“கொடநாடு எஸ்டேட்டை மதுரை மகிளா காங்கிரஸுக்கு எழுதிவைக்கட்டும்!”

இளங்கோவன் அதிரடி!

மிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயைத்திறந்தாலே பரபரப்பும் சர்ச்சையும் பற்றிக்கொள்கிறது.

நேஷனல் ஹெரால்டு சொத்து மோசடி விவகாரத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுக்க மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்டத்தில் கலந்துகொள்ள இளங்கோவன் மதுரை வந்தார்.

மதுரை அவருக்கு மறக்க முடியாத நகரம். சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா போட்ட அவதூறு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் மதுரையில் கையெழுத்திட வந்தவரை துடைப்பம், சாணி என்று வரவேற்ற அ.தி.மு.க-வினருக்கு முன் தில்லாக நின்றதால், ஒன்றும் செய்ய​முடியாமல் அ.தி.மு.க-வினர் அடங்கிப் போனார்கள். அப்போது அவர் தங்கியிருந்த 10 நாட்களும் மதுரையே பரபரப்பாக இருந்தது. இப்போது நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் மதுரையைத் தேர்வுசெய்திருந்தார் இளங்கோவன்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கம்போல் அதிரடியாகப் பேச ஆரம்பித்தார்.....

‘‘இந்திய விடுதலைக்கு உதவுவதற்காக பண்டித நேருவால் உருவாக்கப்பட்ட நாளிதழ் ‘நேஷனல் ஹெரால்டு’. நேரு குடும்பம் குபேரர்களாக இருந்து அரசியலுக்கு வந்து, அனைத்தையும் இழந்தது. இப்போதுள்ள அரசியல்வாதிகள்போல் நாட்டியமாடியோ, 15 பைசாவுக்கு டீ விற்றோ அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவர்களல்ல. நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த குடும்பம். அப்படிப்பட்ட பரம்பரையில் வந்த அன்னை சோனியா மீது வழக்குப் போட பி.ஜே.பி-யினருக்கு என்ன அருகதை உள்ளது?  சுப்ரமணியன் சுவாமி, எப்படிப்பட்ட ஆள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் அ.தி.மு.க மகளிர் அணியினருக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இப்படிப்பட்டவர் வழக்குப் போடலாமா? இந்தியாவில் ஜனநாயகம் உருவாகக் காரணமே நேரு குடும்பம்தான். இல்லையென்றால் பாகிஸ்தான்போல் ஆகியிருக்கும்.

இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுக்க நடைபெற்றாலும் நான் மதுரையில் கலந்துகொள்ள முக்கியக்  காரணம், இது நீதி கேட்ட நகரம். பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்ட வரலாறுகொண்ட நகரம். அதனால்தான் பொய் வழக்குக்கு எதிராக இங்கு நியாயம் கேட்கிறேன்.
நம் பக்கம் நியாயம் உள்ளது. தர்மம் உள்ளது. கண்களைக் கட்டிக்கொண்டு ஆட்சி நடத்துகிறார் மோடி. அவருடைய ஆட்சி மிச்சமிருக்கும் மூன்றரை வருடங்கள் நிலைக்காது. இந்திய மக்கள் பிரதமராகத் தேர்ந்து எடுத்தாலும் அவர் எப்போதும் வெளி​நாட்டில்தான் இருக்கிறார். இது தமாஷாக இருந்தாலும், எவ்வளவு வேதனையான விஷயம். நமக்கு வாய்த்த பிரதமர் மட்டுமல்ல, முதல்வரும் அப்படித்தான். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரை பற்றிப் பேச வேண்டாம் என்று நினைத்தேன். முடியவில்லை.

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பில் கஷ்டப்பட்ட மக்களுக்கு அரசு எதுவுமே செய்யவில்லை. 80 சதவிகிதம் தன்னார்வ இளைஞர்கள்தான் உதவி செய்தார்கள். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்குப் பதவி ஒரு கேடா... முதல்வரை  நான் பேர் சொல்லி அழைக்கலாம்.
எங்களுக்கு ஒரே வயதுதான். முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்தார்கள். இதுபோல ஒரு முதல்வரை இந்தியா இதுவரை பார்த்தது இல்லை.

தனக்கு வாரிசுகள் இல்லை என்கிறார். அப்படியென்றால் கொடநாடு எஸ்டேட்டை மதுரை மகிளா காங்கிரஸுக்கு எழுதிவைக்கட்டும். சிறுதாவூர் பங்களாவை எங்கள் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி அணிக்கு எழுதிவைக்கட்டும். சேர்த்து வைத்திருக்கும் நகைகளை எங்கள் மதுரை மாவட்டத் தலைவர் தெய்வநாயகத்துக்குக் கொடுத்திடுங்கள்.

அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்கள் 24 மணிநேரம் பணி செய்யும்போது, உயர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 10 நிமிடங்கள் அதிகாரிகளுடன் பேசுவதுபோல் டி.வி-யில் முகத்தைக் காட்டுகிறார். அவ்​வளவுதான். இதுதான் இவர்கள் நடத்தும் ஆட்சி.

தமிழக பி.ஜே.பி-யினர் வீரமானவர்கள் போல பேசுகிறார்கள். தமிழிசை எப்போதும் காங்கிரஸை விமர்சனம்செய்து பேசி வருகிறார். கரகாட்டக்காரிக்கும் பொய்க்கால் குதிரை ஆடுகிறவருக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்.

கண்ணகி நீதி கேட்டு கிடைக்காதபோது மதுரை பற்றி எரிந்தது. எங்கள் அன்னை சோனியாவுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், இந்தியாவே பற்றி எரியும். எல்லோரும் சுபாஷாக மாறுவோம். பொய் வழக்கு, அடக்குமுறை தொடர்ந்தால் கொடியோடு மட்டுமல்ல, தடியோடும் இறங்குவான் காங்கிரஸ்காரன்.

இது வெறும் கோஷங்கள் எழுப்பும் ஆர்ப்பாட்டம்தான். மோடி அரசு இதுபோல் பொய் வழக்குகளைத் தொடர்ந்தால், இதுவே பெரும் போராட்டமாக மாறும். எங்களை சீண்டக் கூடாது’’ என்றார்.

இதுகுறித்து தமிழிசை சௌந்திரராஜன், ‘‘பெண் அரசியல் தலைவர்களை இப்படித் தவறாக சித்தரித்துவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தான் சார்ந்த கட்சிக்கும் ஒரு பெண்தான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. சோனியாவையும், ராகுலையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பி.ஜே.பி சொல்லவில்லை. நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதை உணராது கூச்சலிடுகிறார் ஈ.வி.கே.எஸ். சொந்தக் கட்சி உறுப்பினர் ஆகட்டும், முதல்வர் ஆகட்டும், சக அரசியல் கட்சித் தலைவர் ஆகட்டும் அரசியலில் பெண்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லாததையே இந்தப் பேச்சு காட்டுகிறது. கரகாட்டக்காரர்கள் எந்தவிதத்தில் சமூக அந்தஸ்தில் குறைந்துபோனார்கள்? இதுகூட தெரியாதவர் பாரம்பர்யம் மிக்க கட்சிக்குத் தலைவராக இருப்பது வேதனை அளிக்கிறது. சிம்பு - அனிருத் ரேஞ்சுக்கு அவர் தரம் தாழ்ந்துவிட்டார்’’ என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, “அவர் பேசியது பற்றி முழுமையாகத் தகவல் வரவில்லை. பொதுவாக அவர் எப்போதும் அநாகரிகமாகத்தான் பேசுகிறார். பெண்களை இழிவுபடுத்துகிறார்அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

தற்போது இவர் பேச்சால் அ.தி.மு.க தலைமையும், பி.ஜே.பி தமிழகத் தலைமையும் சீரியஸாகியுள்ளது. நேரடியாக வழக்குப் போடாமல், கரகாட்டக் கலைஞர்கள் மூலம் இளங்கோவன் மீது வழக்குத் தாக்கல்செய்ய ஏற்பாடு நடக்கிறது.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், நா.விஜயரகுநாதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick