முதல்வரின் ‘க்ரீன்’ சிக்னல் கிடைக்குமா?

காத்திருக்கும் திருமணங்கள்... நொந்துபோன உறவுகள்!

நிச்சயிக்கப்பட்டு, பத்திரிகை அச்சடிக்கப்​பட்டு, குறித்த நாளில் திருமணம் நடைபெற முடியாமல் போய்விடுவது திரைப்படத்தின் இடைவேளைக்​கான அதிரடித் திருப்பமான காட்சி.

உண்மையில் இதுபோல திருமணம் நின்று​விட்டால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனவலியை ஏற்படுத்தும். ஆயிரக்கணக்​கானவர்களுக்கு அழைப்பு, தடபுடலான விருந்து என அமர்க்களமான முன்னேற்பாடுகளுக்குப் பிறகு திருமணம் திடீரென நின்றுபோவதும் பின்னர் அந்தத் திருமணம் எப்போது நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுவதும் பெற்றோருக்கும் மணமக்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 6-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், முக்கூர் சுப்பி​ரமணியன், சண்முகநாதன், காமராஜ் ஆகியோரின் இல்லத் திருமணங்களும் இதர 10 நிர்வாகிகளின் திருமணங்களும் நடப்பதாக இருந்தன. பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்​பட்டிருந்த நிலையில், மழை, வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால், அமைச்சர்களின், அ.தி.மு.க. நிர்வாகிகளின் வெளியில் ‘சொல்லாத’ துயரங்​களின் தொகுப்பு இங்கே...

அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகள் நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகிறது. மகன் திருமணத்தை முதல்வர் தலைமையில் நடத்தினார். எனவே, தனது மகள் திருமணத்தையும் முதல்வர்தான் நடத்திவைக்க வேண்டுமென உறுதியோடு இருந்தார். டிசம்பர் 6 எனத் தேதி கொடுக்கப்பட்டது. திருமண வரவேற்புக்காக தஞ்சாவூரில் 20 ஏக்கர் பரப்பில் பந்தல் போட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தார். திருமணம் ரத்தானதை அடுத்து அவரது உறவினர்கள் அப்செட் ஆகிவிட்டனர். திருமணம் நிச்சயித்து ஒரு வருடமான நிலையில்  திருமணத்துக்குத் தடை ஏற்பட்டிருப்பதை உறவினர்கள் சென்டிமென்டாகக் கருதுகிறார்களாம்.  ‘காலம் போகின்ற போக்கில் இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறார் அமைச்சர்.  

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்ரமணியனின் மகன் செந்தில்குமாரை திருமணம்செய்ய உள்ள பெண்ணும், முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராமசந்திரன் மகன் செழியனை மணம்செய்ய உள்ள பெண்ணும் அக்கா, தங்கைகள். இந்தத் திருமணம் மூலம், முன்னாள் அமைச்சர் மகனும் இன்னாள் அமைச்​சர் மகனும் சகலபாடியாகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு ராமச்​சந்திரனுக்கும் முக்கூர் சுப்ரமணியனுக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டது. டிசம்பர் 7-ம் தேதி அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் மகன் வரவேற்பு வந்தவாசி​யில் உள்ள திருமதி மஹாலில் நடப்பதாக இருந்தது. இப்போது எல்லாம் ரத்து செய்யப்பட்டு​விட்டதில் உறவுகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதா நடத்திவைக்க இருந்த திருமணத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜன் மகள் திருமணமும் ஒன்று. 8-ம் தேதி திருவண்ணாமலை என்.எஸ்.சித்திர மஹாலில் வரவேற்பு நடப்பதாக இருந்தது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், பெருமாள் நகர் ராஜனின் உறவினர்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.

சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாத​னின் 4-வது மகளும், மருத்துவருமான தமிழரசிக்கும் கன்னியாகுமரி, அளந்தகரையைச் சேர்ந்த மருத்துவர் நித்தினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழ் 25 ஆயிரம் பேருக்கு விநியோகிக்கப்பட்டிருந்தது. 13-ம் தேதி தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் வரவேற்பு நடத்துவதாக இருந்தது. திருமணம், ரத்து செய்யப்பட்டதால் சுமார் 20 லட்சம் வரை நஷ்டம் ஆகியிருக்கிறதாம்.

அமைச்சர் காமராஜின் மகன் இனியவனுக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ஃபைனான்ஸ் நிறுவன உரிமையாளர் மகள் இலக்கியாவுக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணம் தடைப்பட்டதால் இவர்களும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

தங்கள் சங்கடத்தை இவர்களால் முதல்வரிடம் சொல்ல முடியவில்லை. அதனால் வாய்மென்றபடி இருக்கிறார்கள்!

- எஸ்.சரவணப்பெருமாள், காசி.வேம்பையன், ஏ.ராம்
படங்கள்: ஏ.சிதம்பரம், கா.முரளி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick