டி.வி-யில் முகத்தைக் காட்டினால் கட்சி வளர்ந்துவிடுமா?

காரசார கார்த்திக் சிதம்பரம்

“தமிழ்நாட்டு அரசியலில் தனிநபர் விமர்சனம் அதிகமாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே பிரதமரையும் முதல்வரையும் நாகரிகம் இல்லாமல் நக்கல் செய்வது சரியல்ல...’’ என சூடாகப் பேச ஆரம்பித்தார் கார்த்தி சிதம்பரம். அவர் குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத்தான்.

“உங்கள் கட்சித் தலைவர் இளங்கோவன் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்?”

“அரசியலில் நக்கல், நையாண்டி இருக்கலாம். ஒருபோதும் வரம்பு மீறக் கூடாது. ஆனால், இளங்கோவனின் பேச்சு வரம்பு மீறியது. அநாகரிகமானது. மக்களுக்கும் அதுதான் பிடித்து இருக்கிறதுபோல. புள்ளிவிவரங்களைக் கொண்டு அரசியல் பார்வையோடு பேசினால், அவர்களை ஏதோ மாதிரியாகப் பார்க்கிறார்கள். அதற்கு உதாரணம் என் தந்தை ப.சிதம்பரம். பார்லிமென்டில் நடக்கும் கூச்சல் குழப்பங்களை வைத்து ‘தமிழ்நாடு போல் ஆகிவருகிறது இந்திய நாடாளுமன்றம்’ என்கிற ரீதியில் விமர்சித்து இருக்கிறது ஓர் ஆங்கில நாளேடு. பார்த்துக்கொள்ளுங்கள்... தமிழ்நாட்டின் நிலையை. இது மாறவேண்டும்.”

“இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க-வினர் போராட்டங்கள் நடத்தியது சரியானதா?”

“இளங்கோவன் பேச்சை நியாயப்படுத்த முடியாது. அதற்காக, ஒரு கட்சியின் தொண்டர்கள், இன்னொரு கட்சியின் அலுவலகங்களைத் தாக்குவது, அதைவிட மோசமான செயல். தங்கள் கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்வதை ஒரு வகையில் அ.தி.மு.க ஊக்குவித்து இருக்கிறது. 1994-ல் காவிரிப் பிரச்னை தொடர்பாக என் தந்தை கருத்துத் தெரிவித்தார். அதற்காக, அவரைத் தாக்கிய இளவரசன் என்பவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியையும், ஆவின் தலைவர் பதவியையும் அ.தி.மு.க தலைமை வழங்கியது. இப்படி தலைமை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. இப்போது நடந்துள்ள போராட்டங்களும் கண்டிக்கப்பட வேண்டியவைதான்.”

“இளங்கோவனால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ‘ஆக்டிவ்’ ஆக இருக்கிறது என்று சொல்கிறார்களே?”

“இளங்கோவனால்தான் தமிழ்நாடு காங்கிரஸ் ஆக்டிவ் ஆக இருக்கிறது என்று சொல்வது அபத்தமானது. ஏதோ ஒரு வகையில் அவர் ஊடக வெளிச்சத்தில் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். ஒரு தலைவர் தன் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்தார், மக்களுக்காக என்ன செய்தார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அடிக்கடி ஊடகங்களில் முகத்தைக் காட்டினால் கட்சி வளர்ந்துவிடுமா? வைகோ கூடத்தான் அடிக்கடி ஊடகங்களில் முகத்தைக் காட்டுகிறார். ஆனால் அவரது வாக்கு சதவிகிதம் வெறும் 3 சதவிகிதம்தானே!”

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”

“பி.ஜே.பி-யைப்போல காங்கிரஸும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில், காகிதத்தில் பெயர்களை எழுதுவது மட்டுமே வேலையல்ல. அவை  ஓட்டுகளாக மாற வேண்டும். 70 லட்சம் உறுப்பினர்கள் என்று சொன்னார்கள். ஆனால், கடந்த தேர்தலில் நாங்கள் வாங்கிய ஓட்டுகளோ வெறும் 18 லட்சம்தான். இன்றைய காலகட்டத்தில், போராட்டங்களை எல்லாம் மக்கள் விரும்புவதில்லை. சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்தினால் மக்கள் திட்டுகிறார்கள். அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க போன்ற கட்சிகள் வளராமல் இருக்கின்றன. ஊடக வெளிச்சத்துக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை, கட்சியைப் பலப்படுத்துவதில் காண்பித்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் தேறும்.”

“இவ்வளவு பேசுகிற நீங்கள், பல நாட்கள் ‘அரசியலில்’ இருப்பதில்லையே...?”

“எனக்குத் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நேர்மையாகத் தொழில் நடத்துகிறேன். அதற்காக, மக்களைவிட்டு விலகி இருக்கிறேன் என்பது தவறு. தொழில்நுட்ப வளர்ச்சி, எங்கிருந்தாலும் இணைக்கக்கூடியது. 24 மணி நேரமும் நக்கலடித்துக்கொண்டும், அறிக்கை வெளியிட்டுக்கொண்டும் இருக்க நான் தயார் இல்லை. யாருக்கும் பயப்பட வேண்டிய நிலையிலும் நான் இல்லை. யாருக்கும் வளைந்து கொடுக்கவும் எனக்குத் தெரியாது. அது என் பலம். அதுவே என் பலவீனமாகவும் இருக்கிறது.”


‘சுறுக்’ கேள்விகள்... ‘நறுக்’ பதில்கள்!

“குஷ்பு வடிவத்தில் இந்திராகாந்தியை பார்க்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னது?”

“அவர் கண் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.”

“குஷ்புவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா?”

“வந்தாரை வாழவைக்கும் காங்கிரஸ் கட்சி.”

“ஜி.கே.வாசன்?”

“அவரது கொள்கைகளை விளக்குங்கள் ப்ளீஸ்...!”

“த.மா.கா உறுப்பினர் சேர்க்கை?”

‘‘தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள், எங்களைப்போல...’’

“திராவிடக் கட்சிகளுக்கு மாற்று விஜயகாந்த்தா?”

“விஜயகாந்த் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.”

“உங்களுக்கு எதிராக லலித்மோடி குற்றச்சாட்டு வைத்துள்ளாரே?”

“காலையில் எழுந்தவுடன் யாரோ ஒருவரை ட்விட்டரில் குறைசொல்ல வேண்டும் என்பது அவரது வழக்கம்போல.”

- மா.அ.மோகன் பிரபாகரன், படம்: கே.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick