எம்.எல்.ஏ-க்கள் ஓடிவந்தார்களா... ஒளிந்துகொண்டார்களா?

வெள்ளம்... நிவாரணம்!

ழையும் அதன்பிறகு சூழ்ந்த வெள்ளமும் சென்னையைப் புரட்டிப் போட்டது. படகுகளோடு உயிரைக் காக்க ஓடிவந்தவர்​களும், உணவைச் சமைத்து விநியோகித்த​வர்களும், நிவாரணப் பொருட்களைத் தேடிச் சென்று கொடுத்தவர்களும் நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் அல்ல. தன்னார்வலர்கள். பிரசவம் என்பது மறுபிறப்பு. அந்த மறுபிறப்புக்கு உதவியதால் தன் மகளுக்கு ‘யூனுஸ்’ எனப் பெயர் வைத்தார் சித்ரா. வெள்ளத்தில் பிரிட்டன் மிதந்தபோது, ‘மீட்புப் பணிக்கு வாருங்கள்’ என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்தார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். அதோடு நின்றுவிட்டாரா, இல்லை. சாலைகளில் இறங்கி மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். பிரிட்டனுக்கு ஏன் போக வேண்டும், பக்கத்தில் இருக்கிற ஆந்திராவுக்குப் போவோமே. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கி, மீட்புப் பணிகளைச் செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அதிகாரிகளை விரட்டினார். சாக்கடைகளை தூர்வாரும் ஜே.சி.பி இயந்திரத்தை அவரே இயக்கினார். நம் மாநிலத்து மக்கள் பிரதிநிதிகள் ஓடிவந்தார்களா...ஒளிந்து கொண்டார்களா? இதோ சின்னப் பரிசோதனை!

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது ஊருக்கே வெளிச்சம்.

‘ஹெலிகாப்டரில் செல்லும் முதல்வரே... எங்கள் பகுதியில் இறங்குங்கள்’ என்று மக்கள் கூப்பாடு போட்ட போது,  சட்டமன்ற உறுப்பினர்களை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்ப்பதே அரிதானது. எம்.எல்.ஏ-க்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பே அறுந்துபோய்விட்டது. முறிந்துகிடந்த தொடர்பை ஒட்டவைக்க நாம் முயற்சி செய்தோம். ஆறுதல் சொல்ல... உதவிகள் செய்ய வந்தார்களா என்பதைச் சோதனை செய்தோம். வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் ‘மக்கள் பிரதிநிதி’களைத் தொடர்புகொண்டிருக்க முடியாமல் போயிருக்கலாம். வெள்ளம் வடிந்த நிலையில் வாக்களித்த மக்களின் குரலுக்குச் செவி சாய்த்தார்களா என அந்தந்தத் தொகுதி மக்களை வைத்தே எம்.எல்.ஏ-க்களைத் தொடர்புகொள்ள வைத்தோம். அதற்கு எம்.எல்.ஏ-க்கள் என்ன ரியாக்‌ஷன் காட்டினார்கள்? செல்போனை எடுத்தார்களா, ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்களா? மனிதம் தளைத்த நேரத்தில் ‘மக்கள் பிரதிநிதி’களின் நடத்தை என்ன?

கே.பி.கந்தன் (அ.தி.மு.க.) - சோழிங்கநல்லூர்: தொகுதிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரைப் பேச வைத்தோம். ‘‘சார்... சுண்ணாம்பு கொளத்தூர்ல இன்னும் தண்ணி வடியல. அதிகாரிகள் யாரும் வரல. ஏதாவது உதவி பண்ணுங்க’’ என்று கூற... அதற்கு கந்தனின் பதில், ‘‘அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? ரெண்டு மூணு நாள்ல அதுவே வடிஞ்சிடும். தண்ணிய மோண்டு ஊத்தறதுக்கு ஆளுங்க யாரும் என்கிட்ட இல்ல. நிவாரணம் தர்றதுக்கு கணக்கு எடுக்க வருவாங்க. அப்பச் சொல்லுங்க’’ என்றார்.

எம்.கே.அசோக் (அ.தி.மு.க.) - வேளச்சேரி: ‘வெள்ளச்சேரி’யாக மாறிய வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக்கை தொடர்புகொண்டு, ‘‘எங்க ஏரியாவுல தண்ணி இன்னும் வடியல’’ என்றபோது, ‘‘நேற்று முதல் எல்லா தெருக்களிலும் மோட்டார் வைத்து தண்ணீரை இறைக்கச் சொல்லிவிட்டேன். சில இடங்களில் சாக்கடை அடைப்பு இருக்கலாம். விரைவில் தீர்க்கச் சொல்கிறேன்’’ என்றார்.

தன்சிங் (அ.தி.மு.க.) - பல்லாவரம்: புகார் அளித்த ஒருவரிடம் தன்சிங் அளித்த பதில், ‘‘நானும் அந்த வழியாத்தான் தினமும் போறேன். உங்களால பொறுத்துக்க முடியாதா? மாசக்கணக்கா மழை பெய்யுதே... எப்படி ரோடு போடுறது’’ என்றவரிடம், ‘‘மழைக்கு முன்பிருந்தே சாலை சரியில்லை’’ எனச் சொன்னபோது ‘‘நீங்க எங்கே வேலை பாக்குறீங்க? உங்களுக்கு யார் நம்பர் கொடுத்துப் பேசச் சொன்னது’’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுவிட்டு, ‘‘அந்த ரோடு சரியில்லைனா, 200 அடி சாலையைப் பயன்படுத்திக்கோ’’ என்றார்.

அனகை முருகேசன் (தே.மு.தி.க.) - செங்கல்பட்டு: ராம்குமார் என்பவரை பேச வைத்தோம். ‘‘கூடுவாஞ்சேரில இருக்கும் மகாலட்சுமி நகர்ல இருந்து பேசுறோம் சார். வீட்டுக்குள்ள தண்ணீர் புகுந்திருச்சு. எங்களைப் பார்க்க நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனா, நீங்க வரவே இல்லையே சார்’’ என்றார். அதற்கு முருகேசன், ‘‘நான் நாள் முழுவதும் அங்கேதான் இருந்தேன். நேத்தைக்குக்கூட கரன்ட் இல்லைன்னு சொன்னாங்க. ரெடி பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன். இன்னைக்குக்கூட அங்கே வந்தேன். நான் வராம இருப்பேனா சார்... அதிக பாதிப்பே உங்கள் பகுதியில்தானே?’’ என்றவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து மக்களிடம் பிரச்னைகள் குறித்துப் பேசினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ராஜு (அ.தி.மு.க.) - செய்யூர்: பாலாற்றின் குறுக்கே இருந்த இரும்புலிச்சேரி பாலம் உடைந்ததால், செய்யூர் தொகுதிக்குட்பட்ட இரும்புலிச்சேரி மற்றும் எடையாத்தூர் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கே மருத்துவ உதவியும், உணவும் வேண்டி தவித்தவர்கள் சார்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த தணிகைவேல் என்பவர் எம்.எல்.ஏ-வை தொடர்புகொண்டபோது,  ராஜு கடைசிவரையில் போனை எடுக்கவில்லை. ‘மழை பெய்த நாளில் இருந்து இதுவரை எம்.எல்.ஏ வந்து பார்க்கவில்லை’ என்கிறார் தணிகைவேல்.

பெருமாள் (அ.தி.மு.க.) - ஸ்ரீபெரும்புதூர்: கரசங்கால் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், ‘‘எங்க பகுதியில பல வீடுகள் சேதமாகிடுச்சு. அதிகாரிங்க யாரும் வரல. நிவாரணப் பொருட்களும் கொஞ்சம் பேருக்குத்தான் கிடைக்குது’’ எனச் சொல்வதற்காக எம்.எல்.ஏ பெருமாளுக்கு பலமுறை போன்  போட்டும் ஸ்விட்ச் ஆஃப்.

தண்டரை மனோகரன் (அ.தி.மு.க.) - திருப்போரூர்: உதவிக்கரம் வேண்டி வெங்கடேசன் என்பவர், தண்டரை மனோகரனுக்கு போன் செய்தார். ஆனால், அவர் போனை எடுக்கவே இல்லை.

மீதி எம்.எல்.ஏ-க்கள் அடுத்த இதழில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick