அரிசியையும் அடுப்பையுமா சாப்பிட முடியும்?

மத்தியக் குழுவிடம் கதறிய கடலூர் மக்கள்!

டலூரில் மழை, வெள்ளம் புரட்டிப் போட்ட பகுதிகளைப் பார்வையிட கடந்த 27-ம் தேதி, மத்தியக் குழு வந்தது. பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமாரும், வெள்ள நிவாரணச் சிறப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடியும் வெள்ளச் சேதங்கள் குறித்து மத்தியக் குழுவிடம் ‘பவர் பாயின்ட்’ சிலைடுகளைப் போட்டுக்காட்டி பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

அங்கு, வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் வடகுத்து ஜெகன், ‘‘கடலூர் மறுசீரமைப்புப் பணிக்காக ரூபாய் 3,000 கோடியை நிவாரணத் தொகையாக மத்திய அரசு வழங்கவேண்டும். அரசியல் சார்பற்று நிவாரணம் வழங்க வேண்டும். மா, பலா, கரும்பு, வாழை போன்ற பண பயிர்களின் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்புச் செயல் திட்டத்தை மாநில அரசு உருவாக்கவேண்டும்” என்று  மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டபின், கடுமையான பாதிப்புக்குள்ளான விசூர் கிராமத்துக்குச் சென்றது மத்தியக் குழு. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, சேதம் அடைந்த விளைநிலங்களையும் பார்வை யிட்டனர். மகளையும், மனைவியையும் பறிகொடுத்துவிட்டு, நிர்கதியாக இருக்கும் உத்திரவேலு மத்தியக் குழுவினரிடம் தன் குடும்பத்தினரை எப்படி வெள்ளத்தில் பறிகொடுத்தேன் என்பதைக் கண்ணீர் மல்க எடுத்துக் கூறினார். அதேபோல விசூர் கிராமத்தினர் மத்தியக் குழுவினர் முன்பு, “எங்களுக்கு ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற கஷ்டங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. பாதுகாப்பான நிரந்தர வீடுகள்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாகும். விளைநிலங்களில் எல்லாம் பெருமளவில் மணல் மூடிவிட்டது. பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, கரும்பு போன்ற பயிர்கள் எல்லாம் அடியோடு புதைந்துவிட்டன. இதை எல்லாம் கணக்கிட்டு எங்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்” என்று முறையிட்டனர். இதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டது மத்தியக் குழு.

அடுத்ததாக பெரியகாட்டுப்பாளையம் கிராமத்துக்குச் சென்ற மத்தியக் குழு, கிராமத்தை எந்த அளவுக்குத் தண்ணீர் சூழ்ந்திருந்தது, எந்தத் திசையிலிருந்து வெள்ளம் வந்தது, கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் எவ்வளவு என்று முழுமையாக ஆய்வுசெய்தது. பிறகு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை மத்தியக் குழுவினர் சந்தித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள், “எங்களுக்கு இரண்டு நாட்களாக சாப்பாடே கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அரிசியும் அடுப்பும் கொடுத்து சமைச்சு சாப்பிடுங்க என்கிறார்கள். நாங்கள் எந்த இடத்தில், அடுப்பைவைத்து சமைப்பது? அரிசியையும் அடுப்பையுமா சாப்பிட முடியும்? கட்டிய துணியோடுதான் இங்கு கிடக்கிறோம். இந்த முகாமில் 400 பேருக்கு மேல் தங்கியிருக்கிறோம். சின்னச் சின்னதாகத் தடுக்கப்பட்ட இந்த அறைகளில் இரண்டு, மூன்று குடும்பங்களாகக் கிடக்கிறோம். வெயில் அடிச்சா மேல போட்டிருக்கும் தகரக் கூரை உள்ளே அனலைக் கக்குது. பச்சிளங்குழந்தைகளை வெச்சிக்கிட்டு படுக்கவே பாடாய்ப் படுகிறோம். காஞ்சாலும் அவஸ்தைதான், பெய்ஞ்சாலும் அவஸ்தைதான் எங்களுக்கு” என்று மத்தியக் குழுவிடம் கொட்டித் தீர்த்தனர், முகாமில் தங்கியிருந்த கிராம மக்கள்.

பின்னர் நெய்வேலி கெஸ்ட் ஹவுஸில் மதிய உணவை முடித்துவிட்டு கல்குணம் கிராமத்துக்குச் சென்றது மத்தியக் குழு. அப்போது வழிநெடுகிலும், அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

‘‘கல்குணம், பூதம்பாடி கிராமங்களின் அழிவுக்குக் காரணமே என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற்றிய தண்ணீர்தான். என்.எல்.சி-யின் வடிகால்களின் கொள்ளளவு எவ்வளவு, செங்கால் ஓடை, பரவனாறு போன்றவற்றின் வழியாகக் கடந்த ஆண்டு எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப் பட்டுள்ளது. இப்போது எவ்வளவு வெளியேற்றப்பட்டது” என்பதை மத்தியக் குழுவினரிடம் விளக்கினார் ககன்தீப் சிங் பேடி. அப்போது, “இது தாழ்வான பகுதி என்பதால், ஒவ்வொரு வருடமும் மழையின்போது என்.எல்.சி நிர்வாகம் வெளியேற்றும் தண்ணீரால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறோம். இதைத் தடுக்கும் வகையில் எங்களுக்குத் தரமான நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுவரை வெள்ளச்சேதங்களை முறையாகக் கணக்கிட வில்லை. எல்லாமே கண்துடைப்புதான். முறையாகக் கணக்கிட்டு நிவாரணம் வழங்கவேண்டும். அத்தோடு, கடற்கரையோரப் பகுதிகளில் பூமிக்கு அடியில் ஒயர்களை அமைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும். கடல் நீர் உட்புகாமல் இருக்க கடற்கரை ஓரங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர் விவசாயிகள்.

‘‘வெள்ளத்தால் இறந்துபோன கால்நடைகளைப் பிரேதப் பரிசோதனை செய்திருந்தால்தான் இழப்பீடு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வாரம் வெள்ள நீர் வடியாமல் தேங்கிக் கிடந்த சூழ்நிலையில் இது எப்படி சாத்தியமாகும். ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரைக்கும் 147 கால்நடைகள் மட்டும் இறந்ததாக அரசுக் குறிப்பில் பதிவாகியுள்ளது. உண்மையான தகவல்களை ஒவ்வோர் ஊராட்சியிலும் கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் சேகரிக்க வேண்டும். புதைக்கப்பட்டிருக்கும் கால்நடைகளை மறு பிரேதப் பரிசோதனை  செய்ய வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். அத்தோடு இப்போது வழங்கப்படும் நிவாரண அளவீட்டையும் மாற்றியமைக்க வேண்டும்” என்று மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்தார் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷணன்.

இறுதியாக கடலூர் கெடிலம் ஆற்றுப் பாலத்தைப் பார்வையிட்டுவிட்டு, திருவள்ளூர் மாவட்டம் சென்றது மத்தியக் குழு. அப்போது, “முழுமையாக ஆய்வுசெய்த பின்னரே வெள்ளச் சேத மதிப்பைக் கணக்கிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக அரசு சிறப்பான மறுவாழ்வு பணிகளை மேற்கொள்கிறது. தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும்” என்றார் குழுவின் தலைவர் பிரசாத்.

- க.பூபாலன்
படங்கள்: எஸ்.தேவராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick