எம்.எல்.ஏ-க்கள் ஓடிவந்தார்களா... ஒளிந்துகொண்டார்களா?

வெள்ளம்... நிவாரணம்!

தி கனமழையும், வெள்ளமும் சென்னையைப் புரட்டிப்போட்டது. இந்தப் பேரழிவு காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது ஊருக்கே வெளிச்சம். வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், ‘மக்கள் பிரதிநிதி’களைத் தொடர்புகொள்ள முடியாமல் போயிருக்கலாம். வெள்ளம் வடிந்த நிலையில் வாக்களித்த மக்களின் குரலுக்கு செவி சாய்த்தார்களா என அந்தந்தத் தொகுதி மக்களைவைத்தே எம்.எல்.ஏ-க்களைத் தொடர்புகொள்ள வைத்தோம். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பரிசோதிக்கப்பட்டார்கள். அதில் சில முடிவுகளை கடந்த இதழில் எழுதியிருந்தோம். மீதி எம்.எல்.ஏ-க்களின் ரியாக்‌ஷன் பற்றி இந்த இதழில்...

கனிதா சம்பத் (அ.தி.மு.க.) - மதுராந்தகம்: ‘‘எம்.எல்.ஏ கனிதா சம்பத்துக்கு பலமுறை போன் செய்தேன். அவங்க கட்பண்ணி விட்டுக்கிட்டே இருந்தாங்க. இதனால எந்த உதவியும் முறையாக எங்களுக்கு வந்து சேரலை’’ என்கிறார் தண்டலம் சேனியர்மேடு பகுதியைச் சேர்ந்த தனசேகர்.

சோமசுந்தரம் (அ.தி.மு.க.) - காஞ்சிபுரம்:  ‘‘28-வது வார்டில் இருந்து பேசுறோம். எங்க பகுதியில எந்த அதிகாரிங்களும் வர்றது கிடையாது. நிவாரணம் தரமாட்டேங்​குறாங்க சார்’’ என சோமசுந்தரத்துக்கு தொகுதிவாசியான கணேசன் போன் செய்தார். சோமசுந்தரம், ‘‘வடக்கு மாடவீதிதானே? உங்களுக்கு 4,000 ரூபா கொடுத்திருப்பாங்க. இன்னும் 5,000 கொடுப்பாங்க. நாளைக்கு உங்க ஏரியாவுக்கு நகராட்சி அதிகாரிகளை விசிட்டுக்கு அனுப்புறேன். அதுக்கப்புறமும் உங்களுக்கு எதுவும் கிடைக்கலனா எனக்கு போன் பண்ணுங்க. நான் ஆக்‌ஷன் எடுக்கறேன்’’ என்றார்.

அமைச்சர் ரமணா (அ.தி.மு.க.) - திருவள்ளூர்: கலெக்டர் அலுவலகம் செல்லும் மெயின் ரோடு மழையால் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. அந்த வழியாக பைக்கில் சென்ற திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக், தவறி விழுந்தார். இதுபற்றி ரமணாவிடம் சொன்னபோது ‘‘நீங்கள் சொன்ன இடத்தை நேரில் வந்து பார்த்து சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார் ரமணா.

பொன்.ராஜா (அ.தி.மு.க.) - பொன்னேரி: ஆரணியைச் சேர்ந்த அன்பு, பொன். ராஜாவிடம் செல்போனில் தொடர்புகொண்டு மழையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த பொன்.ராஜா, ‘‘மங்களம் செல்கிற சாலையில் பாலம் உடைந்ததை கலெக்டரை அழைத்து வந்து காண்பித்தேன். விரைவில் அந்தப் பாலத்தைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’’ என்றார்.

அமைச்சர் அப்துல் ரகீம் (அ.தி.மு.க.) - ஆவடி: ஆவடி ரயில் நிலையத்துக்கு வந்த சங்கர், சேறும் சகதியுமாக இருந்த சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்பட்டார். அவர், அப்துல் ரகீமை போனில் தொடர்புகொண்டு, ‘‘சார்... ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல முடியவில்லை. அதோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து மார்க்கெட்டுக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. உடனே சரி செய்துகொடுங்கள்’’ என்றார். அதற்கு அப்துல் ரகீம், ‘‘அப்படியா! நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’’ என்றார்.

நல்லதம்பி (தே.மு.தி.க.) - எழும்பூர்: மோகன் என்பவர் நல்லதம்பியை தொடர்புகொண்டார். ‘‘குருசாமி நகரில் இருந்து பேசுறேன். எங்க ஏரியால இன்னும் குடிநீர் வரல. சாக்கடைத் தண்ணி தேங்கியிருக்கு. கொசுத் தொல்லை தாங்க முடியலை. நீங்க வந்து பாருங்க அண்ணா” என்றார். நல்லதம்பி, “கண்டிப்பா நான் நடவடிக்கை எடுக்குறேன். கொஞ்சம் பொறுங்க” என்று போனைத் துண்டித்தார். சில நிமிடங்களில் மீண்டும் மோகன் எண்ணுக்கு நல்லதம்பியிடம் இருந்து அழைப்பு. “மாநகராட்சி செயற்பொறியாளரிடம் சொல்லிவிட்டேன். அவர் மோட்டார் வாகனத்தை அனுப்பத் தயாராக உள்ளார். உடனே அவரைத்  தொடர்புகொள்ளுங்கள்” எனச் சொல்லி அவரின் எண்ணையும் கொடுத்தார்.

ஜே.சி.டி.பிரபாகர் (அ.தி.மு.க.) - வில்லிவாக்கம்: சிட்கோ நகரில் வசிக்கும் முகமது அலி, “சார், சிட்கோ நகரில் இருந்து பேசுறேன். வெள்ளம் வந்து ஒரு வாரம் ஆகியும் ஏரியாவுல தண்ணீர் வடியாம இருக்கு. யாரும் நடவடிக்கை எடுக்காம இருக்காங்க” என்றார். “சென்னை முழுவதுமே பாதிப்பு இருக்கு. எல்லா அதிகாரிகளும் வேலை பார்த்துகிட்டு இருக்காங்க. மோட்டார் பம்பை வைத்து வேற இடத்துல வேலை பார்த்துகிட்டு இருக்காங்க. அந்தப் பணி முடிஞ்சதும்  உங்க ஏரியாக்கு அனுப்பி வைக்கிறேன்” எனச் சொன்னார் ஜே.சி.டி.பிரபாகர்.

செந்தமிழன் (அ.தி.மு.க.) - சைதாப்பேட்டை: தொகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் குப்பைகள் அகற்றப்படாதது குறித்து கேட்டபோது, ‘‘நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன். தொகுதியில் வசிக்கும் எல்லாலோரையும் கவனிக்க இருப்பதால், ஒவ்வோரு வீடாகச் செல்ல இயவில்லை. கட்சிப் பொறுப்பாளர்களை வைத்து பிரச்னையை விரைவில் தீர்க்கச் சொல்கிறேன்’’ என்றார் செந்தமிழன்.

மணிமாறன் (அ.தி.மு.க.) - பூந்தமல்லி: மழையால் பாதிக்கப்பட்ட தேவா, மணிமாறனை செல்போனில் தொடர்பு கொண்டார். எம்.எல்.ஏ-வின் பி.ஏ என்று சிவக்குமார் பேசினார். “எம்.எல்.ஏ வெளியில் சென்றுள்ளார். விவரத்தைச் சொல்லுங்கள்” என்றார். உடனே தேவா,  ‘‘பூந்தமல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்ப முடியவில்லை’’ என்றார். அதற்கு சிவக்குமார், “தண்ணீரை வெளியேற்றினாலும் வடியவில்லை. எங்களால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறோம்” என்றார்.

குப்பன் (அ.தி.மு.க.) - திருவொற்றியூர்: மழை பாதிப்பு குறித்து அந்தப் பகுதி மக்கள் குப்பனை பல முறை தொடர்புகொண்டபோதிலும் அவர் பதில் அளிக்கவில்லை. ‘நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு’ என்ற பாட்டு மட்டும் அவரது போனில் கேட்கிறது.

சவுந்திரராஜன் (சி.பி.எம்.) - பெரம்பூர்: குடிசைப் பகுதியான ராஜீவ்காந்தி நகரில் இருந்து சவுந்திரராஜனை தொடர்புகொண்டபோது போனை எடுத்தார். “மழை நீரும், கழிவுநீரும் கலந்து ஐந்து நாட்களாக தேங்கி நிற்கிறது” எனச் சொன்னார் தொகுதிவாசி. அதற்கு அவர், “இப்போது, புளியந்தோப்பு பகுதியில் இருக்கிறேன். இங்கே குப்பைகளை அள்ளவும், சாக்கடை நீரை வெளியேற்றவும் வேலை நடக்கிறது” என்றவர், நம் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார். மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்வதாகவும், அந்தப் பகுதிக்கு ஆட்களை அனுப்பி உடனே நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார். அவர் சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் மோட்டார் பம்புகளுடன் அங்கே வந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடுமையாக வேலை செய்து மழைநீரை அந்தப் பகுதியில் இருந்து அகற்றினர். எம்.எல்.ஏ-வும் ஸ்பாட்டுக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.

ராஜலட்சுமி (அ.தி.மு.க.) - மைலாப்பூர்: பட்டினப்பாக்கம் பகுதியில் இருந்து தொகுதிவாசி ஒருவரைப் பேச வைத்தோம். சீனிவாசபுரத்தில் மழைநீர் வற்றிய பிறகும் மின் இணைப்புக் கொடுக்காமல் 4 நாட்களாக இழுத்தடிக்கின்றனர் என்ற புகாரை ராஜலெட்சுமியிடம் தெரிவித்தார். அந்தப் பகுதி மின் துணை நிலையத்தின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். அவர் சொன்னபடி பேசினோம். சிறிது நேரத்தில் மின்வாரிய அதிகாரி ஒருவர் பேசினார். ‘உடனே சரி செய்கிறேன்’ என்று சொன்ன அந்த மின்வாரிய ஊழியர், ஆறரை மணி நேரம் கழித்து வந்து சரி பார்த்தார்.

பார்த்தசாரதி (தே.மு.தி.க.) - விருகம்பாக்கம்: சூளைப்பள்ளம் பகுதியில் இருந்து  பாதிக்கப்பட்டவரைப் பேச வைத்தோம். “வீட்டில் இருந்த அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன” என்றார் தொகுதிவாசி. அதற்கு பார்த்தசாரதி, “தாசில்தாரிடமும் மாவட்ட கலெக்டரிடமும் பேசி இருக்கிறேன். அரசு மூலம் உரிய நிவாரணம் கிடைக்கச் செய்கிறேன். தே.மு.தி.க தொகுதி என்பதால், பாராமுகம் காட்டினாலும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்’ என்றார். ஆனால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூளைப்பள்ளம் பகுதிக்கு ஆறுதல் சொல்லக்கூட அவர் எட்டிப்பார்க்கவில்லை என்கிறார்கள் மக்கள்.

நீலகண்டன் (அ.தி.மு.க.) - திரு.வி.க. நகர்: பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி அருகிலும் குமாரசாமி தெருமுனையிலும் குவிந்து கிடக்கும் குப்பை, அந்தப் பகுதி மக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் துயரமாக இருக்கிறது. இதுகுறித்து புகார் செய்ய நீலகண்டனின் செல்போனுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பலமுறை தொடர்புகொண்டார். அவர் போனை எடுக்கவே இல்லை.

அருண் சுப்பிரமணியன் (தே.மு.தி.க.) - திருத்தணி: வேலு என்பவர் செல்போனில் பேசினார். ‘‘அய்யா, எங்க வீட்டைச் சுற்றி கால்வாய் தண்ணி தேங்கி நிக்குது. வெளியே வரமுடியல. அதை வெட்டி விட்டா சரியாயிடும்’’ என்றார். அதற்கு அருண் சுப்பிரமணியன், ‘‘திருத்தணி நகராட்சியில், என்னோட ஆட்கள் 25 பேரை வைத்து கால்வாய் அடைப்பை எல்லாம் சரிசெய்யச் சொன்னேன். சில இடங்களில் அவர்கள் சரிசெய்தனர். அப்போ, நகராட்சியிலிருந்து எல்லாத்தையும் பார்த்துவிட்டதாகச் சொல்லி, எங்க ஆட்களை வேலை செய்யவிடவில்லை. இப்படிச் செய்தால் நாங்கள் எப்படி அங்கு வேலை செய்ய முடியும்? நகராட்சி நிர்வாகிகள் சப்போர்ட் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார். தொகுதிப் பிரச்னைக்காக முதல்வரை பார்த்தவர் அருண் சுப்பிரமணியன். ஆளும் கட்சிக்கு ஆதரவாளராக மாறிய அவருக்கும் நகராட்சிக்கும் இடையே ஏதோ உள்குத்து போல.

சி.ஹெச்.சேகர் (தே.மு.தி.க.) - கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணிக்கம், ‘‘அய்யா, எங்கள் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. கரன்ட் இல்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் நேரில் வந்து பார்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்’’ என்றார். அதற்கு
எம்.எல்.ஏ சி.ஹெச்.சேகர், ‘‘வந்து பார்க்கிறேன்’’ என்றார்.

மீதி எம்.எல்.ஏ-க்கள் அடுத்த இதழில்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick