“வராக நதி பேசுகிறேன்!”

ஒரு நதியின் மரணம்...

‘‘பஞ்சபூதங்களில் ‘நீர்’ முதலில் வருவதால் என்னவோ, என்னை முதலில் அழிக்கிறார்கள்போல... மரணம் என்பது சாவு அல்ல. வாழவிடாமல் தடுப்பதுகூட மரணம்தான். இங்கு இருந்த வராகம் (பன்றி) ஒன்று தன் குட்டிகளைக் காப்பாற்ற சிவனை வணங்கியதால், குட்டிகள் காப்பாற்றப்பட்டன. அதனால், எனக்கு ‘வராக நதி’ என்று பெயர் வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பேரிஜம் ஏரியில் இருந்து வற்றாத ஜீவநதியாக ஆரம்பித்து சோத்துப்பாறை வழியாக பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், மருகபட்டி, குள்ளபுரம் கண்மாய்களைத் தொட்டு, வைகையோடு கலந்து பிறகு கடலில் கலக்கிறேன். 50 கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் பயணித்து 200 ஏக்கருக்கும் அதிகமான பாசனப் பரப்புக்கு ஜீவாதாரமாக இருக்கிறேன். இதுதவிர, பல கிராமங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறேன்.

ராஜேந்திர சோழீஸ்வரன் கோயில் வழியாகத்தான் நான் போகிறேன். இங்கே வழிபடுகிறவர்களுக்கு பலன் கிடைப்பதால் காசிக்கு நிகராக நான் இருக்கிறேன். மிருகண்ட மகரிஷி வாழ்ந்த மிருக மலை (இன்று முருகமலை) பெரியகுளத்துக்கு வடக்கில் இருக்கு. அந்த மகரிஷி, இந்த நதியில் நீராடிவிட்டு கைலாசபட்டி கைலாசநாதரை பூஜிப்பார். என்னோட நதிக்கரையில் வெற்றிலை, நெல், தென்னை, மா-ன்னு முப்போகமும் விளைந்தன. மக்களின் வாழ்வாதாரம் என்று சொல்வதைவிட அவர்களுடைய வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தேன். இது எல்லாம் கடந்த கால வரலாறு. சோத்துப்பாறை அணை கட்டியதற்கு பிறகு தண்ணீரைத் திருப்பிவிட்டதால் ‘நதி’ என்கிற அடையாளத்தைத் தொலைத்து ‘சாக்கடை’ என்கிற பெயரைத் தாங்கி நிற்கிறேன். விவசாயமே தொலைந்து போனதால் பஞ்சம் பிழைக்க திருப்பூர் பக்கம் மக்கள் போய்விட்டார்கள். எந்த மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தேனோ அவர்களின் வாழ்க்கையே என்னால் சூனியமாக்கப்பட்டுவிட்டது. மணல் திருடப்பட்டு நதி என்கிற பொலிவை இழந்து நின்ற போது பாதாளச் சாக்கடையையும் என் மேல் திருப்பி என் அழகை சூறையாடிவிட்டார்கள். இன்றைக்கு யாருமே பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுபட்டு போய்விட்டேன்.

மனிதர்கள் ஒரு பக்கம் குப்பைகள் கொட்டுவது போதாது என்று எல்லா அரசியல் தலைவர்களும் கூட்டத்தைக்கூட்டி அவர்களின் பேச்சுகளையும் என் மேல் கொட்டிவிட்டுப் போகிறார்கள். கல்லாறு, பாம்பாறும் என்னுடன்தான் கலக்கிறது. பாம்பாற்றின் பாலத்தையும் என் நதிக்கு மேல் இருக்கும் பாலத்தையும் கர்னல் பென்னிகுக்தான் கட்டினார். ஆனால், இப்போது அதுவும் இல்லை. பென்னிகுக்குக்கு மணிமண்டபம் கட்டிய முதல்வர் கருணை காட்டுவாரா எனக் காத்திருக்கிறேன். காயப்படுத்தப் போகிறீர்களா? காவியம் படைக்க போகிறீர்களா?’’

- ச.மோகனப்பிரியா
படம் - வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick