‘‘தமிழக தகவல் ஆணையம்தான் இந்தியாவிலேயே மோசம்!’’

அரசியல்வாதிகள் பிடியில் சீரழியும் தகவல் அறியும் சட்டம்

லஞ்சம் ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெற கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன்படி, தகவல் கேட்டுக் கிடைக்காவிட்டால் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். தகவல் தரவில்லை என்றால், இந்த ஆணையத்தின் மூலம் அதிகபட்சமாக 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் வந்தபோது நாடே கொண்டாடியது.

மத்தியிலும் பிற மாநிலங்களிலும் தகவல் ஆணையங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க... தமிழகத்தில் மட்டும் அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஸ்ரீபதியின் அதிரடிகள் பற்றி ஜூ.வி-யில் தொடர்ந்து எழுதியிருக்கிறோம். இந்த பதி இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். ஏற்கெனவே ஆணையர்கள் பற்றாக்குறை இருந்த நிலையில் ஸ்ரீபதியின் பதவியும் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் காலியாகி இருக்கிறது. லட்சக்கணக்கில் மனுக்கள் தேங்கியிருக்கும் நிலையில் ஆணையர்கள் பற்றாக்குறையால் அல்லாடிக் கொண்டிருக்கிறது தகவல் ஆணையம்.

ஒரு தலைமை தகவல் ஆணையரும் 10-க்கும் மேற்படாத வகையில் ஆணையர்களையும் நியமிக்கலாம் என தகவல் அறியும் சட்டம் சொல்கிறது. ஆனால், இப்போது கிறிஸ்டோபர் நெல்சன், நீலாம்பிகை, தமிழ்ச்செல்வன், அக்பர் ஆகிய நான்கு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள். அதன் பிறகு ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை. ‘ஆணையர்களை நியமிக்க வேண்டும்’ என தகவல் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் நிலையிலும் செவிடன் காதில் ஊதிய சங்காக அமைதியாக இருக்கிறது.

செயல்படாத தகவல் ஆணையத்துக்கு எதிராகப் பலவிதமான போராட்டங்கள் நடந்தன. சங்கு ஊதும், பாய் விரித்து தூங்கும், பூட்டு போடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது ‘சட்டப் பஞ்சாயத்து இயக்கம்’. அதன் தலைவர் சிவ.இளங்கோ, பதியின் முன்பு உட்கார்ந்து பேசிய விவகாரத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டார். இளங்கோ என்ன சொல்கிறார்.

‘‘உயர் நீதிமன்றத்தில் கோர்ட் ஹாலிலேயே சைலன்ட் மோடில் போட்டுதான் செல்போன்கள் எடுத்து செல்லப்படுகின்றன. நீதிமன்ற விசாரணையை மற்றவர்கள் பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஆணையத்தில் செல்போன்கள் கொண்டு வரக்கூடாது, விசாரணையை மற்றவர்கள் பார்க்க முடியாது என சட்டத்திலேயே இல்லாத விஷயங்களைச் சொல்லி அதிகாரம் செலுத்துகிறார்கள். விசாரணை ஒன்றுக்காக ஆணையத்துக்குப் போனபோது கிறிஸ்டோபர் நெல்சன், ‘செல்போன்களை ஆஃப் செய்ய வேண்டும்’ என்றார். ‘அப்படி ரூல்ஸ் இருக்கா? இருந்தால் காட்டுங்கள்’ என்றேன். ‘அதை எல்லாம் காட்ட முடியாது’ என்றார். ‘செல்போன் கொண்டு வந்தால் உங்களுக்கு பயமா? உள்ளே நடப்பதை யாராவது படம்பிடித்துவிடுவார்கள் என அச்சம்தானே காரணம்’ என சொன்னபோது ‘பிரச்னை செய்கிறார்கள்’ என எங்கள் மீது போலீஸில் புகார் கொடுத்தார். கருணாநிதியை நள்ளிரவு கைது செய்ததற்காக கிறிஸ்டோபர் நெல்சனுக்கு கிடைத்த பரிசுதான் தகவல் ஆணையர் பதவி. அதனால் விசுவாசத்தை ஆட்சியாளர்களுக்குக் காட்டி வருகிறார்.

12-ம் வகுப்பு புத்தகத்தில் தைராய்டு சம்பந்தமான பாடத்தில் தவறு இருப்பதாகச் சொல்லி விஜிலன்ஸில் பணியாற்றிய டாக்டர் கோவிந்தன், தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கேட்டார். தகவல் தராததால் ஆணையத்தில் முறையிட்டார். ‘வயதான காலத்துல உனக்கு எதுக்கு இந்த வேலை... டாக்டரா இருக்கேனு பாக்குறோம்.. இல்ல நடப்பதே வேற..’ என கோவிந்தனை ஆணையர் ஒருவர் மிரட்டினார். படித்த அந்த டாக்டரே பயந்து போனார் என்றால், மற்றவர்களின் நிலையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் கூட்டுறவு தொடர்பாகத் தகவல் கேட்டு, தரப்படவில்லை. ஆணையத்தில் முறையிட்டார். செலவு செய்து கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். ஆணையர் நீலாம்பிகையோ, ‘கூட்டுறவு தகவல், ஆணையத்தில் வரம்புக்குள் வராது’ என உத்தரவு போட்டார். தகவல் கேட்டவர், ‘பொதுத் தகவல் அதிகாரி இதை கன்னியாகுமரியிலேயே சொல்லியிருந்தால் எனக்கு செலவும் நேரமும் மிச்சமாகியிருக்குமே’ என நீலாம்பிகையைப் பார்த்துக் கேட்டபோது, ‘இங்கே கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது’ என அதட்டினார்.

இன்னொரு ஆணையர், பொதுத் தகவல் அதிகாரியான தாசில்தாரை மிரட்டி, ‘உன் மீது அபராதம் போடாமல் இருக்க என் வீட்டுக்கு ஒரு லோடு ஜல்லியும் ஒரு லோடு செங்கல்லும் அனுப்பி வைக்க வேண்டும்’ என்றார். இப்படி மிரட்டல் விடுப்பவர்கள்தான் ஆணையத்தில் இருக்கிறார்கள். இங்கு பதவியில் இருப்பவர்கள் மக்களை அடிமைகளாகவும் தங்களை மன்னர்களாகவும் நினைத்து நடந்துகொள்கிறார்கள். சட்டத்தை மக்களுக்கு கொண்டு போக நினைப்பவர்களை ஆணையர்களாக நியமிக்க வேண்டும். தகவல் அறியும் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், பத்திரிகையாளர்களை ஆணையராக நியமிக்கலாம் என சட்டம் சொல்கிறது. அதன்படி அவர்களை நியமிக்க வேண்டும்’’ என்றார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினருக்கும் கிறிஸ்டோபர் நெல்சனுக்கும் இடையே நடந்த பிரச்னையை செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார் ஜெயேந்திரரை கைதுசெய்த  எஸ்.பி. பிரேம்குமாரின் மகன். அந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இப்படி நிறைய வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியானதால் அரண்டு போன ஆணையம், செல்போனுக்குத் தடை போட்டதாம்.

சமூக ஆர்வலரான சைலேஷ் காந்தி மத்திய தகவல் ஆணையராக இருந்தபோது, ஆண்டுக்கு 5,000 மனுக்களை விசாரித்திருக்கிறார். அவரே ‘‘இந்தியாவிலேயே மோசமான ஆணையம் தமிழ்நாடு தகவல் ஆணையம்தான்’’ என சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். ஆணையர்களை நீக்கும் அதிகாரம் கவர்னருக்குத்தான் உண்டு. தவறாக செயல்பட்ட தகவல் ஆணையர் நடராஜனை கேரளா கவர்னர் நீக்கியிருக்கிறார். அதுபோல முன்மாதிரி  இங்கே இல்லை. ஆனால், தமிழகத்தில் அரசியல் புகுந்துவிட்டதால் நடவடிக்கைகள் பாயவில்லை. அரசுக்கு எதிரான தகவல்கள் போய்விடக் கூடாது என்பதற்காக ஆணையர்கள் நியமனம் அரசியல் பின்னணியோடு போடப்படுகிறது. அதனால், அவர்களைக் காப்பாற்றும் வேலையை அரசு செய்கிறது. 

தகவல் அறியும் போராளியான கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஆணையங்கள் முடங்கிப்போனதுக்குக் காரணமே அரசியல்தான். அபராதம் விதிக்கும் ஆணையம் அதை செய்யாமல் அதிகாரிகளை காப்பாற்றி வருகிறது. வெளி வாகனங்களை ஆணையத்தின் உள்ளே நிறுத்த அனுமதி இல்லை. ஆணையர்கள் சிவப்பு விளக்கு கார்களை பயன்படுத்துவதற்கு தடை போட்ட பின்பும், சிவப்பு விளக்கு சுழலுமும் காரில்தான் வலம் வருகிறார்கள். விசாரணைக்காக வெளியூரில் இருந்து செலவு செய்து வருவதைத் தடுக்க வீடியோ கான்ஃபரன்ஸிங் முறை மற்ற மாநிலங்களில் உண்டு. ஆனால் இங்கே டூர் போவதற்காக அதை செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இப்படி நிறைய குளறுபடிகள் அங்கே இருக்கின்றன.’’ என்கிறார்.

ஆணையர் போஸ்ட்டிங் வாங்கிவிட வேண்டும் என கரைவேட்டிகள் கார்டனில் அப்ளிகேஷன் போட்டுக் காத்திருக்கிறார்கள். அவர்கள் நியமிக்கப்பட்டால்..?

மீண்டும் முதலில் இருந்துதான்!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick