“சிறையில் போட்டால்தான் இளங்கோவன் திருந்துவார்!”

கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

“கொச்சையாகவும், வக்கிரமாகவும், பாலியல் ரீதியாகவும் கருத்துகளைத் தெரிவிப்பது, திராவிட இயக்கத்தினரின் குணம். அது, ஈ.வெ.ரா-வின் பேரனான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ரத்தத்திலே ஊறிப்போயிருக்கிறது” என்று கொந்தளிக்கிறார் பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா!

 பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இளங்கோவனுக்கு எதிராக தமிழகத்தைப் போராட்டக்களமாக மாற்றியுள்ளனர் அ.தி.மு.க-வினர்.

பி.ஜே.பி-யினரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். சோனியாவுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் தமிழிசை செளந்தர்ராஜன். இந்த நிலையில், இளங்கோவன் மீது தமிழக டி.ஜி.பி-யிடம் புகார் செய்தார் ஹெச்.ராஜா. அவரிடம் பேசினோம்.

‘‘டி.ஜி.பி-யிடம் அளித்த புகாரில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?’’

‘‘பிரதமர் மோடியும் முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த மறுதினமே,  ‘கள்ள உறவு’ என்று இளங்கோவன் பேட்டி கொடுத்தார். அப்படிப் பேசுவது அவரது இயல்பு என்று முதலில் விட்டுவிட்டேன். அதன் பிறகு, கடந்த 14-ம் தேதி ஒரு கூட்டத்தில், ‘சசிபெருமாளுக்கு அனுதாபம்கூட தெரிவிக்க முடியாமல், வாய் பேச முடியாது என்றவர், 50 நிமிடங்கள் மோடியிடம் பேசாமல் என்ன செய்தார்? தவறாக நினைக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டு தவறான அர்த்தம் உள்ள வார்த்தைகளைச் சொன்னார்.  வக்கிரமான, ஈனத்தனமான பேச்சு இது. இதை அப்படியே டி.ஜி.பி-யிடம் எழுதிக்கொடுத்துள்ளேன். அவரை கைதுசெய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்.”

  “ ‘பி.ஜே.பி-யின் மேல்மட்டத் தலைவர்கள் அ.தி.மு.க-வுடன் நல்ல உறவில் உள்ளனர். தமிழக பி.ஜே.பி மட்டும் அ.தி.மு.க-வை விமர்சிப்பதால்தான், அ.தி.மு.க - பி.ஜே.பி இடையே இருப்பது கள்ள உறவு’ என்று இளங்கோவன் விளக்கம் சொல்லியிருக்கிறாரே?”

“மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வந்தது, ஸ்மார்ட் சிட்டி பற்றிப்பேசுவதற்காக. அமைச்சர் அருண் ஜெட்லி வந்தது, நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு ஆதரவு கேட்டு. பிரதமர் வந்தபோது முதல்வர் போய் வரவேற்றார். எல்லாம் பகிரங்கமாகத்தான் நடக்கிறது. கட்சிகளுக்கு இடையே கள்ள உறவு என்று அவர் கூறியிருந்தால், அது வேறு. ஆனால், ‘இந்த வயதில் தவறு நடக்காது’ என்று கூறியிருப்பது, கட்சிகளுக்கு இடையிலான உறவு பற்றியதா?”

“தவறாக நினைக்கக் கூடாது என்று கூறிவிட்டுத்தான் நான் பேசினேன் என்று இளங்கோவன் சொல்கிறாரே?”

“ ‘நானும் அதேபோன்று ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள், தவறாக நினைக்காதீர்கள்’ என்று நான் சொன்னால், அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? ஈ.வெ.ரா-தான், தமிழக அரசியலில் அநாகரிகமாகவும் வக்கிரமாகவும் பேசுவதைத் தொடங்கி வைத்தவர். அவருடைய சிஷ்யர்களும் அவரை மாதிரியேதான். ஒரு முறை, சிரிமாவோ பண்டாரநாயகாவும், நேருவும் சந்தித்ததை, “கணவனை இழந்த பண்டாரநாயகாவும், மனைவியை இழந்த நேருவும் சந்தித்து என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியாதா...” என்று அண்ணா சொன்னார். ‘எங்கே இருக்கிறது உங்கள் திராவிட நாடு?’ என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்தநாயகி சட்டமன்றத்தில் கேட்டதற்கு, ‘பாவாடை நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்...’ என்று ஒரு தலைவர் சொன்னார். திராவிட இயக்கங்களின் இந்தக் குணம்தான், இளங்கோவனின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.”

“இளங்கோவனுக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருக்கிறாரே, குஷ்பு?”

“கல்யாணம் பண்ணிக்கொள்ளாமலேயே பாலியல் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொன்ன குஷ்பு, வேறு என்ன சொல்வார்?”

 “இளங்கோவனுடைய கருத்தில் உடன்பாடு இல்லையென்றால், சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். உருவபொம்மை எரிப்பு கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளாரே?”

“இது, சாத்தான் வேதம் ஓதுவது மாதிரி. கருணாநிதியைப் பற்றி, உ.பி-யில் எங்கோ இருந்த வி.ஹெச்.பி தலைவரான வேதாந்தி பேசியதற்காக என் வீட்டையும், பி.ஜே.பி அலுவலகத்தையும் தாக்கினார்கள். தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் உடன்பாடு இல்லையென்றால், சட்ட ரீதியாக அணுகியிருக்கலாமே. ஆனால், மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்தார்களே. அப்போது கருணாநிதி என்ன செய்தார்? இவை அனைத்தும் இந்தப் பிரச்னையை திசை திருப்பும் பேச்சுக்கள் மட்டுமே!

தொடர்ந்து இப்படிப் பேசிவரும் இளங்கோவனை, சிறையில் போட வேண்டும். அப்போதுதான் திருந்துவார். சரியான பாதைக்கு அவர் திரும்புவார். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியாவுக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை கடிதம் எழுதி உள்ளார். அதுவும் நல்ல முடிவுதான். இளங்கோவன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

- அ.சையது அபுதாஹிர், படம்: எஸ்.சாய்தர்மராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick