“பக்கத்துல இருக்குற வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுத்தித்தான் போக முடிஞ்சது!”

காஞ்சி மாவட்ட மக்களின் சோகம் சொல்லி மாளாது!

கடந்த 1-ம் தேதி பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் முழுக்கவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செங்கல்பட்டில் வேதாச்சலம் நகர், அண்ணா நகர், ஜே.சி.கே. நகர், மகாலட்சுமி நகர் என பெரும்பாலான ஏரியாக்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

மகாலட்சுமி நகர், ஜே.சி.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களை மீட்புக்குழுவினர் படகுகள் மூலம் மீட்டனர். மக்கள் சாலைகளைக் கடக்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டைவிட்டு மக்கள் வெளிவரமுடியாத அளவுக்கு நகரமே முடங்கியது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என வெளியூருக்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் இரவு முழுக்க வெளியே எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே ஒதுங்கிக்கொண்டனர். 

நந்திவரம் பெரிய ஏரியும், ஊரப்பாக்கம் ஏரியும் உடைக்கப்பட்டதால் ஜி.எஸ்.டி. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரும் சாலை துண்டிக்கப்பட்டதால், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை. பிற வாகனங்களும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டன. தாம்பரத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆமைபோல ஊர்ந்து வந்தன. தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வண்டலூர் வரை வாகனங்கள் வருவதற்கே 4 மணிநேரம் ஆனது. வண்டலூரில், கல்லூரி மாணவர்கள்
ஜி.எஸ்.டி சாலையில் செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிக்கொண்டி ருந்தனர். செங்கல்பட்டு பேருந்து நிறுத்தமும், ரயில்வே நிலையமும் இடமே தெரியாத அளவுக்கு இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது. இருப்புப் பாதை முழுக்கவே வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. மின்சாரம் இல்லாமல் இருண்டு கிடந்தது.

சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வசந்தா,  ‘‘நான் கும்பகோணத்துல காலையில 10 மணிக்கு பஸ்ல புறப்பட்டேன். மழை அதிகம்ங்கறதால பஸ் மெதுவாத்தான் வந்தது. செங்கல்பட்டு பைபாஸ் வந்ததும் பஸ் இதுக்கு மேல போகாது… எல்லோரும் இறங்குங்கன்னு சொல்லி இறக்கிவிட்டுட்டாங்க. கொட்டும் மழையில வயசான அம்மாவை அழைச்சுகிட்டு எந்தப் பக்கம் போகணும்னு தெரியாம தவிச்சேன். ரயில்ல போகலாம்னு ஒரு ஆட்டோவைப் புடிச்சு ரயில்வே ஸ்டேஷன் வந்தோம். ட்ராக் முழுக்க தண்ணீர் ஓடியதால் ரயில் எதுவும் போகாதுன்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்டுக்காரருக்கு போன் போட்டு நிலைமையைச் சொன்னேன். கார் எடுத்துக்கிட்டு வந்த அவர், ஜி.எஸ்.டி. சாலையில போக்குவரத்தைத் துண்டிச்சிட்டாங்க சொன்னதால வந்தவரும் திரும்பிப் போயிட்டார். வழியெல்லாம் ஆறுபோல தண்ணியா ஓடுது. தெரிஞ்சவங்க வீட்டுக்குக்கூட போக முடியல. ரயில்வே கேன்டீன்லகூட எதுவும் சாப்பிட கிடைக்கல’’ என்றார் கவலையுடன்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, செங்கல்பட்டு - தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை, தாம்பரம் - படப்பை போன்ற வழித்தடங்கள் வழியாக யாரும் பயணிக்க வேண்டாம் என்று காஞ்சிபுரம் காவல் துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்கவே எந்த நேரத்திலும் ஏரிகள் உடையலாம் என்று வதந்திகள் வந்தவண்ணம் இருந்ததால், மாவட்டம் முழுக்கவே பதற்றமான சூழல் நிலவியது. விடியும் வரை திக்... திக் என நகர்ந்தது இரவுப்பொழுது.

2-ம் தேதியும் மழை நீடித்தது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு பைபாஸ் நெடுகிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திண்டிவனம் நோக்கிச் செல்லும் வழியில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஒரே பாதையில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் இயக்கப்பட்டன. உள்ளூர்வாசிகள் சாலையில் உள்ள தடுப்புகளைத் தங்களால் முடிந்தவரை உடைத்துத் தள்ளினார்கள். மதியத்துக்குப் பிறகே ஜே.சி.பி இயந்திரங்கள் வந்து தடுப்புகளை உடைத்தன. மதுராந்தகம் ஏரியில் 40,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால் கே.கே.புதூர், இருசாம நல்லூர் உள்ளிட்ட ஊர்களில் தண்ணீர் புகுந்தது. 40,000 கனஅடி நீர் இதுவரை திறந்துவிடப் பட்டதில்லை. பெரும்பாலான கிராமங்களில தண்ணீர் புகுந்துள்ளதால், அவர்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் முழுவதும் நீர் நிரம்பியதால் அங்கிருந்து மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் பாதுகாப்பாக வெளியேற உத்தரவிட்டது. மாணவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக செங்கல்பட்டு பைபாஸ் பகுதியில் காத்திருந்தனர்.

நம்மிடம் பேசிய கரீம் என்ற மாணவர், ‘‘ சில நாட்களாகவே விடுமுறையில்தான் இருந்தோம்.. எக்ஸாம், கல்சுரல்ஸ் போன்ற காரணத்தால கொஞ்சம் பேர் மட்டும் ஹாஸ்டலில் தங்கினோம். பக்கத்துல இருந்த ஏரி உடைஞ்சதால காலேஜ் முழுக்க தண்ணீர் வந்திடுச்சு. தரைத்தளம் முழுக்க தண்ணி உள்ளே புகுந்துவிட்டது. இதனால ஒரு வாரத்துக்கு சமைக்க முடியாது. நீங்கள் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்லுங்கன்னு சொல்லிட்டாங்க. ரயில், பஸ் என எந்தப் போக்குவரத்தும் இல்லை. ஆனாலும் எப்படியாவது இங்கிருந்து வெளியேறிவிட்டால் போதும். இங்க இருக்கறவங்களுக்கு பெரும்பாலும் போன்ல சார்ஜ் இல்லாம இருக்கு. வீட்டுக்குப் போனாத்தான் நிம்மதி வரும்’’ என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த லதா, ‘‘நான் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்றேன். நேற்று காலையில வேலைக்குப் போனேன். அதிகமா மழை பேஞ்சதால, வௌ்ளம் போகுதுன்னு சொல்லி கம்பெனியிலேயே எங்களைத் தங்க வெச்சுட்டாங்க. பின்னர் வேன்ல ஒருவழியா, செங்கல்பட்டு பைபாஸ்லயே கொண்டுவந்து இறக்கிவிட்டாங்க. பக்கத்துல  இருக்குற வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுத்தித்தான் போக முடிஞ்சது’’ என்றார்.

வேன் மூலம் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் செல்வதற்கு, நபர் ஒருவருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் செய்கின்றனர். இதனால் கையில் பணம் இல்லாதவர்கள் அரசுப் பேருந்துகள் வருமா என கால்கடுக்க காத்திருந்து பயணிக்கின்றனர். லாரிகள், சரக்கு வேன்கள் எது கிடைக்கிறதோ, அதில் நனைந்தவாறே பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். ஊரையே உலுக்கிவிட்டது மழை!

 - பா.ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick