“ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கவனம் செலுத்துங்கள்!”

அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

ழை ஓய்ந்துவிட்டது. ஆனால், அதன் பாதிப்புகளும் பாதிப்புகளின் தாக்கமும் இன்னும் நீடித்துக்கொண்டு இருக்கிறது. நீதிமன்றங்களில் மழை வெள்ளம் தொடர்பான வழக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜிவ்ராய், ‘‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சென்னை மூழ்கியதற்குக் காரணம், பொதுப்​பணித் துறை அதிகாரிகளின் அலட்சியம்தான். ஏரிகளில் இருந்து வெள்ளநீரை சரியான நேரத்தில் அவர்கள் வெளியேற்றி இருந்தால், சென்னை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்காது. அதிகாரிகளின் அலட்சியம், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர் சமயங்களில் செய்ய வேண்டியவை குறித்து, ஆய்வுசெய்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதுபோல, தமிழக அரசு மேற்கொள்ளும் வெள்ள நிவாரணப் பணிகள், தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து, தானாக முன்வந்து​ (சூ-மோட்டோ) வழக்குப் பதிவு செய்து உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை, கடந்த 16-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜிவ்ராய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.விஜயன், ‘‘பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் துறை என்று அனைத்து அரசுத் துறைகளும் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால்தான், இவ்வளவு பாதிப்புகள். இதுவரை 300-க்கும் அதிகமான மனித உயிர்கள் பலியாகி உள்ளன. இன்னும் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் காரணம், அரசாங்கம் சொல்வதுபோல், நூறாண்டுகளில் பெய்யாத மழை தற்போது பெய்தது அல்ல... எல்லாத் துறைகளும் தங்களின் கடமைகளையும் தாங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் மீறிச் செயல்பட்டதுதான். சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமான போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அந்தத் துறை செயலாளர், கடந்த நவம்பர் 29-ம் தேதியன்று தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் ,அந்தக் கடிதத்தின் மீது, தலைமைச் செயலாளர் டிசம்பர் முதல் தேதி முடிவெடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட அனுமதி அளித்துள்ளார். இதனால், டிசம்பர் முதல் தேதி, 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றுவதில் தொடங்கி, அன்றே 39 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுவும்  நள்ளிரவில் இவ்வளவு அதிகமான தண்ணீரை திறந்துவிட்டதால், கரையோர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

ஏரி, குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை அரசாங்கம் அதற்குச் செலவழிக்கவில்லை. தற்போது பெய்த பெருமழையில், ஆக்கிரமிப்பு பகுதிகள்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்தால், இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த வெள்ளப் பாதிப்புகளுக்கான காரணம் குறித்து, விசாரிக்க உயர் நீதி​மன்றம் உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள்  தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அதில், அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானி​கள், மூத்த வக்கீல்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் இந்தக் குழு செயல்திட்ட அறிக்கையைத் தயாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் இடம்பெறும் பரிந்துரைகளை, உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் செயல்படுத்த வேண்டும்” என்று வாதிட்டார்.

அதன்பிறகு, அரசுத் தலைமை வழக்கறிஞர் சோமாயாஜி, தன்னுடைய வாதத்தில், ‘‘பொதுப்பணித் துறை அதிகாரிகள் யாரும் அலட்சியமாகச் செயல்பட​வில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம். அதுபோல, அரசாங்கம் மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து சிறப்பாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்று சொல்லி​விட்டு அதுபற்றிய அறிக்கையையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘பொதுப்பணித் துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட விவகாரம் பற்றி, மிக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயல்பட வேண்டும். அத்துடன், கடந்த காலங்களில் ஏரிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு​களை அகற்று​வதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து செலவிடப்படும் தொகை பற்றி இந்த நீதிமன்றம் கேள்வி கேட்க விரும்பவில்லை.

ஏனென்றால், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வரும் தொகையை எதற்குச் செலவிட வேண்டும்; எவ்வளவு செலவிட வேண்டும் என்பதில் முடிவெடுக்கும் முழு அதிகாரமும் முதலமைச்சருக்கு உள்ளது. அதே நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்​களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணம் உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்பதையும் அரசு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்த விவகாரத்தில் அரசாங்கம் சிறப்பாகச் செயல்படும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது” என்றனர்.

நீதிமன்றம் மூலமாக நல்லது நடக்கட்டும்!

- ஜோ.ஸ்டாலின், படம்: மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick