் செயல்படுத்தினால், தமிழகத்தின் 12,000 பஞ்சாயத்துகளில், தினமும் 20,000 லிட்டர் குடிதண்ணீர் உற்பத்தி செய்ய முடியும்.

தினமும் இரண்டு முறை தேவையில்லாத குப்பைகளை எடுத்துப் பிரித்து, அதை பணமாக மாற்றும் (SLRM – Solid and Liquid Resource Management – Vellore Srinivasan model) வழிகளை கிராமம்தோறும் செயல்படுத்த வேண்டும். அதை இன்றைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில், சமூக நிறுவனங்களை (Social Enterprises) உருவாக்கி, பெண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, 10 கிராமங்களை இணைத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், ஒவ்வொரு மாதமும், 10 லட்சம் வருமானம் கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் சுத்தமான கிராமங்களும், நகரங்களும் உருவாகும்.  இந்தத் திட்டத்தை கோயம்புத்தூரில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக, பிரதமரிடம் விருது வாங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தை 10 முதல் 30 கிராமங்களை இணைத்து, ஒவ்வொரு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் செயல்படுத்தினால், வருமானம் பெருகும்; வேலை வாய்ப்பு கிடைக்கும். கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் அனைத்தும் சுத்தமான கிராமங்கள், நகரங்கள் பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாகும்.
தனிக் கழிவறை செப்டிக் டேங்க் ஒழிக்கப்பட வேண்டும். பொதுவாக இணைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

தனிக் கழிவறைகளை, செப்டிக் டேங்க் மூலம் உருவாக்குவதால் நிலத்தடி நீர் பாழ்பட்டு விட்டது. கழிவறைகளையும் அதற்குக் கீழே செப்டிக் டேங்க் கட்டுவதையும் கைவிட்டு,  ஒவ்வொரு கழிப்பறைகளையும் ஒரு பெரிய குழாயின் மூலம் இணைத்து, பொதுவான இடத்துக்குக் கொண்டு சென்று பயோ டைஜெஸ்டர் மூலம் 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், 12,500 கிராமப் பஞ்சாயத்துகளும் 1,250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று நீடித்த வளர்ச்சி அடைய முடியும்.  இந்த மூன்று திட்டங்களைச் செயல்படுத்தினால், தமிழகமும் தன்னிறைவு அடையும். நிலத்தடி நீர் மாசுபடாது, கழிவுகள், குப்பைகள் தேங்காது. 

இந்தத் திட்டங்கள் அனைத்தையும் சேர்த்து, மக்களோடு அரசாங்கமும் சேர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

தண்ணீர் புரட்சி மட்டும்தான், தமிழக மக்களை, தாய்மார்களை, இளைஞர்களை, பள்ளி மாணவர்களைக் காப்பாற்றும். இப்படிப்பட்ட மாற்றம் ஒரு நாள் நடக்கும்.’’

கட்டுரையாளர்:  (அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick