மக்களை அலைக்கழிக்கும் பதிவுத் துறை!

அரசு நடத்தும் கண்துடைப்பு முகாம்கள்...

சென்னை மழை, வெள்ளத்தில் சொத்துப் பத்திரங்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்கான முகாம் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. முகாம்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுக்கின்றனர். சிறப்பு முகாம்கள் எப்படிச் செயல்படுகின்றன?

ஆவணங்கள் பெற பதிவுத் துறை வெளி​யிட்ட அறிவிப்புகள் குழப்பங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.   பதிவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “பதிவுத் துறை ஐஜி அலுவலகம் வெளியிட்ட உத்தரவில்,  சொத்துப் பத்திர நகல்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் ஏதாவது ஓர் அடையாள ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எந்தவித அடையாள ஆவணமும் இல்லாதவர்களின் நிலைமை குறித்து சிலர் விவாதித்தனர். இதன்பிறகு பதிவுத் துறை செயலாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட உத்தரவில், சொத்தின் பத்திர நகலைப் பெற அடையாள ஆவணங்கள் தேவை​யில்லை என்று குறிப்பிட்டனர்.

இதனால் முகாமில், அடையாள ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பப் ​படிவங்கள் பெறப்பட்டன. இதைப் பயன்படுத்தி, சொத்தின் உரிமையாளர்களைத் தவிர வேறு சிலரும் விண்ணப்பித்த தகவல் தெரியவந்தது. வரும் காலங்களில் வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பதிவுத் துறை உயரதிகாரிகளிடம் முகாமில் பங்கேற்ற சார்- பதிவாளர்கள் தெரிவித்தனர். இதனால் யாருக்கும் சொத்துப் பத்திர நகலைக் கொடுக்க வேண்டாம் என்று வாய்மொழியாக அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 17-ம் தேதி பதிவுத் துறை ஐஜி அலுவலகத்தில் இருந்து மீண்டும் ஓர் உத்தரவு வந்தது. அதில் சொத்தின் நகலைக் கேட்டு விண்ணப்பிப்பவர்கள், வெள்ளைத்தாளில் சுய உறுதிமொழிக் கடிதத்துடன் ஏதாவது ஓர் அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சரிப்பார்த்து,  சொத்தின் நகல் வழங்கப்படும். அப்போது விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இவ்வாறு திட்டமிடாமல், ஒவ்வொரு நாளும் ஓர் அறிவிப்பை வெளியிடுவதால் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்படுகின்றன” என்றனர்.

அசோக் நகர் மற்றும் வில்லிவாக்கம், சிட்கோ நகர் சார் - பதிவாளர் அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கிருந்த ஆவணங்கள் நாசமாகி உள்ளன. இரண்டு சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கும் சொத்தின் நகல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2000-க்குப் பிறகு பதிவுசெய்யப்​பட்ட ஆவணங்களை ஆன்லைனில் திரும்பப் பெறலாம். ஆனால், அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை எப்படிக் கொடுப்பது என்று பதிவுத் துறையினர் ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக விரைவில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்.

“வெள்ளத்தில் அனைத்து அடையாள ஆவணங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம். ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இதனால் சொத்தின் நகலைப் பெற முடியவில்லை. முகாம் வெறும் கண்துடைப்பு” என்றார் சோளிங்கநல்லூரைச் சேர்ந்த கோகிலா.

வெளிமாவட்டங்​களில் சொத்து உள்ளவர்கள், அதற்கான பத்திரங்களை சென்னையில் வைத்திருந்தனர். அந்தப் பத்திரங்களை இழந்தவர்களும் சென்னையில் உள்ள முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையில்லாத வேலை என்கின்றனர், பதிவுத் துறையினர். 

வெள்ளத்தில் சொத்துப் பத்திரங்களை இழந்தவர்களில் சிலர், பத்திரத்தை அடமானமாக வைத்து தனியாரிடம் கடன் பெற்றிருக்கின்றனர். இதில் பெரும்பாலான அடமானங்கள் பதிவுசெய்யப்படுவதில்லை. அவ்வாறு பதிவுசெய்யப்படாதப் பத்திரங்களின் நகலை, கடன்பெற்றவர்கள் முகாமில் விண்ணப்பித்துப் பெற வாய்ப்புள்ளது. இதனால் தேவையில்லாத வில்லங்கங்கள், சட்டச் சிக்கல்கள் ஏற்படும்.

இதுகுறித்து, பதிவுத் துறை ஐ.ஜி முருகய்யாவிடம் பேச முயற்சி செய்தோம். அவர் பதிலளிக்கவில்லை.  அவரது செல்போனை யார் தொடர்பு கொண்டாலும் அவர் பதிலளிப்பதில்லை என பதிவுத் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. எனவே, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பேசினோம். “அசோக் நகர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் தண்ணீரில் நனைந்த பதிவு ஆவணங்களை உலர வைத்து பாதுகாப்பாக மீட்டுவிட்டோம். இதனால் பாதிப்புகள் எதுவும் இல்லை. பதிவு ஆவணங்களின் நகல் பெறுவதில் எவ்விதத் தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சில உத்தரவுகள் தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்டன. மக்களுக்கு எளிதாக சொத்துப் பத்திரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

- எஸ்.மகேஷ்
படம்: ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick