அந்த இரவை சென்னை மறக்காது!

கண்ணீர் (மழை) துளிகள்...

ழைவெள்ளத்தால் தத்தளித்த தலைநகர் சென்னையில், கடந்த 23-ம் தேதி காலையில் வெயில் அடித்தது. அதனால், மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். அந்த நிம்மதி சில மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அன்று மதியம் 2 மணி அளவில் லேசான தூறலாக ஆரம்பித்த மழை, மாலை 4 மணி அளவில் வெளுத்து வாங்க ஆரம்பித்தது. கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளும், தெருக்களும் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில், பல அடி உயரத்துக்குத் தண்ணீர் நின்றதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.


அன்றைய தினம் மாலையில் அலுவலகம் முடிந்து கிளம்பியவர்​களின் அனுபவம் மிகக் கொடுமை​யானது. பல மணி நேரம் டிராஃபிக் ஜாமில் சிக்கிய சென்னை​வாசிகள், தங்கள் துயரங்களை ஃபேஸ்​புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக​ வலை​தளங்​களில் கண்ணீர் காவியங்களாகப் படைத்தனர்.

‘‘நேற்றைய இரவு நரகம்போல் இருந்தது!”

ஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் எழுத்தாளர் விநாயக முருகனின் அனுபவம் இது:

‘‘வாழ்க்கையில் ஒரு சில இரவு​களை மறக்க முடியாது. நேற்றைய இரவு நரகம்போல இருந்தது. விடியல் இல்லாத அந்த இரவு நீண்டுகொண்டே செல்வது​போல உணர்ந்தேன். எட்டு மணிக்கு அலுவலகப் பேருந்தில் இருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன். நாங்கள் யாரும் இரவு உணவு சாப்​பிடவில்லை. பேருந்திலிருந்த ஒரு பெண், தனது கையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பிஸ்கெட் கொடுத்தார். பஸ்ஸில் இருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் எல்லா இடங்களிலும் மக்கள் வெளிறிய முகங்களுடன் நின்றார்கள். பெண்கள் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றார்கள். இயற்கை உபாதையைக்கூட அடக்கிக்​கொண்டு பெண்கள் பேருந்தில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் சென்ற எனது மனைவி அவரது தோழியின் வீட்டிலேயே தங்கினார். இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய ஹாலிவுட் படங்களில் வருவது​போல சென்னை நகரமெங்கும் ஒருவித பீதி படிந்திருந்தது. பேருந்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் அவரவர்​ நண்பர்களிடம் அலைபேசியில் பேசினார்கள். ‘தில்லை கங்கா நகர் சப்வே மூடியாச்சு. வேளச்சேரியோ ரொம்ப மோசம். தயவுசெய்து கிண்டி வழியா போய்டுங்க, சென்னை பைபாஸ் பிடிங்க’ என ஆலோசனைகள், அக்கறை நிறைந்த விசாரிப்புகள் என்று பேருந்து முழுக்க உரையாடல்கள் நிறைந்திருந்தன. நடைபாதை​வாசிகள், குடிசைவாசிகள் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை​கூட செய்​யமுடியவில்லை.

கோவனை கைதுசெய்ய ஆர்வம் காட்டிய, டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்புக்கு நின்ற, கல்லூரி மாணவர்களைப் பின்னியெடுத்த போலீஸ்காரர்கள் எல்லோரும் சாலையோரமாகக் கைகட்டி அமைதியாக நிற்கிறார்கள். இளைஞர்கள் நின்றுபோன தங்கள் பைக்கை தலைகுனிந்து இடுப்பளவு நீரில் நகர்த்திச் சென்றார்கள். சிலர் வாகனத்தைப் பாலத்துக்கு அடியில் நிறுத்தி பூட்டி​வைத்துவிட்டு நடந்தே சென்றார்கள். சென்னையில் சர்வேதேச தரம் வாய்ந்த சாலை என்று சொல்லும் இங்கேயே முறையான வெள்ளநீர் வடிகால் இல்லை. வேறு எங்கு இருக்கும்?
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இவ்வளவு கட்டடங்கள் கட்டியது மிகப் பெரிய பிழை. இந்தக் கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு ஏரியை பழையபடி கொண்டுவர முடியுமா? வளர்ச்சி என்பது 100-ல் 90 பேரை அழித்துவிட்டு 10 பேருக்கு மட்டும் இருக்கக் கூடாது. முறையான வடிகால் வசதி இல்லாத திட்டமிடாத மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னைக்கு இன்று இல்லா​விட்டாலும் என்றாவது ஒருநாள் நீரால் அழிந்துபோகும் அபாயம் உள்ளது’’ என்று எழுதியிருக்​கிறார்.

‘‘போய்க்கொண்டே இருந்தோம்!”

தனியார் அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் ஷாலினி, தன் துயர அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்தார்.

‘‘மாலை 6 மணிக்கு அலுவலத்தில் இருந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, செம மழை. இந்த மழையில் எப்படி வீடு போய்ச் சேருவது என்பதை நினைத்தபோது, பகீர் என்று இருந்தது. நானும், என்னுடன் வேலை செய்யும் இரு பெண்களும் பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம் போக வேண்டும். ‘பயங்கர டிராஃபிக் ஜாமாக இருக்கிறது. பஸ் எதுவும் போகவில்லை’ என்று நண்பர்கள் சொன்னார்கள்.  ரயிலில் போய்விடலாம் என்று யோசிக்கையில், ‘ட்ராக்கில் மழைநீர். ரயில்கள் போகவில்லை’ என்று சொன்னார்கள். கால் டாக்ஸி அல்லது ஆட்டோ பிடித்துப் போகலாம் என்று முடிவுசெய்தோம்.

கால் டாக்ஸி, ஆட்டோ புக் பண்ணுவதற்கு ஆண்ட்ராய்டு போனில் உள்ள அத்தனை அப்ளிகேஷன்களிலும் முயற்சிசெய்தோம். ‘நோ கேப்ஸ்’... ‘நோ ஆட்டோ’. சென்னையில் கால் டாக்ஸிகளுக்கான அப்ளிகேஷன்கள் எத்தனை உள்ளன என்று கணக்கெடுத்ததுதான் மிச்சம். எங்களுக்கு என்னசெய்வது என்றே தெரியவில்லை. பக்கத்தில், விடுதிகளில் சில தோழிகள் தங்கியிருக்​கிறார்கள். அவர்களுடைய அறையில் இரவு தங்கிவிடலாம் என்று யோசித்தோம். அதுவும் செட் ஆகவில்லை. 

அப்போது எங்கள் உயர் அதிகாரி ஒருவர், வீட்டுக்குப் போவதற்காக 6 மணிக்கு கால் டாக்ஸி புக் செய்துவிட்டு, இரண்டரை மணி நேரம் காத்திருந்தார். 8.30 மணி வரை அந்த கால் டாக்ஸி வரவில்லை. அதனால், அவருடைய நண்பர் காரில் அவர் சென்றுவிட்டார். அவர் புக் செய்த கால் டாக்ஸி 8.55 மணிக்குத்தான் வந்தது. அதில் நாங்கள் ஏறிக்கொண்டோம். ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்தோம். ஆனால், ஸ்பென்ஸர் பிளாஸாவில் இருந்து சத்யம் தியேட்டர் போவதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஜெமினி மேம்பாலத்தைத் தொடும்போது இரவு 10.15 ஆனது. ‘பத்திரமாகச் செல்லுங்கள்’ என்று எங்களை அனுப்பி​வைத்த உயர் அதிகாரி ஒருவர், ‘வீட்டுப் போயிட்டீங்களா?’ என்று இரவு 12 மணிக்கு மெஸேஜ் அனுப்பினார். ‘இப்போதுதான் சைதாப்பேட்டைக்கே வந்திருக்கிறோம்’ என்று நாங்கள் அனுப்பிய பதில் மெஸேஜைப் பார்த்து அவர் பதறிப்​போனார்.

சைதாப்பேட்டையிலே சுமார் ஒன்றரை மணிநேரம் கார் நின்றுவிட்டது. பயங்கர பசி வேறு. சாப்பிட ஏதாவது வாங்கலாம் என்றால், நந்தனம் முதல் கிண்டி வரை ஒரு கடைகூட இல்லை. திடீரென சைதாப்பேட்டை சிக்னலுக்கு முன்பாக எல்லா வாகனங்களும் ஆஃப் ஆகி நின்றன. ‘கிண்டியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு மேல் வண்டி போகாது’ என்று சொன்னார்கள். எங்களுக்குத் தலைசுற்றியது. எங்கள் வீட்டில் இருந்து வரிசையாக போன் கால்கள் வந்துகொண்டே இருந்தன. ‘எப்படி இருக்கீங்க? பத்திரமா வாங்க’ என்று பதைபதைப்போடு விசாரித்துக்​கொண்டிருந்தார்கள்.

காரில் இருந்து எட்டிப்பார்த்தால், எங்களைப்போலவே பரிதாபமான நிலையில் ஏராளமான பெண்கள் அங்கு நின்றுகொண்டிருந்த பஸ்களில் அமர்ந்திருந்தனர். ஒரு வழியாக மீண்டும் வாகனங்கள் லேசாக நகர்ந்தன. எங்கள் காருக்கு முன்னால் இருந்த லாரியின் ஓட்டுநர் அசந்து தூங்கிவிட்டார்போல. பின்னால் இருந்த வாகனங்களில் இருந்து ஒரே ஹார்ன் சத்தம். அதன் பிறகுதான் அவர் லாரியை எடுத்தார். ஒரு பக்கம் பசி, ஒரு பக்கம் பயம் என நள்ளிரவு 2 மணிக்கு நங்கநல்லூர் சிக்னலை அடைந்தோம். பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. ஏர்போர்ட் குடியிருப்புக்கு இடையில் உள்ள சிறிய கேட் வழியாக எங்கள் தெருவுக்குள் கார் நுழைந்தது. எங்கள் பகுதி முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. தெருக்கோடியில் உள்ள பெருமாள் கோயில் சுவரைப் பார்த்தவுடன்தான் எங்களுக்கு உயிரே வந்தது. என்னுடன் வந்த இரண்டு பெண்களும் இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று என் வீட்டிலேயே தங்கிவிட்டனர்” என்றார்.

‘‘அந்த சைடு போகாதீங்க...’’

ஐ.டி. நிறுவன ஊழியரான இளவரசி, சோழிங்கநல்லூரில் இருந்து பூந்தமல்லிக்குச் சென்ற தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“நான் வேலை செய்கிற ஐ.டி. கம்பெனி சோழிங்கநல்லூரில் இருக்கிறது. அன்றைய தினம் வேலை முடிந்து இரவு 10 மணிக்கு அலுவலக வேனில் ஏறினோம். மூன்று ஆண்கள், 9 பெண்கள் இருந்தோம். பயங்கர டிராஃபிக் ஜாம். மெதுவாக ஊர்ந்து சென்ற எங்கள் வேன், வேளச்சேரியில் வந்து மாட்டியது. இரண்டு மணி நேரம் வேளச்சேரியை விட்டு நகரவே இல்லை. இரவு 12 மணியாகிவிட்டது. இடை வழியில் மாட்டிக் கொண்டு முழிப்பதைவிட மறுபடியும் கம்பெனிக்கே போய்விடலாமா என்று யோசித்தேன். பெரும் குழப்பமாக இருந்தது. இந்த நேரத்தில் அலுவலம் போய் என்ன செய்வது என்று நினைத்து, எத்தனை மணி ஆனாலும் வீட்டுக்குப் போய்விடலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்தன. பொதுமக்கள் ஆங்காங்கே நின்று, ‘இந்த சைடு போகாதீங்க... அந்த சைடு போங்க’ என்று வாகனங்களைத் திருப்பிவிட்டுக்​கொண்​டிருந்தனர். ஆனால், எந்தப் ​பக்கம் போனாலும் போலீஸார் தடைகள் போட்டிருந்​தார்கள்.
 
எங்களுடைய வேன் எங்கெங்கோ சந்துபொந்து எல்லாம் சுத்திக்கொண்டு போனது. ‘கிண்டி ரேஸ்கோர்ஸ் வழியாகப் போனால் ஈஸியாக இருக்கும்’ ​என்று டிரைவர் சொன்னார். ‘சரி... அப்படியே போங்கள்’ என்றோம். அவர் சொன்ன மாதிரியே அது கொஞ்சம் நல்ல ரூட்டாத்தான் இருந்தது. எங்கள் வேனில் வந்தவர்கள் அவரவர் பகுதியில் இறங்கிச் சென்றார்கள். போரூர் வந்தபோது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. ஒரு பெண்ணுடைய வீடு சந்துக்குள் இருந்தது. அங்கே இடுப்பளவுக்கு தண்ணீர். அதனால், வேன் உள்ளே வராது என்று டிரைவர் சொல்லிவிட்டார். பாவம், அந்தப் பெண், இடுப்பளவு தண்ணீரில் அந்த இருட்டுக்குள் நடந்துபோனார்.

எல்லோரும் அவரவர் குடும்பத்தின ரோடு தொடர்புகொண்டு, இந்த இடத்தில் வருகிறோம், அந்த இடத்தில் நிற்கிறோம் என்று சொல்லிக்கொண்டே வந்தோம். திடீரென பலரோட செல்போன்கள் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டன. ஒன்றிரண்டு பேரோட செல்போன்களில் மட்டும் சார்ஜ் இருந்ததால், அதை வாங்கி எல்லோரும் பேசினார்கள். பூந்தமல்லியில் என் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது இரவு 2.30 மணி’’ என்றார்.

பசியோடு அலைந்த முதியவர்!

மாலை 6 மணிக்கு பாரிமுனையில் இருந்து கிளம்பி 8.30 மணி வரை ஜெமினி மேம்பாலத்தில் சிக்கியிருந்த ஒரு வழக்கறிஞரின் அனுபவம் இது.

“என் வீடு சைதாப்பேட்டையில் இருக்கிறது. பாரிமுனையில் கிளம்பியபோது, என் காருக்கு 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன். ஜெமினி மேம்பாலத்துக்கு முன்பாக ஒன்றரை மணி நேரம் டிராஃபிக் ஸ்தம்பித்து நின்றது. இன்ஜின் ரன்னிங்லயே இருந்தது. திரும்ப ஸ்டார்ட் ஆகாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இன்ஜினை ஆஃப் பண்ணவில்லை. அப்போது, முதியவர் ஒருவர் ஒவ்வொரு காரின் கதவையும் தட்டிக்கொண்டே வந்தார். என் கார் கதவைத் தட்டிய அந்த நபர், ‘நான் ஒரு சுகர் பேஷன்ட். தாகமும், பசியும் பயங்கரமா இருக்கு. தண்ணி வெச்சிருக்கீங்களா, சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் வச்சிருக்கீங்களானு கேட்டார். அவரைப் பார்த்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலையும், பிஸ்கட் பாக்கெட்டையும் அவரிடம் கொடுத்தேன். சைதாப்​பேட்டையில் என் வீட்டை அடைய 10.30 ஆகிவிட்டது. பாதி   பெட்ரோல் தீர்ந்துவிட்டது” என்றார் அந்த வழக்கறிஞர்.

‘‘சென்னையை வலம் வந்தோம்!”

சிங்கப்பூரில் இருந்து வந்த அண்ணனை விமான நிலையத்தில் பிக்அப் செய்வதற்காக திருவேல்லிக் கேணியில் இருந்து புறப்பட்ட ஐ.டி. ஊழியர் ராஜேஷின் அனுபவம் இது.

“இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கும் என்று சொல்லியி ருந்தார் அண்ணன். அவரை அழைத்துவர என்னுடைய காரில் இரவு 10 மணிக்கு திருவல்லிக்கேணியில் இருந்து புறப்பட்டேன். மவுன்ட் ரோடு, தேனாம்பேட்டை வழியாக நந்தனத்தை அடையவே 1.30 மணி ஆகிவிட்டது. எனக்காக என் அண்ணன் குடும்பத்தினர் விமான நிலையத்தில் காத்திருந் தனர்.

எல்லாச் சாலைகளும் வெள்ளக்காடாக இருந்ததால், தி.நகர் வழியாக கோயம்பேடு போகுமாறு ஒரு போலீஸ்காரர் சொன்னார். தட்டுத் தடுமாறி கோயம்பேடு சென்று அங்கிருந்து மதுரவாயல் வழியாக தாம்பரம் சென்றேன். அங்கிருந்து விமான நிலையத்தை அடைய 2.30 மணி ஆகிவிட்டது. அண்ணன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி வருவதற்கு காலை 5 மணி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் காரில் பயணம் செய்தேன். அந்த இரவில் சென்னை நகரையே வலம் வந்துவிட்டேன்” என்றார்.

சென்னையின் மழைநாள் அனுபவங்கள் ஒவ்வொன்றும் சோக நினைவுகள்தான்!

- ஆ.பழனியப்பன், நா.சிபிச்சக்கரவர்த்தி, மா.அ.மோகன் பிரபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick