மழை வெள்ளப் பாதிப்பு... களம் இறங்கிய தலைவர்கள்!

ழை வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் களத்தில் இறங்கினார்கள்.

சிந்தாதரிப்பேட்டை, சைதாப் பேட்டை, மறைமலை அடிகள் பாலம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களுக்குக் கடந்த செவ்வாய்க் கிழமை அன்று கருணாநிதி சென்றார். ஒவ்வோர் இடத்திலும் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அவருடைய வாகனம் நின்றது. மக்களிடம் குறைகள் கேட்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், யாரிடமும் எதையும் அவர் கேட்கவில்லை. அரிசி, போர்வை, பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு அவர் கிளம்பி விட்டார்.  

‘‘நீங்கள் வந்ததே போதும்!’’

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சோழிங்க நல்லூரில், நிவாரணப் பொருட்களை வழங்கிக்கொண்டி ருந்தார். அங்கு வந்த மூதாட்டி ஒருவர், ‘தமக்கு நிவாரண உதவி எதுவும் வேண்டாம்’ என்று சொன்னார். ‘ஏன் வேண்டாம் என்கிறீர்கள்’ என்று அவரிடம் ஸ்டாலின் கேட்டார். ‘பாதிக்கப்பட்ட எங்களை யாராவது வந்து பார்க்க மாட்டாங்களா என்று காத்துக் கிடந்தோம். நீங்க வந்ததே ஆறுதலா இருக்கு. அதுபோதும்’ என்றார்.

படகுப் பயணம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரும்புலிச்சேரி உள்ளிட்ட 7 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. யாரும் அங்கு செல்லவில்லை. அந்தத் தகவல் கிடைத்த உடன் வைகோ, தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், பி.சம்பத் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் படகு மூலமாக நிவாரணப் பொருட்களை அங்கு கொண்டு சென்று விநியோகித்தனர்.

பால் வார்த்த வாசன்

மயிலாப்பூரில் சில பகுதிகளில் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மழை நீரில் நடந்துசென்று மக்களைச் சந்தித்து பால் பாக்கெட்களை வழங்கினார். பாலவாக்கத்தில் அவர் உணவு வழங்கினார். அடையாற்றில் தெருவைச் சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.

உணவு வழங்கிய திடல்

திராவிடர் கழகத்தின் பெரியார் திடலில் 60-க்கும் மேற்பட்ட சமையல்காரர்களை வைத்து சமைத்து, பார்சல் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் அவர்கள் விநியோகம் செய்தனர். தி.க-வும் ரோட்டரி சங்கமும் இணைந்து புரசைவாக்கம், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் சமையல்செய்து உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

காப்பீடு பெற முயற்சி

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1,200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. அங்கு தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் சொன்னார். பாதிக்கப்பட்டவர்கள் காப்பீடு பெற சீத்தாராம் யெச்சூரி மூலம் மத்திய அரசிடம் முறையிட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். மேலும், தங்கள் கட்சி அலுவலகத்தில் உணவு சமைத்து, தி.நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தார் ஜி.ராமகிருஷ்ணன்.

கோட் போட்ட அன்புமணி!

பா.ம.க சார்பில் கடந்த புதன்கிழமை சென்னையில் தி.நகர், வேளச்சேரி உட்பட பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வெள்ளை கோட் அணிந்து மக்களுக்குச் சிகிச்சை அளித்தார். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட  போட்டி மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, “இதுவரை 2 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம்” என்றார். இவரது குழுவினர் 50 குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்.

- கே.பாலசுப்பிரமணி, எஸ்.மகேஷ், அ.சையது அபுதாஹிர்,
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எம்.விஜயகுமார், ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick