அடித்துச் செல்லப்பட்ட அறிவுச் செல்வங்கள்!

நிலைகுலைந்த பதிப்பகங்கள்...

புத்தக அலமாரிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட வேண்டிய புத்தகங்கள், குப்பையாக மலைபோலக் குவிந்துகிடக்கின்றன. சென்னை நகரைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தில் புத்தகங்​களும் தப்பவில்லை. பதிப்பகங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான புத்தகங்கள் நாசமாகிவிட்டன. ஜனவரி மாதம் நடைபெறுவதாகத் திட்டமிட்டிருந்த சென்னை புத்தகக் காட்சி​யின் விற்பனையைக் கருத்தில்​கொண்டு, வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன்பெற்று பதிப்பகங்களின் உரிமை​யாளர்கள் புத்தகங்களை அச்சிட்டு வைத்திருந்தனர். அத்தனையும் பாழ்.

இதுகுறித்து கண்ணதாசன் பதிப்பகத்தின் உரிமையாளரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பப்பாசி) தலைவருமான காந்தி கண்ணதாசனிடம் பேசினோம். ‘‘சென்னை புத்தகக் காட்சிக்காக ஒவ்வொரு பதிப்பாளரும் 20-க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களை மொத்தமாகப் பதிப்பித்து வைத்திருந்தனர். அவை எல்லாமே வெள்ளத்தில் பாதிக்கப்​பட்டுவிட்டன. பதிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக பப்பாசியில் இருந்து 12 பேர்கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம். பப்பாசி நலநிதியில் இருந்து பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களுக்கு முதல் கட்ட உதவிசெய்ய முடிவு செய்திருக்கிறோம். மாநில அரசு பதிப்பகங்களுக்குக் கடன் கொடுத்து உதவ வேண்டும். பதிப்பகங்களில் இருந்து நூல்கள் வாங்கும்போது கடனைக் கழித்துக்கொள்ளலாம். இதுகுறித்து முதல்வருக்கு கோரிக்கைமனு அனுப்பி உள்ளோம்’’ என்றார்.

சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளருமான புகழேந்​தியிடம் பேசினோம். “எனது பதிப்பகத்துக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துவிட்டது. நாங்கள் இருப்பு வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், கணினிகள் பாதிக்கப்பட்டி ருக்கின்றன. அதில் இருந்த தகவல்கள் திரும்ப கிடைக்குமா என்று தெரியவில்லை. பப்பாசியில் இருக்கும் 100 பதிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

சி.ஐ.டி. நகரில் உள்ள ஸ்ரீஇந்து பதிப்பகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் உரிமையாளர் ராமநாதனிடம் பேசி​னோம். “ஆன்மிகம், குழந்தைகள் தொடர்பான புதிய புத்தகங்களை இருப்பு வைத்திருந்தோம். மழை, வெள்ளத்தில் தரைத்தளம் முழுவதும் மூழ்கிவிட்டது. 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் காகிதக் கூழாக மாறிவிட்டன. இந்த அதிர்ச்​சியில் இருந்து இன்னும் மீளவில்லை” என்றார்.

தமிழ் மண் பதிப்பகத்தின் உரிமையாளர்  இளவழகனிடம் பேசினோம். “சென்னை புத்தகக் கண்காட்சிக்காக ரூ.1.75 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை அச்சிட்டுவைத்திருந்தோம். இவற்றுக்காக இரண்டு வங்கிகளில் 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். பாதிப்புகளை அறிந்த வங்கி அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கின்றனர். இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து வருவதாகச் சொல்லியிருக்கின்றனர். அரசு சார்பில் உதவித்தொகையும், புதிதாகப் புத்தகங்கள் அச்சிடு​வதற்கு கடன் உதவியும் செய்ய வேண்டும்” என்றார்.

பாரதியின் படைப்புகளை தேடித்தேடி பதிப்பித்து வரும் சீனி.விஸ்வநாதனின் வீடு சி.ஐ.டி நகரில் உள்ளது. வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததில் அவர் வைத்திருந்த புத்தகங்கள் பாதிக்கப்பட்டிருக்​கின்றன.  ‘செல்லம்மாளுக்கு பாரதி எழுதிய கடிதம்’ உள்ளிட்ட அரிய படைப்பு​கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தாம்பரத்தில் வசிக்கும் நூலகர் ரெங்கையா முருகன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெள்ளத்துக்குப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். பல நூல்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த முதல்பதிப்பு நூல்கள். வேறு எங்கும் கிடைக்காதவை. ‘‘என்னுடைய புத்தகச் சேகரிப்புகள் தனித்துவ​மானவை. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சைவ சமயிகளுக்கும் வேதாந்திகளுக்கும் இடையே நடந்த விவாத மோதல்கள், பல நூறு வேதாந்திகளின் அரிய வாழ்க்கை வரலாறுகள், தமிழகத்தை ஆய்வு செய்த ஆங்கிலேய அறிஞர்களின் நூற்றுக்கணக்கான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். தமிழ் வேதாந்திகளைக் குறித்து நான் எழுதிவைத்திருந்த கையெழுத்துப் பிரதிகள், கம்ப்யூட்டரில் சேகரித்துவைத்திருந்த 400 பழந்தமிழ் நூல்கள் வெள்ளத்தால் மக்கி மண்ணாகிப் போயின. ஒரு குப்பை லாரியில் அவற்றை ஏற்றி அனுப்பிவிட்டு, அழுதேன்’’ என்கிறார்.

பொருளையும் உயிரையும் மட்டுமல்ல, அறிவையும் காவு வாங்கிவிட்டது மழை!

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: எம்.உசேன், ப.சரவணகுமார்


“ஒரு கோடிக்கும் மேல்’’

‘விகடன் பிரசுர’த்தின் மேலாளர் அப்பாஸ் அலி கூறும்போது ‘‘விகடன் பிரசுரத்தின் சார்பில் புத்தக காட்சிக்காக அதிக அளவிலான புதிய புத்தகங்கள் தயாரித்து இருப்பு வைத்திருந்தோம். இதில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பிலான புத்தகங்கள் மழை வெள்ள நீரால் சேதம் அடைந்துவிட்டன’’ என்றார்.

யார்... யார்?

ஸ்ரீஇந்து பப்ளிகேஷன், தமிழ்மண் பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன், கடலங்குடி பப்ளிகேஷன், வானதி பதிப்பகம் (வாரன் சாலையில் உள்ள குடோன்), மணிமேகலை பிரசுரம், லிப்கோ பதிப்பகம், பரிசல், ராஜ்மோகன் பதிப்பகம், சந்தியா பதிப்பகம், தோழமை பதிப்பகம், கிழக்குப் பதிப்பகத்தின் ஷோரூம், ஜீவா பதிப்பகம், நர்மதா பதிப்பகம், நியூ புக்லேண்ட், அருணா பப்ளிகேஷன்ஸ், சாந்தி புக் ஹவுஸ், புக் வேர்ல்ட் லைப்ரரி, பொன்னி பதிப்பகம், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சேகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick