தேர்தல் நேரத்தில் தீர்ப்பு வருமா?

2ஜி... ஷாக்!

ந்தியாவை உலகப் புகழ் ஊழல் நாடாகக் காட்டிய 2ஜி வழக்கில் சி.பி.ஐ. தன்னுடைய வாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. இனி குற்றவாளிகள் தரப்பின் இறுதிவாதம். எப்படியும் அது மூன்று மாதங்களுக்கு மேல் இழுக்காது. தமிழகத்தில் தேர்தல் சூறாவளி வீசும்போது வழக்கின் தீர்ப்பு வந்துவிடலாம் என்பதே இப்போதைய நிலைமை.

2011-ம் ஆண்டு தொடங்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றப்பத்திரிகை, வாதப் பிரதிவாதங்கள், ஆவணங்கள் சமர்ப்பணம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு என்று இழுத்துக்கொண்டிருந்தது. ஆனால், டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, கொஞ்சமும் தனது பிடியைத் தளர்த்தாமல் வழக்கை நடத்தினார். குற்றம்சாட்டப் பட்டவர்கள் ஓரிரு முறை ஆஜராகாமல் போனபோது, உடனடியாக அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்துவிடுவேன் என்று சாட்டையை எடுத்தார். இதனால், அனைத்துக் கட்டங்களையும் தாண்டி, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, இந்த வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி ஷாகித் உஸ்மான் பால்வா, கலைஞர் டி.வி. சரத் ரெட்டி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். ‘உடல்நலம் சரியில்லை’ எனச் சொல்லி ஆ.ராசா அப்போது ஆஜராகவில்லை. அன்றைய தினம், நீதிபதி ஓ.பி.சைனி, ‘எப்போது உங்கள் இறுதிவாதத்தை முடிப்பீர்கள்?’ என்று சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவருக்கு பொறி வைத்தார். நீதிபதி சைனியின் கேள்விக்குப் யோசிக்காமல் பதில் சொன்ன வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘இந்த மாத இறுதிக்குள் என்னுடைய வாதத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்றார். ஆனால், அவரால் சொன்னபடி முடிக்க முடியவில்லை.

காரணம் இதற்கிடையில், கனிமொழி உச்ச நீதிமன்றத்தை அணுகி, தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ‘2ஜி வழக்கில், என்னைச் சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ சேர்த்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மீது உறுதியான சந்தேகம் இருந்தால், மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒரு துளி அளவு தவறு செய்ததற்கான ஆதாரம்கூட இல்லை. எனவே, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதேபோன்ற மனுவை ஷாகித் உஸ்மான் பால்வாவும் தாக்கல் செய்திருந்தார். அங்கு, ‘ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் கனிமொழி இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்’ என சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார். ‘சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இரு தரப்பு சாட்சி விசாரணை முடிந்துவிட்டது. இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் அதை முடிக்க சி.பி.ஐ சார்பில் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில், இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என்று வாதிட்டு வெற்றி பெற்றார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி, ரோஹிண்டர் நார்மன் ஆகியோர், ‘வழக்கில் தீர்ப்பு வரும் காலம் நெருங்கிவிட்டது. இந்த நிலையில், இதில் எந்தவிதமான இடைக்கால உத்தரவோ, விடுதலையோ அளிக்க முடியாது. கனிமொழி, ஷாகித் உஸ்மான் பால்வா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு, இதில் தொடர்புடையவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற உத்தரவையும் பிறப்பிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். அதன்பிறகு தினந்தோறும் ஆனந்த் குரோவர் தன்னுடைய வாதங்களை சி.பி.ஐ நீதிமன்றத்தில், அடுக்கிக்கொண்டே வந்தார். அதில் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குக்குத் தொடர்​புடைய பிற வழக்குகளில் அளிக்கப்பட்ட உத்தரவுகளை அவர் மேற்கோள்காட்டினார்.  அத்துடன், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது’, கட்-ஆஃப்’ தேதி ஆகியவற்றில் மாற்றம் செய்ததுடன், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கையும் தவறாக வழிநடத்தியதாக ஆனந்த் குரோவர் குற்றம்​சாட்டினார். அத்துடன், இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பு இறுதிவாதத்தை முடித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அதைப் பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி ஷைனி, “சி.பி.ஐ வாதங்கள் நிறைவு அடைந்துள்ளதால் வழக்கில் குற்றம்சாட்டப்​பட்டோர் தரப்பு இறுதிவாதங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

 இதேபோல, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்​துள்ள வழக்கின் இறுதி வாதத்தையும், அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முன்வைக்கவும் அனுமதி அளித்து சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

டெல்லியில் தீர்ப்பு வருவதற்கும் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கும் சரியாக இருக்கும். இது தி.மு.க-வை பெரும் சிக்கலில் கொண்டுபோய்விடலாம்! 

- ஜோ.ஸ்டாலின்


சி.பி.ஐ-யின் மனு தள்ளுபடி!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்​பட்டோருக்கு எதிராகக் கூடுதல் ஆவணங்​களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரி சி.பி.ஐ, கடந்த ஜூலை 14-ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதை செவ்வாய்க்​கிழமை பரிசீலித்த சிறப்பு நீதிபதி சைனி, “வழக்கின் கடைசிக் கட்டத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் தெளிவில்லாமலும், முரண்பட்டவையாகவும் உள்ளன. இதைச் சரிபார்க்க வேண்டுமானால், கால அவகாசம் தேவைப்படும். அது வழக்கைத் தாமதப்படுத்தும். எனவே, சி.பி.ஐ-யின் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று சொல்லியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick