அலங்காநல்லூரில் அரசியல் ஜல்லிக்கட்டு!

ஜெயிக்கப்போவது யாரு?

ல்லிக்கட்டில்கூட இவ்வளவு விறுவிறுப்பைப் பார்த்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டை வைத்து தலைவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளால் தமிழக அரசியலில் புழுதிப் பறக்கிறது.

உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தமுடியாத நிலையில், இந்த வருட பொங்கலுக்காவது நடத்த முடியுமா என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சிறப்பு அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்​கட்டை நடத்துவதற்கான அதிகாரம் மத்திய பி.ஜே.பி அரசின் கையில் உள்ள சூழலில், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் பெரும் மர்மமாக உள்ளது. இந்த நிலையில், பி.ஜே.பி தலைவர்கள் அவ்வப்போது விடும் அறிக்கைகளைப் பார்க்கும்போது சில விதிகளை மட்டும் விதித்து, ஜல்லிக்கட்டை அனுமதித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வர உள்ளதால், ஜல்லிக்கட்டு அனுமதி தங்கள் கட்சிக்கு வாக்குகளை அள்ளித்தரும் என்று எல்லாக் கட்சிகளும் கணக்குப் போடுகின்றன.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தினம் ஒரு கட்சியும், அமைப்பு​களும் போராட்டங்களை நடத்திவருகின்றன. அலங்காநல்லூரில் ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று தி.மு.க அறிவிக்க, பரபரப்புத் தொற்றிக்கொண்டது. விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடத்த தே.மு.தி.க திட்டம் தீட்டி வருகிறது. பா.ம.க. ராமதாஸ் அறிக்கை விட்டுவருகிறார்.

தி.மு.க நடத்தவுள்ள உண்ணாவிரதத்துக்கு போலீஸ் இன்னும் அனுமதி வழங்காத நிலையில், நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமென்று அ.தி.மு.க-வினர் கடந்த 21-ம் தேதி பாலமேட்டில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். ‘‘போராட்டம் நடத்த வேண்டாம், கோயிலில் பூஜை நடத்தி நம் உணர்வைக் காட்டுவோம் என்று மக்களை சமாதானப் படுத்துங்கள்’’ என்று புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, சோழ​வந்தான் எம்.எல்.ஏ கருப்பையாவிடம் சொல்லி, மக்களின் போராட்டத்தைத் திசை திருப்பிவிட, போலீஸும் போராட்டக்காரர்களை மிரட்ட, போராட்டம் பூஜையாக மாறியது. 

பாலமேடு வாடிவாசலில் ஏழு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய ஏழு காளைகளை அழைத்து வந்து நிறுத்தினார்​கள். அதன்முன் யாகம் வளர்த்து மூன்று புரோகிதர்கள் சிறப்பு யாகமும் கோ பூஜையும்  செய்தனர். அதன்பின் பெண்கள், பொங்கல் வைத்து வணங்​கினர். தி.மு.க ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை போடப்​பட்டது. அதனால், அவர்கள் உண்ணா​விரதம் நடத்த​விருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் தீர்மானம் போட்​டார்கள். இந்தக் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ-க்கள் கருப்பையா, முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர்.

இவர்களுக்குப் போட்டியாக திருமங்கலத்தில் தி.மு.க-வினர் ஆலோசனைக் கூட்டம் போட்டனர். அதில் பேசிய சேடப்பட்டி முத்தையா, ‘‘ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதையும், அதனால் மக்கள் எழுச்சி ஏற்படப்​போவதையும் நினைத்து அ.தி.மு.க-வினருக்குப் பொறுக்கவில்லை. அதனால், தி.மு.க பற்றி பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். தி.மு.க ஆட்சி​யில் ஜல்லிக்கட்டு நடந்தது, ஆனால், அ.தி.மு.க ஆட்சி​யில்​தான் கடந்த இரண்டு ஆண்டு​களாக ஜல்லிக்​​கட்டு நடக்க​வில்லை’’ என்றார்.

இதற்கிடையே, த.மா.கா. சார்பாக 22-ம் தேதி அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா, ‘‘ஜல்லிக்கட்டுத் தடையை நீக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்​களுக்குள் காளைகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
 

தமிழிசையோ, ‘‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு நல்ல முடிவெடுக்கும். அதேநேரம் அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இதை வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

‘‘காங்கிரஸ் மீது பழி போடாமல், தடை நீக்க பி.ஜே.பி முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார் இளங்கோவன். ‘‘காங்கிரஸ் ஆட்சிதான் ஜல்லிக்கட்டைத் தடை செய்தது, அதை நீக்க கூட்டணியில் இருந்த தி.மு.க எதுவுமே செய்யவில்லை’’ என்று கூறியுள்ள வைகோ, மக்கள் நலக் கூட்டணி சார்பாக அலங்காநல்லூரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆக, அனைத்துக் கட்சிகளும் அலங்காநல்​லூரில் ஆஜர். என்ன சொல்லப் போகிறது மத்திய அரசு?

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick