வெள்ள நிவாரணம்... “கவலைப்படாத நடிகர்கள்... விஜயகாந்த், ஸ்டாலினை பாராட்டலாம்!”

தமிழிசை தடாலடி

“மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய மழை, ஒரே சமயத்தில் பெய்துவிட்டது என்று முதல்வர் சொல்கிறார். அதற்காகத் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை மீட்காமல் விட்டுவிட முடியுமா? மீட்புப் பணிகளை மேற்கொள்ளச் சொன்னால், தொகுதிகளுக்குப் போய் மக்களிடம் பிரசாரம் செய்துவிட்டு வருகிறார்” எனச் சொல்லும் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் காட்டம் குறையவில்லை. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“வெள்ள நிவாரணப் பணிகள் ஒழுங்காக செய்யப்படுகின்றனவா?”

“இதுவரை இல்லை. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அ.தி.மு.க. அரசு மட்டுமல்ல, முன்பிருந்த தி.மு.க அரசும், தொலைநோக்குப் பார்வையோடு எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. மழை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்குதான் இவர்களிடம் இருக்கிறது. பல இடங்களில் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டதால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக இடிக்க வேண்டும். அவற்றுக்கு அனுமதி கொடுத்தவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். கூவம், அடையாறு, போரூர் ஏரி ஆகியவற்றின் பராமரிப்புக்காகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் என்ன ஆனது என்பதை விசாரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்வது சரியில்லை. தமிழகத்தை ஏற்கெனவே ஆண்ட தி.மு.க-வோ, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியைப்போல, ‘இது சரியில்லை... அது சரியில்லை’ என அ.தி.மு.க அரசை குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.”

“மழை நிவாரணப் பணிகளில் மற்ற கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி?”

“மழை ஆரம்பித்த நாளில் இருந்து நானும், எங்களது கட்சித் தொண்டர்களும் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தியிருக்கிறோம். ஆனால் ஆளும் கட்சியோ, வெறும் விளம்பரத்துக்காக அமைச்சர்களை அனுப்புகிறது. இந்த விஷயத்தில் விஜயகாந்த், ஸ்டாலின் ஆகியோரைப் பாராட்ட வேண்டும். ஆனால், நடிகர் சங்க நிர்வாகிகள் மழை நிவாரணம் குறித்து முதல்வரைச் சந்திக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், வேறு எதையோ பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். ரசிகர்கள் கொடுக்கும் பணத்தில் சொகுசாக வாழும் சினிமா நடிகர்கள், அந்த ரசிகர் களாகிய மக்கள், வெள்ளத்தில் துயரப்படும்போது, அவர்களுக்கு உதவ மனமின்றி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.”

“மத்தியில் உங்கள் ஆட்சிதானே நடக்கிறது. நேரடியாக உதவி செய்யாமல், ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது?”

“கிடையவே கிடையாது. மத்திய அரசுதான் ராணுவத்தையும், கப்பற்படையையும் மீட்புப் பணிக்கு அனுப்பியது. தேவைப்பட்டால் கூடுதல் படையையும் அளிக்கத் தயாராக இருக்கிறது. இதற்கு எல்லாம் முன்னதாக மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கைவைக்க வேண்டும். ஆனால், நம் முதல்வர் ஏனோ கேட்கவில்லை. பலத்த எதிர்ப்புக்குப் பிறகுதான், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி உதவி கேட்டுள்ளார். அமைச்சரும் உதவுவதாகச் சொல்லி இருக்கிறார். கட்சித் தலைவரிடம் நிலையைச் சொன்னதும் உடனடியாக ஒரு கோடி ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு வெள்ளப் பாதிப்பு தொடர்பான அறிக்கையைச் சமர்பித்ததும் மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கும். ஆனால், மாநில அரசு ஒதுக்கி இருக்கும் 500 கோடி ரூபாய் போதாது.”

“ ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்து விட்டாரே?”

“தேசிய ஜனநாயகக்  கூட்டணி அதிகாரப் பூர்வமாக உடையவில்லை. வைகோ மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அவர் சேர்ந்த கூட்டணியும் பலன் அளிக்காது. ராமதாஸ் தன் முடிவை மறுபரிசீலனைசெய்ய வேண்டும். தனியாகத் தேர்தலைச் சந்தித்தால் அவர்களது நிலை என்ன ஆகும் என்பது அவருக்குத் தெரியும். திராவிடக் கட்சிகளை இனி ஆட்சி அமைக்கவிடக் கூடாது என்றுதான் ராமதாஸ், விஜயகாந்த் என எல்லோரும் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் எங்கள் கூட்டணியிலேயே இருக்க வேண்டும். சட்டசபைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் முதல்வர் வர வேண்டும். அது யார் என்பதைப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம்.”

- மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick