“மந்திரிக்கு வியாதி வரும்... எங்களுக்கு வராதா?”

நூற்றாண்டு காணாத மழை வெள்ளத்தின் பேரழிவால் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள். இந்தத் துயரம் தந்த பலவிதமான அனுபவங்களில் சில துளிகள் இதோ...

வீடுகளாக மாறிய மீன்பாடி வண்டிகள்!

சென்னை வியாசர்பாடியில் உள்ள கல்யாணபுரம் தெருவில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு முதல் தளம் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டதால், சிலர் மேல் தளத்தில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மற்றவர்கள்?

“என் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால், கட்டிய துணியோடு வெளியேறினோம். தங்குவதற்கு இடமில்லை. எனவே, எங்களுடைய மீன்பாடி வண்டியையே வீடாக மாற்றிவிட்டோம். கெரசின் ஸ்டவ், சமையல் சாமான்கள் சகிதமாக எங்கள் மொத்தக் குடும்பமும் மீன்பாடி வண்டியில்தான்” என்றார் கல்யாணபுரம் தெருவைச் சேர்ந்த கோபால்.

உணவு படைத்த ஹவுஸ் ஓனர்கள்!

மாம்பலத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத்தள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. அங்கிருந்தவர்களை, அந்தக் குடியிருப்பின் மேல் மாடிகளில் குடியிருந்த ஹவுஸ் ஓனர்கள் தங்கள் வீடுகளில் தங்கவைத்து அரவணைத்ததுடன், அவர்களுக்கு உணவும் சமைத்துப் பரிமாறினர்.

வறண்டுபோன ‘டாங்க்’குகள்!

வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் சேகரிக்கப்​பட்டிருந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகிப்போனது. இடுப்பளவு, மார்பளவு தண்ணீரில் நடந்துசென்று தண்ணீர் கேன்களை பலர் வாங்கிவந்தனர். அப்படிச்  செல்ல முடியாதவர்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் பரிதவித்தனர். கூடுதலாக தண்ணீர் வாங்கி வைத்திருந்த அண்டை வீட்டாரிடம் இருந்து பலர், குடிதண்ணீர் வாங்கினர். செவ்வாய்க்கிழமை மதியம் முதல் தண்ணீர் கேன் சப்ளை நின்றுபோனது. மழைநீரைப் பிடித்து அதைக் கொதிக்கவைத்து சிலர் குடித்தனர்.

நமத்துப்போன புத்தகங்கள்!

தியாகராயர் நகர் சிங்காரவேலர் தெருவில் ‘தமிழ் மண்’ பதிப்பகம் உள்ளது. அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், இந்தக் கடைக்குள் தண்ணீர் புகுந்தது. “வரும் ஜனவரியில் நடக்கவிருக்கும் சென்னை புத்தகக்காட்சிக்காகப் பல அரிய புத்தகங்களை அச்சிட்டு வைத்திருந்தோம். இவற்றின் மதிப்பு 1.75 கோடி ரூபாய். இதற்காக வங்கிகளில் 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். அத்தனைப் புத்தகங்களும் நாசமாகிவிட்டன. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார் இளவழகன். தியாகராயர் நகரில் இருந்த பல்வேறு பதிப்பகங்களின் குடோன்கள் மூழ்கிவிட்டன.

பெங்களூரில் கட்டுப்பாட்டு அறை!

சென்னையில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால், தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் சார்பில் பெங்களூரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. கர்நாடக அரசின் உதவியுடன் செயல்பட்ட இந்த மையத்தில் தமிழ் தெரிந்த இளைஞர்கள் பலர் தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். வெளிநாடுகளில் இருந்து பலர், சென்னையில் இருக்கும் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டனர். சென்னையில் உள்ள தன்னார்வலர்களைத் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மையமாவும் இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டது.

டைட்டானிக் படத்தைப்போல...

“என் கணவர் மதுரையில் இருக்கிறார். நானும், என் குழந்தைகளும் சென்னையில் இருக்கிறோம். புதன்கிழமை மதியம், டைட்டானிக் படத்தில் வருவதுபோல வெள்ளநீர் எங்கள் தெருவுக்குள் பாய்ந்து வந்தது. ஒரு சில நிமிடங்களில் ஆள் உயரத்துக்கு உயர்ந்துவிட்டது. தெருவில் நிறுத்தியிருந்த என் ஸ்கூட்டி மூழ்கிவிட்டது. வீட்டுக்குள் இருந்த ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் பாழாகிவிட்டன.  மாடியில் ஒருவருடைய வீட்டில் நானும் என் குழந்தைகளும் 3 நாட்கள் தங்கியிருந்தோம். செல்போன் தொடர்பு கிடைக்காததால், என் கணவரோடும், பெற்றோரோடும் தொடர்புகொள்ள முடியவில்லை. 3 நாட்கள் கழித்து என் பெற்றோரிடம் பேசினேன். என் குரலைக் கேட்டதும் கதறிவிட்டனர்” என்றார் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மீனா.

மாற்றுத்துணி இல்லாமல்... 

“தேவநாதன் காலனியில் என் வீடு இருக்கிறது. மதியம் 2 மணிக்கு மேல் திடீரென வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்தது. உடனே நாங்கள் மாடிக்குப் போய்விட்டோம். என் கணவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். அவர் வருவதற்குள் கழுத்தளவு தண்ணீர் வந்துவிட்டது. ஹவுஸ் ஓனர் வீட்டில் தங்கியிருந்தோம். அவர்கள் வீட்டில் அரிசி, மளிகைப் பொருட்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. 2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்தோம். வெள்ளநீர் வடிவதற்கு முன்பே தண்ணீரில் தத்தளித்தபடி, மாற்றுத்துணிகூட இல்லாமல் ஊருக்குக் கிளம்பிவிட்டோம்” என்று வேதனையுடன் சொன்னார் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சூர்யா சரவணன்.

தொற்றுநோய் அபாயம்!

மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் தெருவில் குடியிருக்கும் சுந்தரிடம் பேசினோம். “வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் ஆறு நாட்களாக அப்படியேதான் இருக்கிறது. அதற்குள்தான் பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் இருக்கிறார்கள். மேலும் தண்ணீர் புகுந்துவிடாமல் தடுப்பதற்கு தங்களின் துணி மற்றும் மளிகைக் கடைகளில் இருப்பு வைத்திருந்த அரிசி மற்றும் பருப்பு எல்லாம் தண்ணீரில் மூழ்கியதால், குப்பையில் கொட்டிச் சென்றிருக்கிறார்கள். அதில் இருந்து துற்நாற்றம் பரவி வருகிறது. இன்னும் சில நாட்களில் தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. அதை அகற்றாமல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் ஒன்றில் இருந்த பொருட்கள் மழையில் நனைந்த செய்தி கேட்டதும் அதிகாரிகள் ஓடி வந்து நடவடிக்கை எடுத்தார்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது’’ என்று வருத்தப்பட்டார்.

நாப்கின் கிடைக்காமல் அவதி!

ஆங்காங்கே சாலை ஓரங்களில்தான் மக்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் உணவு வழங்கிக் கொண்டிருக்கின்றன. சைதாபேட்டை அரசுப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கி இருக்கிறார்கள். பள்ளியில் கழிப்பறைகள் இருந்தாலும் மின்சாரம் இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கடியால் அவதிப்படுகிறார்கள். சானிட்டரி நாப்கின் கிடைக்காமல் கடுமையாக அவதிப்படுவதாகப் பெண்கள் சொன்னார்கள்.

மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் மாசிலாமணி என்பவரிடம் பேசினோம். “தண்ணீர் வடிந்த பிறகும் கழிவுகள் அகற்றப்பட்டவில்லை. நாய், பூனை, மாடு எல்லாம் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் செத்து மிதக்கின்றன. இரு முறை மட்டுமே ஹெலிகாப்டரில் வந்து பொருட்கள் தந்தார்கள். மற்றபடி இங்குள்ள கோயில்களில்தான் உணவு தயாரித்து வழங்குகிறார்கள். மின்சாரம் ஒரு வாரமாக இல்லை. இந்தப் பகுதியில் குடியிருந்த பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் போய்விட்டார்கள்” என்றார்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் அடிக்கடி ஏரிகள் உடைபடுகின்றன. அந்தப் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், “பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்துவிட்டோம்.   கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே இந்தப் பகுதியில் வெள்ளப் பிரச்னை இருக்காது. இங்க வர்ற மந்திரிகள் ஊருக்குள் வர்றதில்லை. உள்ள வந்து பார்த்தால்தானே எங்க நிலைமை தெரியும். ஓட்டு கேட்டு வரும்போது சந்துசந்தா வந்தாங்களே. இப்ப வந்து ஆறுதல் சொன்னா என்ன? மந்திரிக்கு மட்டும் வியாதி வருமா, எங்களுக்கு வராதா?” என்று ஆவேசப்பட்டார்.

பாராட்டுக்குரிய தொழிலாளர்கள்!

பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், மழை வெள்ளத்தைப் பொருட் படுத்தாமல் தன்னார்வத்துடன் கடமையாற்றினர். குறிப்பாக மின் ஊழியர்கள், அறுந்துகிடந்த மின்கம்பிகளைச் சரிசெய்து மின் சப்ளை அளித்தனர். தாங்க முடியாத துர்நாற்றத்தைச்  சகித்துக்கொண்டு சென்னையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் சேவை மகத்தானது.

தனியார் உதவி கிடைக்குது... அரசு உதவி கிடைக்கலை!

மகாலட்சுமி நகரைச் சேர்ந்த டில்லிபாபு, “10 நாட்களுக்கு முன்பு நந்திவரம் ஏரி உடைஞ்சது. இப்ப ஊரப்பாக்கம் ஏரி உடைஞ்சு போச்சு. சுமார் ஆயிரம் வீடுகள் முதல்தளம் வரை மூழ்கிடுச்சு. ரியல் எஸ்டேட்காரங்களும், ஆக்கிரமிப்புச் செய்தவங்களும் தொடர்ந்து ஒவ்வொரு ஏரியா உடைக்க ஆரம்பிச்சுடுறாங்க. வெடிகுண்டு வச்சு உடைப்பதால ஒட்டுமொத்தமா வேகமா வெள்ளம் வருகிறது. எந்த நேரத்துல  எந்த ஏரி உடையுமோன்னு ஒவ்வொருநாளும் பயந்துகிட்டே வாழ வேண்டியிருக்கு. 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் எல்லா ஏரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும். இந்தப் பகுதியில உள்ளவங்களுக்கு தனியார் நிறுவனத்தில் இருந்துதான் சாப்பாடெல்லாம் கொடுக்கறாங்க. அரசாங்க நிவாரணப் பொருட்கள் சரியா கிடைக்கல” என்றார்.

அமைச்சர் விளக்கம்!

“தன்னார்வமாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முகாம்களில் உதவி செய்​கிறார்கள். அவர்களை நாங்கள் தடுப்பது கிடையாது. இதனால் 1,000 பேர் உள்ள இடத்தில் 100 பேருக்கு மட்டுமே பொருட்கள் கிடைக்கின்றன. தங்களுக்குக் கிடைக்கவில்லை என பெரும்பாலான மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள். எல்லோருக்கும் நிவாரணப் பொருட்கள் தயாராக இருக்கின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் நிவாரணப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறார்கள். அவர்களுக்கும் கொடுக்க ஏற்பாடுசெய்து வருகிறோம்’’ என்கிறார் அமைச்சர் சின்னையா.

அமைச்சர்களும், அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், மழையின் தாண்டவத்தைவிட மக்களின் ருத்ர தாண்டவத்தை அரசு சந்திக்க நேரிடும் என்பதே உண்மை.

- கே.பாலசுப்பிரமணி, பா.ஜெயவேல், ஆ.நந்தகுமார், எஸ்.மகேஷ், அ.சையது அபுதாஹிர், மா.அ.மோகன் பிரபாகரன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ், கா.முரளி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick