“சுத்தம் செய்யுறதுலதான் சந்தோஷமே இருக்கு சார்!”

கலாமின் காலடிச் சுவட்டில்...விகடன் டீம்

`சென்னை வெள்ளத்தால் வீதிக்கு வீதி மலைபோல் குவிந்த குப்பை​களின் அளவு, உத்தேசமாக ஒரு லட்சம் டன்’ என வந்த செய்திகள் அலறவைத்தன. சிங்காரச் சென்னை, குப்பைச் சென்னையாக மாறி துர்நாற்றம் எடுக்க... நிலத்தடி நீர் நிறம் மாறி, காற்று மணம் மாறி, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இப்போது வரை நீடிக்கிறது. உடனடியாகச் செய்ய​வேண்டியது, குப்பைகளை அகற்று​வதுதான். ஆனால், நினைத்துப்​பார்க்கவே மலைப்பாக இருக்கும் இந்தக் குப்பை மலைகளை அகற்றுவது யார்?

வெள்ளத்தின் பாதிப்புகளை எல்லோரும் பகிர்ந்து​கொண்​டார்கள். ஆனால், குப்பை அள்ளும் பணியைச் செய்வது, எப்போதும்​போல துப்புரவுப் பணியாளர்கள்தான். சென்னை மாநகராட்சியின் துப்புரவுத் தொழி​லாளர்கள் எண்ணிக்கை, மிகக் குறைவு. இதனால் மற்ற மாவட்டங்​களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்​பட்டனர். அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்​பட்டு, துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய பாதுகாப்பு வசதிகளோ, அடிப்​படை வசதிகளோ இல்லாமல் ஆபத்தான குப்பை​களை அகற்றும் சவால் நிறைந்த பணியைச் செய்துவரும் இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஆனந்த விகடனும் ராகவா லாரன்ஸும் இணைந்து செயல்படுத்தும் `அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ் உதவ முடிவு செய்யப்பட்டது. அதிகாலை முதல் முன்னிரவு வரை குப்பைக் கழிவுகளை அகற்றும் அவர்களுக்கான முதல் தேவை, பாதுகாப்பு உபகரணங்கள். ஒரு செட் ரப்பர் பூட்ஸ், இரண்டு செட் சாக்ஸ், கைகளைப் பாதுகாக்கும் ஒரு செட் நிட்ரல் க்ளவுஸ், மருத்துவர்கள் பயன்படுத்தும் சர்ஜிக்கல் கிளவுஸ் ஐந்து செட், ஃபேஸ் மாஸ்க் ஐந்து... இவற்றுடன் ஐந்து குளியல் சோப், ஐந்து சலவை சோப், ஒரு பாட்டில் டெட்டால், ஒரு கொசுவத்தி பாக்கெட், ஜண்டுபாம், வாலினி, ஓடமாஸ், ஐந்து கடலைமிட்டாய் பாக்கெட், மாத்திரைகள் சேர்த்து ஒரு நபருக்கு  14 பொருட்களைத் தரலாம் என முடிவானது. இந்தப் பொருட்களின் மதிப்பு 800 ரூபாய். 8 லட்சம் ரூபாய் மதிப்பில் 1,000 தொழிலாளர்​களுக்குத் தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பைகள்.

`‘இது ரொம்ப முக்கியமான உதவி சார். `யாருக்குச் செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அந்த உதவி மதிப்பிடப்படுது’னு சொல்வாங்க. அந்த வகையில் நம்ம சென்னையை சுத்தப்படுத்த தங்கள் உயிர்களைப் பணயம் வெச்சு உழைக்கிறவங்களுக்கு ‘அறம் செய விரும்பு’ திட்டத்தில் இதைச் செய்றதுதான் ஆத்மார்த்தமான விஷயம்’’ என நெகிழ்ந்தார் ராகவா லாரன்ஸ்.

கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழி​லாளர்கள்​தான் பயனாளிகள். உதவிப் பொருட்கள் அடங்கிய பைகள் அனைத்தையும் லாரிகளில் கொண்டுசென்று இறக்கினோம். மாலை 5 மணிக்குப் பிறகு வேலை முடிந்து, தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கி​னார்கள்.

சுகாதார மேற்பார்வையாளர் ஹக்கிம் சையத், “சென்னைக்கு ஒவ்வொரு பேட்ச் ஆக துப்புரவுப் பணியாளர்கள் வந்துட்டே இருக்காங்க. நாங்க ஈரோடு மாவட்டத்துல இருந்து வந்திருக்கோம். மொத்தம் 110 பேர். தி.நகர், அசோக் நகர் பகுதிகளைச் சுத்தம் செஞ்சிட்டிருக்கோம். அங்க அவ்வளவு குப்பை. அள்ள அள்ள வந்துக்கிட்டே இருக்கு. மழை அடிச்சிட்டு வந்து ஒதுக்கின குப்பைங்களைக் கிட்டத்தட்ட அள்ளிட்டோம். இப்ப அள்ளிக்கிட்டு இருக்கிறது எல்லாம், மக்கள் வீடுகளைச் சுத்தம் பண்ணிக்கொண்டுவந்து கொட்டுறதுதான்.

வெறும் தண்ணியில நனைஞ்சிருந்தாக்கூட துவைச்சோ, காய வெச்சோ அந்தப் பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனா, சேறும் சகதியுமா சாக்கடைத் தண்ணியில ஊறிப்போய்க் கிடக்கிறதால அவங்களால திரும்ப எதையும் பயன்​படுத்த முடியலை. பாவம், கிரவுண்ட் ஃப்ளோர் வீடுகள்ல இருந்தவங்கதான் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்காங்க. வீணாப்போன பொருட்​களை அள்ளிவந்து கொட்டிட்டே இருக்காங்க. சோபா, பெட், தலையணை, துணிமணிகள்னு எல்லாம் நாசம். குறிப்பா, கூவத்தை ஒட்டியுள்ள சேறும் சகதியுமான பகுதிகள்ல இறங்கி வேலைசெய்யும்​போது, நீங்க கொடுக்கப்போற பூட், கிளவுஸ் ரொம்ப உபயோகமா இருக்கும்’’ என உற்சாகமாகப் பேசினார்.

லாரன்ஸ் வந்ததும் பெரும் ஆரவாரம். கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி நெகிழ்ந்தார்கள். ``இந்தச் சாக்கடையும் நாத்தமும் தாங்க முடியலை​தான். ஆனால், பாவம்... சென்னை மக்களுக்கு எவ்வளவோ கஷ்டம். அதைச் சரிசெஞ்சு தர்றோம்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்குது சார்’’ என்றார் ஒரு தொழிலாளி.

``உதவி பண்ண வந்த உங்களுக்கு உதவுறதுல எங்களுக்கு சந்தோஷம்’’ என்றார் லாரன்ஸ்.

ஒவ்வொரு மாவட்டத் தொழிலாளர்களும், வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். “நான் 27 வருஷமா துப்புரவுப் பணியாளரா வேலைசெய்றேன் தம்பி. இப்பதான் முதன்முதலா மெட்ராஸுக்கு வர்றேன். நாங்க காலையில 4 மணிக்கு எழுந்து குளிச்சு ரெடியாகிடுவோம். இன்னைக்கு எந்த இடம்னு சொல்வாங்க. அங்க போய் 6 மணியிலேர்ந்து வேலையை ஆரம்பிச்சிருவோம். நான் நேத்து தி.நகர், சைதாப்பேட்டை ஏரியாவுக்குப் போனேன். ஒரே சாக்கடை நாத்தம். கால்வைக்க முடியாத அளவுக்குச் சகதி. அதுலதான் இறங்கி வேலைபார்த்தேன். இப்போ நீங்க குடுத்திருக்கிற கிளவுஸும் ரப்பர் ஷூவும் உண்மையாவே பயன்படும். நாளையிலேர்ந்து இதைப் போட்டுக்கிட்டு கொஞ்சம் நிம்மதியா தைரியமா வேலைசெய்யலாம்” என்றார் 55 வயதான சின்னப்பையன்.

பெரும்பாலான தொழிலாளர்கள், கிளவுஸையும் மாஸ்க்கையும் அங்கேயே போட்டுப்பார்த்தார்கள். பலர் இப்போதுதான் இதை முதல்முறை அணிபவர்கள். இதுவரை எந்தவிதப் பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல்தான் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை. எங்க அப்பாவுக்கும் இதே தொழில்தான். நான் இங்கே மெரினா பீச், எம்.ஜி.ஆர் சமாதியைச் சுத்தி உள்ள பகுதிகளை க்ளீன் பண்றேன். குப்பைகளைச் சுலபமா அள்ளிடுவேன். ஆனா, செத்துப்போன நாய், பூனை, பெருச்சாளிகளை எல்லாம் வெறும் கையால எடுக்க முடியாது. அங்கேயே குப்பையில கிடக்குற துணிகளை எடுத்து, கையில கிளவுஸ் மாதிரி சுத்திக்கிட்டுத்தான் அதுங்களை எடுத்துக்கிட்டு இருந்தேன். நாங்க போய் எங்க சார் இந்த கிளவுஸ், ஷூ எல்லாம் வாங்குறது? எங்க ஒரு மாச சம்பளமே 2,500 ரூபாதான். இதுல எப்படி வாங்க முடியும்? இப்ப நீங்க கொடுத்த கிளவுஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று கரம் கூப்பினார் ஜெயக்குமார்.

‘‘உங்களின் உதவியை ஈடுசெய்யும் அளவுக்கு எங்களால எந்தப் பதில் உதவியையும் செய்திட முடியாது. எங்களுக்கு ஒரு சின்னச் சந்தோஷம்; மன திருப்தி’’ எனக் கைகூப்பி நெகிழ்ந்து விடைபெற்றார் லாரன்ஸ்.

உதவிப் பொருட்கள்

1. ரப்பர் பூட்ஸ் - 1 செட்
2. நிட்ரல் க்ளவுஸ் - 1 செட்
3. ஃபேஸ் மாஸ்க் - 5
4. சர்ஜிக்கல் க்ளவுஸ் - 5
5. சாக்ஸ் - 2 செட்
6. குளியல் சோப் - 5
7. டெட்டால் - 1
8. துணி சோப் - 5
9. கொசுவர்த்தி - 1 பாக்கெட்
10. கடலை மிட்டாய் - 5 பாக்கெட்
11. ஜண்டுபாம் - 1
12. வாலினி - 1
13. ஓடோமாஸ் - 1
14. க்ரோசின் - 1 அட்டை


`அறம் செய விரும்பு' திட்டத்தின் செயல்பாடுகள் ஆனந்த விகடனில் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick