அன்புடன் ஆனந்த விகடன்

மிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக ‘மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது. இந்தத் தொடர் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.

இதுபோன்ற தொடர், விகடன் வாசகர்களுக்கு புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த தி.மு.க. ஆட்சியின்போதும், கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் ‘மந்திரி தந்திரி’ தொடரில் அனைத்து அமைச்சர்கள் குறித்தும் ஆனந்த விகடனில் எழுதினோம். அன்றைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதி உள்ளோம்.

மு.க. குடும்பப் பரிவாரம், தமிழக தர்பார்கள்- 28 அமைச்சர்கள், மதுரை குலுங்கக் குலுங்க, தி.மு.க-வின்  மெகா 10 தவறுகள், கருணாநிதியின் கலகக் குடும்பம் (கருணாநிதி - மாறன் சகோதரர்கள் மோதல்), கருணாநிதிக்கு பகிரங்கக் கடிதம், மு.க.நெட்வொர்க், கருணாநிதி குடும்பத்தில் பதவி மோதல்,  கருணாநிதி அரசின் கடன், மு.க. சர்க்கார் முழு தர்பார், கோபாலபுரம் மோதல் பாரதம், அருந்தமிழ் அல்வா- 380 கோடியில் நடந்த முத்துக்குளியல், அண்ணா முதல் ஆ.ராசா வரை, மழையில் தொடங்கிய கட்சி... பூகம்பத்தில் மீண்டும் பூக்குமா? அன்று பராசக்தி இன்று பல்டியே சக்தி.... இப்படி ஏராளமான கட்டுரைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஸ்பெக்ட்ரம், ஏர்செல் மேக்ஸிஸ், டெலிபோன் இணைப்பு ஆகிய முறைகேடுகள் குறித்தும், ஆ.ராசா, கனிமொழி, கலாநிதி, தயாநிதி ஆகியோர் குறித்தும் தொடர்ந்து எழுதி உள்ளோம். ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக, தனிப்புத்தகமே விகடன் பிரசுரம் வெளியிட்டு உள்ளது. இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் விகடன் டாட் காமில் வாசகர்கள் இப்போதும் படிக்கலாம். அப்படி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு https://www.vikatan.com/news/politics/55466-election-coverage.art என்கிற இணைப்பில் இடம்பெற்றிருக்கிறது.

அரசு இயந்திரத்தையும், நம்மை ஆளும் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுவதும் விமர்சிப்பதும் ஒரு பத்திரிகையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. எந்த ஆட்சி இருந்தாலும் அந்தக் கடமையில் இருந்து ஆனந்த விகடன் தவறியது இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது, அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான தொடர் கட்டுரைகளின் வரிசையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை ‘என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பின் கீழ் நவம்பர் 25-ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டோம்.

அது முதல் ஆனந்த விகடன் மீது கடுமையான விமர்சனங்கள் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழில் எழுதப்பட்டு வருகிறது.  முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர்- வெளியீட்டாளர், அச்சிடுபவர் ஆகியோர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விகடனுக்கு வழக்குகள் புதிது அல்ல. இந்த வழக்கையும் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தொடர்ந்து கிடைத்துவரும் தகவல்கள், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பவையாக உள்ளன. ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைத் தொடர்புகொள்ளும் காவல் துறையைச் சேர்ந்த சிலர், ஆனந்த விகடனை விற்கக் கூடாது என்று அச்சுறுத்துகின்றனர். மீறி விற்பனைசெய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள். இது அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இன்னொருபுறம், விகடனின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த 23-ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் விகடனைத்  தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், விகடன் ஃபேஸ்புக் பக்கத்தை மட்டும் முடக்கி உள்ளார்கள். இது தொடர்பாக எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் மேற்கொண்ட விசாரணைக்கும் இதுவரை முறையான, முழுமையான பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும் இந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எத்தகைய இடையூறுகள் வந்தாலும், உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும். ஆனந்த விகடனின் வரமும் உரமும் வாசகர்களாகிய நீங்கள்தான். தங்களின் அன்பும் ஆதரவுமே என்றென்றும் எங்களை வழிநடத்தும்!

- ஆசிரியர்
ஆனந்த விகடன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick