அத்தையா... அதிகாரிகளா?

மானபங்கப்படுத்தப்பட்ட மாணவியின் கதை!

‘‘உயர் காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற என்னை மிரட்டி சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்’’ என்று மாணவியின் அத்தை, நீதிபதியிடம் முறையிட... மீண்டும் சூடு பிடித்து உள்ளது சிவகங்கை மாணவி பாலியல் வழக்கு.

சிவகங்கையில்  திவ்யா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற மாணவியை கடந்த நான்கு ஆண்டுகளாகக் காவல் துறை உயர் அதிகாரிகள், தந்தை, அண்ணன், ஆசிரியர் உள்ளிட்ட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி தனது அத்தை  தாமரைச்செல்வியுடன் சென்று சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி ஜூ.வி.யில் தொடர்ந்து எழுதி வந்தோம்  இந்த வழக்கில் மாணவியின் தந்தை மற்றும் அவரது அண்ணனை மட்டும் காவல் துறை கைதுசெய்த நிலையில், வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என்று வின்சென்ட் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதன்பின் சிவகங்கையில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சங்கர், கண்டக்டராகப் பணிபுரிந்த நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கைதுசெய்யபட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியபின், பாதிக்கப்பட்ட மாணவியை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்கள் ஜெனோவா மற்றும் ராதிகா ஆகியோர் விசாரித்தனர். மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்த நிலையில் தாமரைச்செல்வியையும் அவரது மகன் அசோக்கையும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் கைதுசெய்தனர். தாமரைச்​செல்வியிடம், ‘எனது மகன் அசோக், அந்த மாணவி​யிடம் பாலியல் உறவு வைத்துக்​கொண்டான்.  இதுபற்றி வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டிதான் பலருக்கும் விருந்தாக்கினேன்’ என்று வாக்குமூலம் பெற்று அவரை சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் ஆஜர் செய்தனர். இந்த நிலையில் நீதிபதி ஜெயராஜிடம் தாமரைச்செல்வி, ‘‘உயர் காவல் துறை அதிகாரிகளை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றத்​தான் என்னை மிரட்டி, எனது உடைகளைக் களைந்து அடித்துத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கினார்கள்’’ என்று சொன்னதும் அதிர்ந்த நீதிபதி, தாமரைச்செல்வியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல் சிவகங்கை ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அசோக்கும் நீதிபதியிடம், ‘‘என் அம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகச் சொல்லவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் மிரட்டினார்கள். எனது பிறப்புறுப்பில் காவல் துறையினர் மிதித்து என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள்’’ என்று தெரிவித்தார். இருவரையும் வரும் 28-ம் தேதி வரை காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர், ‘‘தாமரைச்செல்விக்கும் கண்டக்டர் நமச்சிவாயத்துக்கும் தொடர்பு இருந்துள்ளது. அந்தத் தொடர்பில்தான் மாணவியை கண்டக்டருக்கு விருந்தாக்கியுள்ளார் தாமரைச்செல்வி. மாணவிக்கு அம்மா இல்லாததால், அத்தையுடன் சில காலம் கோவையில் தங்கியுள்ளார். அங்கு அத்தை மகன் அசோக், இந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிவகங்கைக்கு மாணவி வந்தபிறகும் அங்கும் வந்து தொந்தரவு செய்துள்ளார். மாணவியும் தாமரைச்செல்வியும் தனியாக வசித்தபோதுதான் தாமரைச்செல்வி, மாணவியைப் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தியுள்ளார். அதற்கு இடையூறாக இருந்ததால்தான் தாமரைச்செல்வி, மாணவியின் அப்பா மற்றும் அண்ணனை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார். இதில் உயர் அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. தாமரைச்செல்விதான் இவ்வளவு சிக்கலுக்கும் காரணம். அவருக்குப் பிடிக்காத நபர்களின் பெயர்களை இந்த வழக்கில் இழுத்துவிட்டுள்ளார். இதை அந்த மாணவியே எங்களிடம் எழுதித் தந்துள்ளார். நீதிபதியிடம் அந்தப் பெண்ணும் பையனும் எங்கள் மீது குற்றம்சாட்ட காரணம் அவர்களது வழக்கறிஞர்கள் சொல்லிக் கொடுத்ததுதான்’’ என்றனர்.

ஓர் அப்பாவி சிறுமியின் வாழ்க்கையைச்  சீரழித்த கயவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது.

- செ.சல்மான், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், மீ.நிவேதன்  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick