கரு முட்டைகள் விற்பனைக்கு... | Illegal Embryo Business, child kidnap - Salem Rapi Stanley. | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2015)

கரு முட்டைகள் விற்பனைக்கு...

தற்றத்துடன் நம் அலுவலகத்துக்கு வந்தார் 50-களைக் கடந்த ஒருவர். ‘‘சார் குழந்தைகளைக் கடத்துற கும்பலைச் சேர்ந்த ரபி ஸ்டான்லி என்பவர் என்னோட பொண்ணு சுகந்தியை கடத்திட்டுப் போயிட்டாரு!’’ என்று கதறினார்.

அவரை உட்காரவைத்து ஆசுவாசப்படுத்திப் பேசினோம். ‘‘என்னோட பேரு ராமசாமி. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்துல இருக்கும் நரசிங்கபுரம்தான் என்னோட ஊரு. என் மகள் சுகந்திக்கு 65 பவுன் போட்டு, 2 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்து நாகராஜ் என்ற வக்கீலுக்குத் திருமணம் செய்து வைத்தேன். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் என் மகள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். நர்ஸ் கோர்ஸ் முடித்திருந்ததால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குப் போனாள். அங்கு ரபி ஸ்டான்லி என்பவன் அவளுக்குப் பழக்கமாகியுள்ளான்.

ஒருநாள் ரபி ஸ்டான்லி, எங்கள் வீட்டுக்கு வந்து, ‘நாம் அனைவரும் சேர்ந்து உங்கள் வீட்டில் விவேக தீபம் கம்யூனிட்டி காலேஜ் தொடங்கி, மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி, செவிலியர் பயிற்சி, டீச்சர் டிரெயினிங் போன்ற வகுப்புகள் நடத்தலாம். அரசிடம் அனுமதி பெற்றால் போதும். மாதா மாதம் நமக்கு பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டும்’ என்றான்.

என்னிடம் 1 1/2 லட்சம் வாங்கிட்டுப் போய், என் பேரில் விசிட்டிங் கார்ட் அடித்துக்கொடுத்தான். அதில் கல்லூரி சேர்மன் டாக்டர்.ராமசாமி என்று எழுதி இருந்தது. ‘ஏப்பா நான் மூணாங் கிளாஸ்கூட படிக்கல... என்னை டாக்டர்ன்னு போட்டிருக்கிறாயே’ என்றேன். ‘ஜெயலலிதா, கலைஞர், விஜயகாந்த் டாக்டருக்கா படிச்சாங்க? அவுங்க டாக்டருன்னு போட்டுக் கொள்வதில்லையா? இது நான் உங்களுக்குக் கொடுத்திருக்கும் டாக்டர் பட்டம்’ என்றான்.

எங்கள் வீட்டு மாடியில் வகுப்பறை கட்டுவதற்கு 5 லட்சம், வாகனம் வாங்க 2 லட்சம் என செலவு செய்தேன். வீட்டில் 20, 25 பிள்ளைகள் படித்தார்கள். நரசிங்கபுரத்தில் 6-வது 7-வது படித்த ஆட்டோ டிரைவர்களுக்கு 10-வது பாஸ் என்று சர்டிஃபிகேட் வாங்கித் தருவதாகச் சொல்லி ஒவ்வொருவரிடமும், 20 ஆயிரம், 30 ஆயிரம் பணம் வாங்கிட்டு சர்டிஃபிகேட் கொடுத்தான். அதை ஆத்தூர் ஆர்.டி.ஓ-விடம் கொடுத்து பேஜ் போடும்போது இந்த சர்டிஃபிகேட் செல்லாது எனச் சொல்லிட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக இவனைப் பற்றித் தெரிந்தது. என் வீட்டிலேயே பச்சிளம் குழந்தைகளை பேரம் பேசி விற்பனை செய்தான். இதையெல்லாம் கண்டித்ததால் என் பெண்ணைக் கூட்டிட்டு போயிட்டான். தற்போது எங்கு வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை. இவன் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 2014 நவம்பரில் ஒரு எயிட்ஸ் குழந்தையை கைமாற்றி விற்பனை செய்த வழக்கு இருக்கிறது’’ என்று படபடத்தார்.

ரபி ஸ்டான்லிக்கு குழந்தைகளை விற்பனை செய்தவர் என்று ராமசாமி அடையாளம் காட்டுவது திருச்செங்கோடு ஐந்துபனையைச் சேர்ந்த ராஜேஸ்வரியை. அவரைத் தேடிப்போனோம். ‘‘ஆமாம் சார். நாங்கதான் அவரிடம் குழந்தையைக் கொடுத்தோம். என் தொழில் கருமுட்டை விற்பனை செய்வது. 3 மாதங்களுக்கு ஒருமுறை எங்க உடம்பில் இருக்கும் கருமுட்டையைக் கொடுத்தால் பணம் கொடுப்பாங்க. ஈரோட்டில் 10 ஆயிரம் கொடுப்பாங்க. அதுவே மதுரை, திருச்சி, தேனி, வேலூர், கோவை, சென்னைன்னு சென்றால் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கொடுக்கிறாங்க. பெங்களூரு, கேரளா போனால் 40 ஆயிரம் கொடுக்கிறாங்க.

குமாரபாளையத்தைச் சேர்ந்த தேன்மொழிதான் ரபி ஸ்டான்லியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஏதாவது குழந்தை கிடைத்தால் இவரிடம் கொடு என்றாள். அந்த நேரம் பார்த்து ஈரோட்டில் ஒரு நர்ஸ் மூலமாக ஒரு தம்பதி குழந்தையை விற்க தயாராக இருப்பதாக சொன்னாங்க. அவர்களிடம் குழந்தையை வாங்கி ரபி ஸ்டான்லியிடம் கொடுத்தோம். அவர் எங்களுக்கு 80 ஆயிரம் கொடுத்தார். நாங்க 10 ஆயிரம் எடுத்துக்கொண்டு குழந்தையின் பெற்றோர்களிடம் 70 ஆயிரம் கொடுத்துவிட்டோம்.

பிறகு ரபி ஸ்டான்லி அந்த குழந்தையை வேறு ஒருவருக்கு கைமாற்றி கொடுத்திருக்கிறார். அந்தக் குழந்தையை வாங்கியவர்கள் குழந்தையை டெஸ்ட் பண்ணி பார்க்கும்போது குழந்தைக்கு எயிட்ஸ் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு என் புருஷன் மஞ்சுநாத்தை ரபி ஸ்டான்லி ஆட்கள் சேலத்துக்குத் தூக்கிட்டு போய் அடித்து சித்ரவதை செய்துவிட்டார்கள். மற்றபடி ரபி ஸ்டான்லியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குமாரபாளையத்தில் உள்ள தேன்மொழியைத்தான் நீங்கள் பார்க்கணும்’’ என்று சொன்னார் ராஜேஸ்வரி.

குமாரபாளையத்தில் உள்ள தேன்மொழி வீட்டைக் கண்டுபிடித்து அவரிடம் இதுபற்றி கேட்டோம். ‘‘எனக்கு 15 வயசுலேயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். எனக்கு 28 வயது இருக்கும்போது எம் புருஷன் இறந்துட்டார். என் குழந்தைகளை வளர்க்க நான் கற்றுக்கொண்ட தொழில்தான் கருமுட்டை விற்பனை. 12 முறைக்கு மேல் கருமுட்டை கொடுத்திருக்கிறேன். இதனால் தற்போது கருப்பை புற்றுநோய் வந்துடுச்சு. கிட்னியும் சொந்தக்காரங்க கேட்டாங்கன்னு கொடுத்துட்டேன். இப்ப வேலை வெட்டிக்கும் போக முடியல. எனக்கு  37 வயசுதான் ஆகுது. ஆனால் 55 வயசு கிழவி மாதிரி இருக்கேன். சாப்பாட்டுக்கே வழி இல்ல.
நான் கருமுட்டை கொடுக்க கோயம்புத்தூர் போனபோது ஒரு பொம்பளை, ரபி ஸ்டான்லியை எனக்கு அறிமுகம் செய்து வெச்சது. அவன் ரொம்ப வில்லங்கமான ஆளு. என் மூலமாகத்தான் ராஜேஸ்வரி ஒரு குழந்தையை ரபி ஸ்டான்லிக்கு கொடுத்தாங்க. அது எயிட்ஸ் குழந்தை என்று பிரச்னை வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதில் இருந்து  அவனிடம் எந்தத் தொடர்பும் இல்லை. இது எல்லாத்தையும் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறேன்’’ என்று நிதானமாகச் சொன்னார்.

 ரபி ஸ்டான்லியை சந்தித்து அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டோம். ‘‘நாங்க இந்தப் பகுதியில 35 வருடங்களாக சர்ச் நடத்திட்டு இருக்கோம். இந்த ஆலயத்தின் ஓர் அங்கம்தான் விவேக தீபம் கம்யூனிட்டி காலேஜ் என்ற தொண்டு நிறுவனம். இதில் 650 உறுப்பினர்கள் இருக்காங்க. இதன் மூலமாக எஸ்.சி.,

எஸ்.டி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வியைத் தொடர உதவிசெய்து வருவதோடு அவர்களுக்கு நர்ஸ் ட்ரெயினிங் கொடுக்கிறோம். சுகந்தி என்பவர் ஆத்தூர் பகுதியின் திட்ட தலைவராகவும் செவிலியர் பயிற்சியாளராகவும் இருக்கிறார். சுகந்திக்கும் அவருடைய அப்பா ராமசாமிக்கும் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக எங்கள் மீது புகார் கூறி வருகிறார். குழந்தைகளைத் தத்துக்கொடுக்கும் அனுமதியைப் பெற்றிருந்தோம். அதன்படிதான் குழந்தை பெற்று வழங்குகிறோம்’’ என்றார்.

கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சுகந்தியையும் சந்தித்தோம். ‘‘என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பத்துடன்தான் வந்தேன். அந்த ஆளை அப்பான்னு சொல்லவே வெட்கமா இருக்கு. நான் சேவை செய்வதற்காகவே என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். விவேக தீபம் கல்லூரியில் ஏழை மலைவாழ் குழந்தைகளுக்்கு செவிலியர் பயிற்சி கொடுத்து சேவை செய்து வருகிறேன்” என்றார் நிதானமாக.
சேலம் மாவட்ட எஸ்.பி-யான சுப்புலட்சுமியை சந்தித்துக் கேட்டோம். இந்த வழக்கை விசாரிக்க எஸ்.ஐ. நிர்மலா தலைமையில் அமைக்கப்பட்ட டீமை நேரில் கூப்பிட்டு விசாரணை செய்தார். பிறகு நம்மிடம், ‘‘விசாரணை நடந்து வருகிறது. நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

குழந்தைகளும் கல்வியும் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி


‘சட்டப்படி தவறு!’

கருமுட்டை விற்பது தொடர்பாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் டி.காமராஜிடம் பேசினோம். ‘‘கருமுட்டையை பேரம் பேசி விற்பது என்பது சட்டப்படி தவறு. கருமுட்டையை கொடுப்பவர்கள் அதற்கான அமைப்பிடம் கொண்டுபோய் கொடுக்கலாம். ஆரோக்கியமான உடலைக் கொண்டிருக்கும் குழந்தை பெற்ற ஒருவர், இரண்டு, மூன்று முறை கருமுட்டையைத் தானமாகக் கொடுக்கலாம். சிலர் வருமானத்துக்காக பலமுறை கருமுட்டையை விற்பனை செய்கிறார்கள். அது உடலுக்கு ஆபத்தானது’’ என்றார்.

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close