காங்கிரஸுக்கு சோதனைக் காலம்!

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியா, ராகுல் தப்புவார்களா?

காங்கிரஸ் கட்சிக்கு இதுவும் ஒரு சோதனையான காலம்தான். காங்கிரஸ் கட்சியின் ஆணிவேரை அசைக்கும் அளவுக்கு, அந்தக் கட்சியின் தலைமையை ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சிக்கவைத்துள்ளார், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால், ‘நேஷனல் ஹெரால்டு’ என்ற நாளிதழ் 1938-ல் தொடங்கப்பட்டது. அசோசியேட்டட் ஜெர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜெ.எல்.) என்ற நிறுவனம் இந்தப் பத்திரிகையை வெளியிட்டு வந்தது. ஹிந்தி, உருது உள்ளிட்ட மொழிகளில் டெல்லி, லக்னோ, மும்பை நகரங்களில் இருந்து இந்த நாளிதழ் வெளியாகி வந்தது. ஏ.ஜெ.எல் நிறுவனத்துக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் உள்ளன. நஷ்டம் ஏற்பட்டதால், 2008-ல் பத்திரிகை நின்றுபோனது. அப்போது, ஏ.ஜெ.எல் நிறுவனத்துக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. வட்டியில்லாக் கடனாக 90 கோடி ரூபாயை ஏ.ஜெ.எல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்தது. அதை வைத்து, அதில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் தொழிலாளர் களுக்கு கணக்கு முடிக்கப்பட்டது. 

2010-ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் ‘யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட்’ என்ற லாப நோக்கமின்றிச் செயல்படும் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ‘யங் இண்டியா’வில் 76 சதவிகிதப் பங்குகள் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் உள்ளன. ஏ.ஜி.எல் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட 90 கோடி ரூபாய் கடனைத் திரும்பப் பெற்றுத் தருமாறு ‘யங் இண்டியா’விடம் காங்கிரஸ் கோரியது. கடனைத் திருப்பிச் செலுத்தும் போர்வையில், ஏ.ஜெ.எல் நிறுவனம் சார்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் ‘யங் இண்டியா’வுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர், ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் 99 சதவிகிதப் பங்குகள், ‘யங் இண்டியா’வுக்கு மாற்றப்பட்டது. இதில்தான் வில்லங்கம். அதாவது, ஏ.ஜெ.எல் நிறுவனத்துக்கு 90 கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தப் பிறகுதான், ‘யங் இண்டியா’ நிறுவனம் தொடங்கப்பட்டது.

இளைஞர்கள் மத்தியில் மதச்சார்பற்ற மனப்பான்மை மற்றும் ஜனநாயகத்தை வளர்க்கும் நிறுவனம் என்று சொல்லித்தான் ‘யங் இண்டியா’ நிறுவனம் பதிவுசெய்யப் பட்டது. ஆனால், ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்களை வளைத்துப்போட காங்கிரஸ் கட்சியின் தலைமையும், அவருக்கு உறுதுணையாக மற்ற பங்குதாரர்களும் செயல்பட்டனர் என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டுகிறார். மேலும், ஹெரால்டு நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை வளைப்பதற்கு, ஐ.மு.கூட்டணி ஆட்சியில் ஏராளமான சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் குற்றம்சாட்டுகிறார் சுவாமி.

இந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டு உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆதரவாக மணி சங்கர் ஐயர், ப.சிதம்பரம் போன்றவர்கள் களமிறங்கியுள்ளனர். ‘‘ஏ.ஜே.எல் பங்குதாரர்கள் யாராவது வந்து புகார் சொன்னார்களா? இல்லை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது ‘யங் இண்டியா’ மோசடி செய்துவிட்டது என்று சொன்னார்களா? பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று இந்த நிறுவனத்தில் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? ஏ.ஜெ.எல் நிறுவனம், ‘யங் இண்டியா’ ஆகியவற்றின் சொத்துக்களும், நிதிகளும் அந்தந்த நிறுவனங்களிலேயே இருக்கின்றன. அவற்றை யாரும் வீட்டுக்குக் எடுத்துச் செல்லவில்லை” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
 
ஆனாலும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து, சோனியா உட்பட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றம் சென்றனர். அதையடுத்து, பாட்டியாலா நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், கடந்த டிசம்பர் 7-ம் தேதி சோனியா தரப்பின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றம் தனது இடைக்காலத் தடை உத்தரவையும் ரத்து செய்தது. மீண்டும் பாட்டியாலா கோர்ட் சோனியா உட்பட ஆறு பேருக்கு சம்மன் அனுப்பியது. அதில்தான் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கடந்த 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சபாநாயர் மீரா குமார், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் என காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகள் புடைசூழ சோனியாவும், ராகுலும் நீதிமன்றத்துக்கு வந்தனர். பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி லவ்லீன் சிங் முன்பு இந்த வழக்கு வந்தபோது பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டர், ஸ்கேனிங் மிஷின், மோப்ப நாய்கள் போன்ற பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது.

 “தற்போதைய சூழ்நிலையில், ஆதாரங்கள் இல்லாமல் இந்தக் குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கருத முடியாது” என்று சொல்லி சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். சுவாமி வேறு வழியில்லாமல், ‘‘ஜாமீன் கொடுப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், ஜாமீனை நிபந்தனையோடு கொடுக்க வேண்டும். அவர்கள் வெளிநாட்டுக்குப் போய்விடுவார்கள்” என்று கொஞ்சம் தமாஷாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவர்களுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ரமேஷ் குமார் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். கபில் சிபல் வாதாடும்போது, ‘‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்ணியமானவர்கள். சமூகத்தில் புகழ் பெற்றவர்கள்” என்று கூற, மாஜிஸ்திரேட் அதையே பதிவு செய்துகொண்டு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்குவதாகக் கூறினார்.

சோனியாவுக்கும், ராகுலுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது என்றாலும், அவர்கள் 2016-ல் சிறைக்குப் போவது உறுதி என்று சொல்லி வருகிறார் சுவாமி. இந்தச் சோதனையில் இருந்து காங்கிரஸ் தலைமை மீண்டுவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

- சரோஜ் கண்பத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick